Saturday, 26 March 2016

BATMAN v SUPERMAN : DAWN OF JUSTICE – சினிமா விமர்சனம்

ஒவ்வொரு வருடமும் ரிலிசாகும் படங்களில் கண்டிப்பாக இந்த இந்த படங்களுக்கெல்லாம் தியேட்டருக்குச் சென்றே ஆகவேண்டும் என்ற ஒரு லிஸ்ட் நம்மிடம் இருக்கும்; நானும் அம்மாதிரியே தான் இருந்தேன். ஆனால் இந்த ஆண்டு, ஒரே ஒரு திரைப்படம் மட்டும் பார்க்கவே கூடாது என்று ஆண்டின் தொடக்கத்திலேயே முடிவெடுத்தது இத்திரைப்படத்திற்குத்தான். முக்கிய காரணம் கிறிஸ்டோபர் நோலன். பேட்மேன் எனும் சூப்பர்ஹீரோவை மக்கள் மத்தியில் ஒரு லெஜன்டாக உருவாக்கிவிட்டு அவர் சென்றார். பேட்மேனை ரீபூட் செய்த மாதிரி சூப்பர்மேனையும் ரீபூட் செய்தால் நன்கு கல்லா கட்டிவிடலாம் என்று நினைத்த வார்னர் பிரதர்ஸ் அதையும் சக்ஸசாக நிறைவேற்றியது. சூப்பர் மேனின் ரீபூட் வெர்சனனான மேன் ஆஃப் ஸ்டீல் 2013-ல் வெளிவந்து சூப்பர்மேனுக்கு உயிர்கொடுத்தது. சூப்பர்மேனின் இரண்டாம் பாகத்திற்காக வார்னர் பிரதர்ஸ் செய்த கொடுமை தான் இந்த படம்.

முதலில் இந்த திரைப்படத்தைப் பார்க்கும்முன் அவசியம் பார்க்கவேண்டிய இரண்டு திரைப்படங்களை இங்கு கூறிவிடுகிறேன். ஸ்னைடர் இயக்கத்தில்  2013-ல் வெளிவந்த மேன் ஆஃப் ஸ்டீல் மற்றும் ஜேய் ஓலிவா இயக்கத்தில் 2001-ல் வெளிவந்த அனிமேசன் திரைப்படமான த டார்க் நைட் ரிட்டர்ன்சின் இருபாகங்கள். இவ்விரண்டு திரைப்படங்கள் மட்டுமில்லாமல் வொன்டர் வுமனைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்துகொள்வது நல்லது. முடிந்தால் ஃப்ராங் மில்லரின் சூப்பர்மேன் & பேட்மேன் காமிக்ஸ் வரிசைகளையும் ஆக்சன் காமி்க்ஸ்களில் வந்த வில்லன் லெக்ஸ் லூதரின் கதைகளையும் படித்துவிட்டால் இன்னும் சிறப்பு. என்னடா ஒரு படத்தைப் பார்க்க இவ்வளவு ஹோம்வொர்க் செய்யவேண்டுமா என நீங்கள் கேட்பது புரிகிறது. இவற்றையெல்லாம் தெரிந்துகொள்ளாமல் இப்படத்தைப் பார்த்தால், திரையரங்கில் நீங்கள் தூங்கிவழியும் அபாயம் அதிகமாக இருப்பதால் வேறுவழியின்றி நானும் உங்களுக்கு பரிந்துரைக்க வேண்டியுள்ளது.  

இதற்கான காரணம் வார்னர் பிரதர்ஸின் சரியான திட்டமின்மையே. மார்வெல் தனது அவெஞ்சரை வெளியிடுமுன் அவெஞ்சர்களில் உள்ள ஒவ்வொரு ஹீரோவுக்கும் ஒரு திரைப்படத்தை முன்பே கொடுத்துவிட்டு, அவர்களைப் பற்றிய அறிமுகத்தைத் தந்த பின் தனது அவெஞ்சரை வெளியிட்டது. ஆனால் டி.சி. காமிக்ஸின் சில கேரக்டர்களை ஒருங்கிணைத்து எடுக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படமானது அந்த கேரக்டர்களைப் பற்றிய எந்தவொரு அறிமுகத்தையும் நமக்குத்தராமல் இனிமேல்தான் அவர்களின் இன்ட்ரோ என்று கிளைமேக்சில் கூறி நம்மை பெரிதளவாய் ஏமாற்றிவிட்டது. காமிக்ஸ் அனுபவமற்றவர்களுக்கு அக்குவாமேன், தன்டர்ஸ்ட்ரோம் போன்ற டி.சியின் மியூட்டன்ட் ஹீரோக்களைப்பற்றி அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகளே இல்லை. இவ்வளவு ஏன்? சூப்பர்ஹீரோ படங்களை தொடர்ந்து பார்த்துவரும் நானே இத்திரைப்படத்தில் வொன்டர்வுமனைத் தவிர ஒருசில செகன்ட் வரும் மற்ற ஹீரோக்களை கண்டுபிடிப்பதற்குள் போதும்போதுமென ஆகிவிட்டது. இதன் அடுத்த பாகமான ஜஸ்டிஸ் லீக்கில் அனைத்து சூப்பர்ஹீரோக்களும் இணையப்போகிறார்கள். அந்த படமானது ஒரு அறிமுகப்படலமாக இருக்கும்பட்சத்தில் அவெஞ்சர் முதல்பாகத்தின் முதல்பாதி போன்ற சோர்வினைத்தான் தரும். வொன்டர்வுமன் திரைப்படம் 2017-ல் வெளிவரும்பட்சத்தில் அதிலேயே மற்ற ஹீரோக்களின் அறிமுகத்தை எதிர்பார்க்கலாம். ஆனால் முதலில் வொன்டர்வுமன் திரைப்படம் வந்திருந்தால் இத்திரைப்படமானது பார்க்கும்போது வேறொரு உணர்வைத் தந்திருக்கும் வாய்ப்புகள் அதிகம்.

சரி, புரியாத பாஷையில் ஏதேதோ சொல்லி வெறுப்பேத்தாமல் திரைப்படத்திற்கு செல்லலாம். வியாழன் அன்றே இத்திரைப்படத்தைப் பார்த்துவந்த ஆரூர்மூனா செந்தில் அண்ணன், படம் ஒன்றும் புரியவில்லை, மொக்கையாக போகிறது என்றார். அதையும் தாண்டி திரைப்படத்திற்கு திரையரங்கிற்கு சென்றபோது பார்த்துவிட்ட ஒவ்வொருவரும் தியேட்டரை விட்டு வெளியில் வரும்போதே கொட்டாவியுடன் வந்தார்கள். சரிதான் , வான்டேட்ட சைத்தானத் தூக்கி பைக்குள்ள போட்டுக்கினு தியேட்டருக்கு வந்துட்டோம்போலனு நினைத்துக்கொண்டே போனேன். 

படத்தைப்பார்க்கும்முன் முந்தைய பாகமான மேன் ஆஃப் ஸ்டீல்லை ஒருதபா, ஒருபத்தியில் பார்த்துவிடலாம். பூமியைவிட நாகரீகத்தில் முன்னேறிய கிரிப்டான் எனும் கிரகத்தில் வாழ்ந்துவரும் கிரிப்டானியர்கள் பார்ப்பதற்கு மனிதனைப் போன்ற தோற்றமுடையவர்கள். அவர்கள் வாழ்ந்துவரும் கிரிப்டான் கிரகம் அழிவின் விழிம்பில் உள்ளது. அக்கிரகத்தின் ராணுவஜெனரலான ஸாட் (ZOD) , தன் கிரகத்தைக் காப்பாற்ற ஒருவழி யோசிக்கிறார். கிரிப்டானியர்களுக்கு இயற்கையாக புணர்ந்து குழந்தைப்பெற்றுக்கொள்ளும் தகுதி கிடையாது. அவர்கள் குழந்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுமெனில் கவுன்சிலை அணுகி அப்ரூவல் வாங்கி, தனக்கு எப்படிப்பட்ட மகன் வேண்டும் என்று முன்பே சொல்லிவிட்டால் கோடெக்ஸ் எனும் டெக்னாலஜியைப் பயன்படுத்தி குழந்தையை உருவாக்குவார்கள். ஜெனரல் ஸாட், அந்த கோடெக்சைக் கைப்பற்றி, அதைக்கொண்டு வேறொரு உலகில் கிரிப்டானை மீண்டும் உருவாக்கிவிடவேண்டும் என்று முனைகிறான். இதை எதிர்க்கும் சயின்டிஸ்ட்  கால், கோடெக்சை என்க்ரிப்ட் செய்து , இயற்கை முறையில் பிறந்த தன் மகனின் உடலில் செலுத்திவிடுகிறார். கிரிப்டானின் எதிர்காலம் இவன்தான் என்றென்னும் தன் குழந்தையை, கால்லும் அவர் மனைவி லாராவும் ஒரு ஸ்பேஷ் ஷிப்பில் வைத்து , வாழ்வதற்கு ஏற்ற உலகமான பூமிக்கு அனுப்பிவிடுகிறார்கள். கிரிப்டான் அழிகிறது; ஜெனரல் ஸாடும் அவனின் கூட்டாளிகளும் தண்டனை எனும் பெயரில் தப்பித்துவிடுகிறார்கள்.

பூமிக்கு வந்த அந்த குழந்தையை ஜொனதன் , மார்த்தா தம்பதியினர் எடுத்து கிளார்க் எனப்பெயரிட்டு வளர்க்கின்றனர். சிறுவயதுமுதலே கிளார்க்குக்கு ஏதோ அதீத சக்தி இருக்க, தன் தாயின் அரவணைப்பினால் அதைக்கட்டுப்படுத்துகிறான். வளர்ந்தபின் தன்னை உலகினுருப்பவர்களுக்கு இடையே மறைத்துக்கொள்கிறான். அப்படியான காலகட்டத்தில் அவனின் ஒரிஜினல் தந்தையான கால்-லின் நினைவுகளைச் சந்திக்கும் கிளார்க், தான் யாரென்று உணருகிறான். இன்னொருபுறம் ஜெனரல் ஸாட், கிளார்க்கின் உடலிலுள்ள கோடெக்ஸை அடைவதற்காக பூமிக்கு வருகிறான். ஜெனரல் ஸாட் பூமியை, கிரிப்டானாக மாற்றிவிடலாமென ஐடியா செய்ய, அதை சூப்பர்மேன் எப்படியெல்லாம் சண்டைபோட்டுத் தடுக்கிறார் என்பதனை கடைசி 43 நிமிடங்கள் கிராபிக்ஸ் கலக்கலாகக் காட்டியிருப்பார்கள். கடைசி 30 நிமிடத்தில் சண்டை எனும் பெயரில் ஒரு பெரிய (சிகாகோ - மெட்ரோபோலிஸ்) நகரத்தையே அழித்துவிடுகிறார்கள்; வில்லனும் அழிந்துவிடுகிறான்.


இப்போது இந்த பாகத்திற்கு வரலாம். படத்தில் வரும் கேரக்ட்ர்களுக்கு ஒரு இன்ட்ரோ கொடுத்துவிட்டு கதைக்குச் செல்லலாம்.

லக்ஸ் லூதர் – காமிக்ஸ் உலகின் 4வது மிகப்பெரிய வில்லன். இவன் ஒரு சைக்கோபாத். பேட்மேனுக்கு ஜோக்கர் எப்படியோ அப்படி சூப்பர்மேனுக்கு இவன். கோடிஸ்வரனான இவன் தன் லேப்பை வைத்து விதவிதமாக எதையாவது கண்டுபிடித்துக்கொண்டே இருப்பதுதான் வேலை.

ப்ரூஸ் வெய்ன் – மெட்ரோபோலிஸ் நகரின் அருகிலிருக்கும் கோதம் நகரின் மிகப்பெரிய கோடிஸ்வரர் ப்ரூஸ் வெய்ன். சிறுவயதில் ஒரு திருடனால் தன் தாய், தந்தையை இழந்துவிடும் சிறுவன் ப்ரூசுக்கு வௌவால்கள் உதவிசெய்கின்றன. தன் அறிவைக்கொண்டு கோதம் நகரின் குற்றங்களைத் பேட்மேன் எனும் பெயரில் இரவில் தடுத்துவந்த ப்ரூஸ் வெய்ன், பகல்நேரத்தில் ஒருகுடிகார  ப்ளேபாய் மில்லியனராக உலாவருகிறார். இப்படத்தின் கதைப்படி இப்போது ப்ரூசின் வயது 55. பேட்மேனின் விசுவாமான பட்லர் ஆல்ப்ரட். பேட்மேன் பற்றி மேலும் அறிந்துகொள்ள கீழே உள்ள 3 பதிவுகளைப் படியுங்கள்.


க்ளார்க் – ஜெனரல் ஸாடை அழித்தபின், சூப்பர்மேன் டெய்லி ஹன்ட் எனும் பத்திரிக்கையில் செய்தி சேகரிப்பாளராக இருக்கிறார்.  கோதம் நகரில் நடக்கும் குற்றங்களுக்கு பேட்மேன்தான் காரணம் என நம்பும் க்ளார்க், அதைத்தன் பத்திரிக்கையில் வெளிக்கொணர முயற்சிக்கிறான்.

லேன் – சூப்பர்மேன் என்கிற க்ளார்க்கின் உயிர்க்காதலி. உலகமே ஒருபுறம் அழிந்துகொண்டிருந்தாலும், லேனுக்கு ஒரு சிறுகாயம்கூட வராமல் காப்பாற்ற எங்கிருந்தாலும் வந்துவிடுவார் சூப்பர்மேன். (பழைய சூப்பர்மேன் திரைப்படத்தில் லேன் இறந்துவிட, அவளைக்காப்பாற்ற அவளைத்தூக்கிக்கொண்டு ரிவர்ஸில் பூமியைச்சுற்றி, காலத்தையே ரீவைன்ட் செய்துவிடுவார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் எவ்வளவு காதல் என்று).

டயானா – 5000 வருடங்களாக வாழ்ந்து வரும் அழிவில்லா பெண்; வொண்டர் உமனுக்கும் சூப்பர்மேன் போன்று பறக்கும் சக்தியோடு, கேடயம் மற்றும் கத்தியும் எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ். எப்போதெல்லாம் படுபயங்கர தீய சக்திகள் வெளிவருகிறதோ அப்போதெல்லாம் தன் சுயரூபத்தை வெளிப்படுத்தி காட்டு,காட்டென காட்டிவிட்டுச்செல்வார்.

இப்போது கதை என்னவென்றால், போனபாகத்தில் சூப்பர்மேன் செய்த சாகங்களால் அவருக்கு எந்தளவிற்கு ரசிகர்கள் உருவானார்களோ, அதே அளவுக்கு எதிர்ப்பாளர்களும் உருவானார்கள். அந்த எதிர்ப்பாளர்களில் மிகமுக்கியமான இருவர் லக்ஸ் லூதர் மற்றும் பேட்மேன். சூப்பர்மேன் மாதிரியான அதீதசக்தியுள்ளவர்களால் என்றும் பூமிக்கு பேராபத்துதான் என்பதை இருவரும் உணருகிறார்கள். லக்ஸ் லூதர், போன பாகத்தில் ஜெனரல் ஸாட் பூமியை அழிக்கப் பயன்படுத்திய கிரிப்டானிய உலோகங்களில் இருந்து ஒரு பவர்புல் ஆயுதத்தைச் செய்யமுயற்சிக்கிறான். ஆனால் அதை பேட்மேன் அவனிடமிருந்து ஆட்டையைப்போடுகிறார். அதனால் பேட்மேன்மீது செம காண்டில் இருக்கிறான் லக்ஸ் லூதர்.

எதிர்ப்பாளர்கள் ஒருபுறம்; ஆதரிப்பவர்கள் ஒருபுறம் என இருதலைக்கொள்ளியாய் இருக்கும் சூப்பர்மேனுக்கு கோதம்நகரில் பெருகிவரும் குற்றங்களுக்கெல்லாம் காரணம் பேட்மேன் தான் என நினைக்கிறான். பேட்மேனைச் சந்தித்து நீ செய்வது தவறு ; இனி திருத்திக்கொள் என மிரட்டிவிட்டு செல்கிறார். பேட்மேன் லக்ஸ் லூதரின் ஆயுதத்தைத் திருடும்முன் அவனைப்பற்றி உளவு பார்க்கச்செல்கிறார். அப்போது டயானா எனும் பெண்ணைப் பார்க்கிறார். உளவு பார்த்த இடத்திலிருந்து பேட்மேன் கண்டுபிடிப்பது, டயானா 1918-ல் தன் குழுவினருடன் போர்புரிவது போன்றதொரு புகைப்படம். மேலும் அதில் புதுப்புது சூப்பர்ஹீரோக்களைப் பற்றியும் அறிந்துகொள்கிறார்.

