Saturday, 12 March 2016

காதலும் கடந்து போகும் - சினிமா விமர்சனம்



சில பிறமொழித்திரைப்படங்களைப் பார்க்கும்போது ‘ச்சே! இப்படி ஒரு மேக்கிங் தமிழ்ல இல்லயே’ என்று நம்மையே ஃபீல் பண்ணவைத்துவிடும். ஆனால் அந்த மொழியில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் நம் மொழியில் ரீமேக் செய்யப்படும்போது கொத்திக்குதறி கொத்துப்பரோட்டா போட்டு கொடுப்பார்கள். என்னடா இது என்று நம்மை பந்தாடாத குறையாக தியேட்டரைவிட்டு அனுப்பி வைப்பார்கள். ஆனால் ஒரு திரைப்படத்தின் மூலக்கதையை மட்டும் வைத்து அதை அழகியல் காட்சிப்படுத்தலுடன் ஸ்மூத்தாக நகர்த்தியிருக்கிறார் நலன் குமாரசாமி.


குறும்படத்திலிருந்து சினிமாவிற்கு வந்தவர்களில் முதல் திரைப்படத்திலேயே கமர்சியல் ரீதியாகவும் சரி, விமர்சன ரீதியாகவும் சரி; உச்சத்திற்கு சென்ற முதல் டைரக்டர் நலன். 2013-ல் சூது கவ்வும் வந்தபோது எப்படியாவது முதல்நாளே பார்த்துவிடவேண்டும் என்று நைட்ஷோ சென்று பார்த்தபோது ‘ஓ.கே. தமிழ்சினிமாவின் எதிர்காலம் இந்த திரைப்படத்தின்மூலம் வேறு லெவலுக்கு நகர்த்திச் செல்லப்படபோகிறது’ என்று மனதினுள் பிக்ஸ் செய்தேன். அதேபோல் அதைத்தொடர்ந்து எடுக்கப்பட்ட பல புதுமுக இயக்குநர்களின் திரைப்படம் மட்டுமில்லாமல் பல மூத்த இயக்குநர்களும் தங்களின் திரைப்படங்களில் திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தார்கள். இதற்கு எடுத்துக்காட்டாக எண்ணற்ற திரைப்படங்களைக்கூறலாம். கிட்டத்தட்ட ஒரு ட்ரென்ட் செட்டர் திரைப்படம் என்றுகூட சூதுகவ்வும் திரைப்படத்தைக் கூறலாம். அப்படியொரு திரைப்படத்தைக்கொடுத்த இயக்குநர் மூன்றாண்டுகளாக திரைப்படம் எடுக்காமல் இருந்தது மன்னிக்கமுடியாத குற்றம்.


அடுத்து என்ன திரைப்படம் எடுப்பார் என்று எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்போது காதலும் கடந்து போகும் என்று யாருக்கும் தெரியாமல் படத்தை எடுத்து படக்கென்று ரிலிஸ் செய்துவிட்டார். முதல் திரைப்படத்தில் டார்க் ஹுயூமரை அள்ளித்தெளித்த ஒரு இயக்குநர் இரண்டாவதாக ரொமான்டிக் மூவி என்றதும் எனக்கே ஒருநிமிடம் பக்கென்றாகிவிட்டது. சரி, எப்படியும் சினிமாவை நன்கு ரசித்து வந்தவர் எடுக்கும் திரைப்படம் கண்டிப்பாக ஏமாற்றாது என்றுதான் தியேட்டருக்குச் சென்றேன்.

விழுப்புரத்திலிருந்து தந்தையிடம் கெஞ்சி வேலைக்காக சென்னை வருகிறார் யாழினி. ஒரு பெரிய கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் யாழினியின் கம்பெனி திடீரென இழுத்து மூடப்படுவதால் கொஞ்ச நாட்களில் கையிருப்பு குறைய ஆரம்பிக்கிறது. வேலை போன விசயத்தை வீட்டிற்கு தெரியப்படுத்தாமல் அடுத்த வேலையைத்தேடுகிறார். இன்னொருபுறம் வீட்டை காலிசெய்துவிட்டு ஒரு லோக்கலான ஏரியாவில் வீடுஎடுத்து கம்மி வாடகையில் தங்குகிறார். அந்த வீட்டின் எதிர் வீட்டில் கதிர் எனும் அடியாள் இருக்கிறார். யாழினியின் வாழ்க்கையில் கதிர் செய்யும் மாற்றங்களே இத்திரைப்படம்.


படத்தின் கதையைவிட காட்சியமைப்பும் திரைக்கதையையுமே செம ஸ்ட்ராங். ஒரு குளிர்ச்சியான கஸாட்டா ஐஸ்கீரிமை சாப்பிடும்போது தோன்றும் எண்ணங்களை அப்படியே இந்த படம் நம் மனதுக்குள் கடத்துகிறது. சின்னச்சின்ன அழகான விசயங்களாகட்டும், ஒவ்வொருத்தரின் கேரக்டரைசேசனாகட்டும்; முடிந்தவரை நுணுக்கமாக காட்டியிருப்பது பாராட்டத்தக்கது. ஒவ்வொரு காட்சியும் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதைப்போல் பொறுமையாக ரசித்துப்பார்த்தால் படம் உங்களுக்கு மிகமிகப்பிடிக்கும். அழகியல் ஒளிப்பதிவு மட்டுமின்றி, காட்சியிலும் திரைக்கதையிலும் அந்த உத்தியைக்கையாண்டிருக்கிறார் நலன்.