காண்டில் இருக்கும் லக்ஸ் லூதர், தனக்கு அல்வா கொடுத்த பேட்மேனைத் தீர்த்துக்கட்ட முடிவெடுக்கிறான். சூப்பர்மேனின் தாயைக்கடத்தி வைத்துக்கொண்டு, பேட்மேனைப்போட்டுத் தள்ளினால் உன் தாய் பிழைப்பாள் என மிரட்டுகிறான். இன்னொருபுறம் சூப்பர்மேனை அழிக்க ரெடியாகும் பேட்மேன், சூப்பர்மேனுக்கு அறைகூவல் கொடுக்கிறார். இதேநேரத்தில் ஆயுதம் கைவிட்டுப்போன லக்ஸ், முந்தைய பாகத்தில் மிச்சமான ஜெனரல் ஸாடின் உயிரற்ற பிரதேத்தைக்கொண்டு, கிரிப்டானிய விண்கலத்தின் அதீத சக்தியைவைத்து ஒரு புது உயிரினத்தை உருவாக்குகிறான். இத்தனைப் பிரச்சனைகளையும் சூப்பர்மேன் எதிர்கொள்ள, மீதி என்ன நடந்தது என்பதுதான் கடைசி அரைமணிநேரம். அதையும் சொல்லிவிடலாம்தான்; 400 மில்லியன் டாலருக்கும்மேல் செலவு செய்து எடுத்திருக்கிறார்கள் என்பதால் சொல்ல மனம்வரவில்லை.

உண்மையில் பேட்மேன் கேரக்டரை சர்வநாசம் செய்துவிடுவார்கள் என நினைத்தேன்; ஆனால் பரவாயில்லை. பேட்மேனை முடிந்தவரை சரியானபடியே உபயோக்கித்திருக்கிரார்கள். ஆனால் எந்நிலையிலும் யாரையும் கொல்லாத பேட்மேனே இத்திரைப்படத்தில் சிலரைக்கொல்வது போல் காட்டியதை மனம் ஒப்புக்கொள்ளவில்லை. என்னடா  பேட்மேன் , பேட்மேன் என்று புலம்புகிறான் என்று யோசிக்காதிர்கள். உண்மையில் காமிசைப்பொறுத்தவரை சூப்பர்மேன் வெஸ் பேட்மேன் என்பதே டைட்டில். ஆனால் பேட்மேனிற்கு உலகளவில் இருக்கும் ரசிகர்களுக்கு மதிப்புக்கொடுக்கும் வகையில் பேட்மேன் வெஸ் சூப்பர்மேன் என டைட்டிலிலேயே பேட்மேனுக்கு முன்னுரிமை கொடுத்திருக்கிறார்கள். அதேபோல் பேட்மேனுக்கு ஏற்ற சரியான நடிகராக பென் அஃப்லெக்கை செலக்ட் செய்திருக்கிறார்கள். ஓரிடத்தில்கூட பேட்மேனுக்கான கெத்தை விட்டுக்கொடுக்காமல் திரைப்படத்தை நகர்த்தியிருக்கிறார்கள். ஆனால் அது ஒரு சூப்பர்ஹீரோவுக்குண்டான மரியாதையைத் தந்திருக்கிறதே தவிர, பேட்மேன் எனும் லெஜன்ட்டை இப்படிப்பார்ப்பது மனதிற்கு ஒவ்வாத ஒன்றாகிவிட்டது.

சூப்பர்மேன் பற்றி என்ன சொல்ல? எல்லாம் அவர்தான். இல்லாத சக்தியே இல்லாத  கிரிப்டானியர். இந்த படத்திலும் ஏதேதோ செய்திருக்கிறார். வொண்டர்வுமன் கேரக்டரை காமிக்ஸ் படிக்காமல், திரைப்படம் பார்க்காமல் ஒருமுடிவுக்கு வருவது கடினம்தான். ஏதோ கிளைமேக்ஸ் ஃபைட்டில் பறந்து பறந்து செய்துகொண்டிருந்தார். ஒவ்வொரு சூப்பர்ஹீரோ திரைப்படத்திலும் ஹீரோயின் வடிவமைப்பு  ஏன் இவ்வளவு மட்டமாக இருக்கிறது என்பதுதான் புரியவில்லை. லேன் கதாபாத்திரமானது தானே தேடிச்சென்று வில்லனிடம் சிக்கிக்கொண்டு, ஹீரோவுக்கு பிரச்சனை உண்டாக்குவதற்கென்றே அளவெடுத்து தைத்த ஒரு கேரக்டர்.

படத்தின் இரு ப்ளஸ்கள் என்றால் பேட்மேனும் சூப்பர்மேனும் மோதிக்கொள்ளும் காட்சியும், கிளைமேக்ஸ் 20 நிமிடக்காட்சியுமே. பேட்மேன் அறிவாலும் தன் சமயோசிதத்தாலும் சூப்பர்மேனை பந்தாடும்போது விசில் பறக்கிறது. ஆனால் பேட்மேன், சூப்பர்மேனைக் கொல்லப்போகும் சமயத்தில் சூப்பர்மேன் ஒரேஒரு வார்த்தையில் அவர் மனதை மாற்றிவிடுவதெல்லாம் தியாகராஜ பாகவதர் காலத்து காட்சி. படுமொன்னையான சீன் அது. இம்மாதிரியான மொன்னையான சீன்களை டைஜிஸ்ட் செய்வதற்காகவே ஹன்ஸ் ஜிம்மரை இசையமைப்பாளராய் அமர்த்தியிருக்கிறார்கள். அவரும் தன்னால் முடிந்தளவு இசையால் படத்தை நகர்த்திச்சென்றிருக்கிறார். பல இடங்களில் பிண்ணனி இசை மிரட்டல். ஒளிப்பதிவாளரும் தன் பங்கைச் சிறப்பாக செய்துள்ளார். இருட்டில் எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகள் கூட மிகத்தெளிவாக பார்க்கமுடிந்தது.

மைனஸ்கள் என்று கோடிக்கணக்கில் சொல்லலாம். கதாசிரியர் டேவிட்.எஸ்.கோயர் நல்ல கதாசிரியர் தான். படத்திலும் நல்ல கதைதான். திரைக்கதையாசிரியர் க்றிஸ் டெர்ரியோ ஆர்கோ படத்திற்காக ஆஸ்கார் வாங்கியவர். அதேபோல் இயக்குநர் ஸேக் ஸ்னைடரும் ஏற்கனவே 300, வாட்ச்மேன் போன்ற திரைப்படங்களை எடுத்திருக்கிறார். எனினும் இவர்கள் மூவரும் ஒன்றிணைந்து உருப்படியான ஒரு திரைப்படத்தைக்கொடுக்க முடியாமல் போய்விட்டது எனலாம். இதற்கு மிகமுக்கிய காரணம் இன்றைய காலகட்டத்து சூப்பர்ஹீரோ திரைப்படங்கள். இப்போது எடுக்கப்படும் சூப்பர்ஹீரோ திரைப்படங்கள் விசுவல் ரீதியாக மட்டுமில்லாமல், திரைக்கதை மற்றும் காட்சிகளை நகர்த்தும் விதத்திலும் பல்வேறு வகையில் வேறுபட்டு வருகிறது. சூப்பர்ஹீரோக்களை பெரும்கடவுளாக சித்தரிப்பதற்கு பதில் மனிதர்களுக்கு நெருக்கமானவராக சித்தரிக்கவேண்டும் என்று ஒவ்வொரு இயக்குநர்களும் முயன்று வருகின்றனர். அப்படியொரு கட்டத்தில் , இந்த திரைப்படத்தில் மனிதர்களைப்பற்றிய காட்சிகள இல்லை எனலாம். எவ்வளவு பேர் செத்தாலும் பரவாயில்லை, சூப்பர்மேன் தன் தாயையும், காதலியையும் தேடித்தான் முதலில் செல்கிறார். அந்த இடத்திலேயே நமக்கும் சூப்பர்மேனுக்குமான இடைவெளி  அதிகரிக்கிறது.

இவ்வளவு சக்திகள் கொண்ட ஒருவருக்கு பிரச்சனை வருகிறது என்றால் அதைத்தீர்க்க வழியில்லாமல் சக்திகளே இல்லாத பேட்மேனிடத்தில் அவர் உதவி கேட்பதெல்லாம் சும்மா உட்டாலங்கடி. காதலி எங்கே போயிருந்தாலும் அவளைக் கண்டறிந்து தேடிவரும் சூப்பர்தேனால் தன்னை வளர்த்தத் தாயை எங்கு மறைத்து வைத்திருக்கிறார்கள் என்பதை கண்டுபிடுக்க முடியவில்லையாம்!? கிரிப்டான் ஆயுதம் தன் அருகில் இருந்தாலே சக்தியிழக்கும் சூப்பர்மேன் அதை எடுத்துக்கொண்டு பறந்துபோய் குத்தும்போதெல்லாம் போங்கய்யா போங்கு என்று சொல்லத்தோன்றியது. அதேபோல் ஒரே வார்த்தையில் பேட்மேன் மனம் மாறுவது, கடைசியில் சூப்பர்மேன் உயிரெழுத்தல் எல்லாம் சும்மானாச்சுக்கும் டெம்ப்ட் ஏற்ற எடுக்கப்பட்டது. நாங்க அதெல்லாம் டார்க் நைட் ரைசசிலேயே பார்த்துவிட்டோம் பாஸ்.

அதேபோல் திரைக்கதையின் தேக்கநிலையையும் ஒரு மைனசாக குறிப்பிடலாம். கிளைமேக்ஸ் ஃபைட் முடிந்தபின் ஆங்காங்கே கொத்துபரோட்டா போட்டதுபோல் காட்டும் காட்சிகளும், அடுத்த பாகத்திற்கான ஹைப் ஏற்றும் காட்சிகளும் அச்சு அசல் டார்க் நைட் ரைசஸின் உல்டா. முதல்பாதியில் பல காட்சிகளை ஏதோ மிகமுக்கியமானதுபோல் காட்டிவிட்டு, அதைத்தொடர்ந்து என்ன நடந்தது என்ற கன்டினியுவேசனே இல்லாமல் இஷ்டத்துக்கு நகர்த்திக்கொண்டே போனதெல்லாம் திரைக்கதை சொதப்பல்.


மொத்தத்தில் ஜஸ்டிஸ் லீக்கை பெரிதும் எதிர்பார்ப்பவர்கள் , மேன் ஆஃப் ஸ்டீலைப் பார்த்தவர்கள் ஒருமுறைப் பார்க்கலாம். அதுவும் அடுத்தபாகத்திற்கான கன்டினிவியுட்டி மிஸ் ஆகிடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக. அதிதீவிர நோலனின் பேட்மேன் ரசிகர்கள், இந்த படத்திற்கு செல்லாமல் இருப்பதே உத்தமம். மற்றபடி பெரிதாக சொல்லிக்கொள்ள எதுவும் இல்லை. 
உங்கள் விருப்பம்

4 comments:

 1. கடைசில வர்ற அந்த ராட்சச மிருகத்தை பார்க்கும் போது சிரிப்புதான் வருது..இந்த மாதிரியான மிருகமெல்லாம் அவெஞ்சர்ஸ்க்கு சரி, சூப்பர்மேன் மற்றும் பேட்மேன் மாதிரியான legendsக்கு சூட்டாகவில்லை....

  ReplyDelete
  Replies
  1. மியூட்டண்ட் கான்செப்ட்ல பேட்மேன உள்ள விட்டதே பெர்ய தப்பு பாஸ். படத்தோட பேச்க்யே ஓட்ட விழுந்ததால மேல என்ன சொல்ரதுனு தெரில

   Delete
  2. அதுபோக சும்மா பில்டிங்க உடைச்சு உடைச்சு கடுப்பேத்துறாங்க....

   Delete
 2. அப்போ முந்தைய பாகங்களை பார்கலனா கொஞ்சம் குழப்பம்தான் போல

  ReplyDelete