கதிர் எனும் கேரக்டர் விஜய் சேதுபதியை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டிருக்கவேண்டும். படம் முழுக்க கதிர் எனும் பாத்திரம் தெரியாமல் நமக்கு விஜய் சேதுபதி என்பவரே தெரிகிறார். பாரில் 4 பேருடன் சண்டை போடச்சென்று அவர்களிடம் செம அடிவாங்கி கீழே விழுந்தவுடன் படக்கென்று எழுந்து வேகவேகமாக பாரைவிட்டு கெத்தாக வெளியேறும் காட்சியில் தியேட்டரில் விசில் சவுண்ட் ஸ்க்ரீனையே கிழித்துவிடும்போலிருக்கிறது. அதே நான்கு பேரை மீண்டும் ஸ்கெட்ச்(!) போட்டு அடிக்கும்போது கைத்தட்டாமல் இருக்கமுடியவில்லை. ஹீரோவும் ஹீரோயினும் சரக்கடிக்கும் காட்சி தமிழ்சினிமாவில் பழசு என்றாலும் ஹீரோயினின் க்யூட்-காக அந்த காட்சி எத்தனைமுறை பார்த்தாலும் சலிக்காது. ஹீரோயினை அழகென்றும் சொல்லமுடியாது; மொக்கை என்றும் சொல்லிவிடமுடியாது. இரண்டுக்கும் இடைப்பட்ட ஒருவிதமான அழகு. நடிப்பிலும் விஜய் சேதுபதிக்கு இணையாக நடித்துள்ளார். ஹேர்ஸ்டைல்  இருவருக்குமே அருமை.

படத்தின் சில காட்சிகள் செல்வராகவன் ஸ்டைல் மேக்கிங் என்றும் சொல்லலாம். ஆனால் ஓவராலாக பார்க்கும்போது கொஞ்சம் புதுமையாக இருக்கும். சந்தோஷ் நாராயணனின் இசையைப் பற்றி தனிக்கட்டுரை எழுதவேண்டும். என்னைப்பொறுத்தவரை சந்தோஷ்நாராயணனின் பிண்ணனி இசை அமைக்கும் திறமைக்கு கண்டிப்பாக ஹாலிவுட் திரைப்படங்களுக்கே செல்லலாம். ஒரு வேர்ல்ட் கிளாஸ் பிண்ணனி இசையை அசால்டாக தமிழில் கொடுத்துள்ளார். ஒரு இடத்தில்கூட படத்தைத்தாண்டிய இசையைக்கொடுத்து நான் பெரிய இசைமேதை என்று காட்டிக்கொள்ளாமல் , படத்திற்கு என்ன தேவையோ அதை சரிவரக்கொடுத்துள்ளார்.  படத்தைப்பார்க்கும்போது ஒரு கூலிங்கான ஃபீலிங் உங்களுக்குத்தோன்றும்; அதற்கு முக்கியமான இரு விசயங்கள் ஒளிப்பதிவும் பிண்ணனி இசையுமே ஆகும். தினேஷ்குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும்பலம். படத்தின் வசனங்கள் படத்தின் ப்ளஸ்களில் மற்றொன்று. டார்க் ஹுயூமரை ஆங்காங்கே தூவிவிட்டது அட்டகாசம். எடுத்துக்காட்டாக இன்டர்வயூ காட்சியில் விஜய் சேதுபதி செய்யும் அட்டகாசங்களைக் கூறலாம்.



சரி படத்தில் மைனஸே இல்லையா என்று கேட்பவர்களுக்கென்று ஒரு விசயத்தை விட்டுவைத்துவிட்டார் நலன். அது கிளைமேக்ஸ் ; வலிந்து திணிக்கப்பட்டது போன்றதொரு கிளைமேக்ஸ். நான் ரீசன்டாக பார்த்த திரைப்படங்களிலே இது தான் எனக்கு அன்சாட்டிஸ்பைட் கிளைமேக்ஸ் என்றும் சொல்லலாம். அட்டகாசமாக நெகட்டிவ்வாகவோ, பாஸிட்டிவாகவோ முடிய வேண்டிய திரைப்படத்தை, எதற்கும் சம்பந்தமில்லாத ஒரு கிளைமேக்ஸை வைத்து பத்தில் ஒன்றாக கடந்துபோகவைக்கும் திரைப்படமாக்கிவிட்டார் என்றே சொல்லவேண்டும். கிளைமேக்ஸ் தவிர்த்துப் பார்த்தால் கண்டிப்பாக கொண்டாடக்கூடிய திரைப்படம்தான் இது; ஆனால் பொறுமை மிக முக்கியம் அமைச்சரே!!!
உங்கள் விருப்பம்

1 comment: