NTR’s 25- NANNAKKU PREMATHO – சினிமா விமர்சனம்


(முன்குறிப்பு – இக்கட்டுரை திரைப்படம் வந்தபோது எழுதியது.  வேலைப்பளுவின் காரணமாக போஸ்ட் செய்ய இயலவில்லை. இது கொஞ்சம் பெரிய கட்டுரை. ஆனால் போர் அடிக்காமல் செல்லும் என நினைக்கிறேன். எனக்கு கட்டுரையெல்லாம் வேண்டாம், திரைப்படத்தைப்பற்றி மட்டும் பார்த்தால் போதும் என்பவர்கள் கடைசி 6 பாராவை மட்டும் படியுங்கள்.)



தெலுகு சினிமா என்றாலே நம் ஊர் ஆட்களுக்கு சிறிது இளக்காரம் என்றே சொல்லலாம். ‘என்னய்யா  படமெடுக்கறாய்ங்க? கிளிப்பச்ச கலர் சட்ட, கடல்நீல கலர் ஃபேண்டுல அவிய்ங்கள பாத்தாலே சிரிப்பு தாங்கல. இது போதாதுனு பண்ணுவானுங்க பாரு ராவடி, குதிரைய படுக்கப்போட்டு வீலிங் அடிக்கறது, தொடய தட்டி முன்னாடி போற ரயில்ல ரிவர்ஸ்ல போக வைக்கறதுனு யப்பா! ஆளவிடுங்கடா சாமி’ என்பதே பெரும்பாலோனோர் தெலுகு சினிமாக்களைப் பற்றிய பொது அபிப்ராயமாக இருக்கும். காரணம் நம் ஆட்கள் தெலுகு திரைப்படங்களில் இதுமாதிரி வரும் அட்டுக் காட்சிகளை மட்டும் காட்டிவிட்டு இதுதான் தெலுங்கு படம் என்ற முடிவுக்கு உடனுக்குடன் வந்துவிடுவதே. என்னிடம் யாராவது வந்து பக்காவான கமர்ஷியல் படம் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் பார்க்கவேண்டும் என்று கேட்டால் , அவர்களுக்கு நான் பரிந்துரைப்பது தெலுங்கு சினிமாக்களாகத்தான் இருக்கும்.


தெலுகு சினிமாக்களுக்கென்று ஒரு எழுதப்படாத விதி உள்ளது;  படம் முடியும்முன்பு கடைசியில் தேவையே இல்லையெனினும் கண்டிப்பாக ஒரு குத்து சாங்  இருந்தே ஆகவேண்டும்; பெரிய ஹீரோ என்றால் படுபயங்கரமான பில்டப்புடன் ஓப்பனிங் காட்சி இருக்கவேண்டும்; சிரஞ்சீவி குடும்பத்து ஆட்கள் எனில் கண்டிப்பாக ஒரு இன்ட்ரோ சாங் போட்டே ஆகவேண்டும். அதன்பின் ஹீரோவின் குடும்ப அறிமுகம், நண்பர்களுடன் சேர்ந்து காமெடி, ஹீரோயின் இன்ட்ரோ, ஹீரோயினுடன் லவ்; இதற்கிடையில் பிட்டுபிட்டாக நாலைந்து  ஆட்கள் ‘ரேய்! எக்கட உண்ணார்ரா’னு அடித்தொண்டையில் இருந்து கத்திக்கொண்டு யாரையோ (!) தேடுவதும் நடக்கும். அவர்களெல்லாம் வில்லனின் ஆட்கள் என்று நான் சொல்லவேண்டியதில்லை. ஹீரோவும் வில்லனின் ஆட்களும்  சந்திக்கும்போது ஒரு ஃபைட். அதில் ஹீரோ , வில்லனின் ஆட்களை டி-20-யில் கிறிஸ் கெய்ல், சிக்ஸ் விலாசுவது போல் பறக்கவிட்டதும் இடைவேளை. இடைவேளை முடிந்தபின் ஒரு ப்ளாஷ்பேக்; ப்ளாஷ்பேக்கை தொடர்ந்து வில்லனுக்கும் ஹீரோவுக்குமான மறைமுக மோதல். ப்ளாஷ்பேக் காட்சிகளிலோ அல்லது ப்ளாஷ்பேக் முடிந்த பின்னோ கண்டிப்பாக பிரம்மானந்தம் வந்துவிடுவார். கடைசியில் வில்லனை அழித்து சுபம். இதிலும் ஒரு ட்விஸ்ட் என்னவென்றால் ஹீரோ, நேராக வில்லனைக்கொன்று விட்டால், அவர் ஒரு அன்டர்கவர் காப் என்பதனை ஊகித்துக்கொள வேண்டும்.


இது டைப்-1 எனில் இன்னொன்று உள்ளது. அது ஒரு பெரிய வீடு, ஊரே மதிக்கும் பெரிய மனிதர். அவருக்கு மனதில் ஏதாவது பிரச்சனை இருக்கும். அதனால் வீடே பொலிவிழந்து காஷ்மீர் பார்டரில் காவல்காக்கும் எல்லைப்படையினரைப் போல் ஆளாளுக்கு  இயந்திரத்தனமாக இருப்பார்கள். கண்டிப்பாக அந்த வீட்டில்தான் ஹீரோயின் இருப்பார். ஹீரோயினுக்கு உதவ ஹீரோ வருவார். அந்த வீட்டில் உள்ள அனைவரையும் திருத்தி நல்வழிப்படுத்தி ‘ஆசைஆசையாய் இருக்கிறதே! இது போல் வாழ்ந்திடவே’ என்பது போன்று ஒரு பாட்டைப் போட்டு முடித்துவிடுவார்கள். இந்த டைப்பில் உள்ள முக்கிய விசயம், ஹீரோ உலகளவில் பெரும்பணக்காரராக இருக்கும் ஒருவரின் மகனாகத்தான் வரவேண்டும்.


தெலுகில் வரும் 80% கமர்ஷியல் திரைப்படங்களை மேற்கூறிய இரண்டு டைப்களில் அடக்கிவிடலாம். ஆனால் திரைக்கதை? ஒரே கதையைப் பலமுறை திருப்பிப்போட்டு எடுத்தாலும் அதன் ப்ரெஷ் மாத்திரம் குறையாமல் பார்த்துக்கொள்வது தான் தெலுகின் ஆகச்சிறந்த செயல் என்றே கூறுவேன். உங்களுக்கு டவுட்டாக இருக்கும்பட்சத்தில் அத்தாரின்டிக்கு தாரேடி, சன் ஆஃப் சத்யமூர்த்தி, ஸ்ரிமந்துடு, கோவிந்துடு அந்தரிவாடலே, ப்ருந்தாவனம் போன்ற படங்களையும் விக்ரமார்க்குடு, தூக்குடு, பாஷா,  போக்கிரி, ராமய்யா வஸ்தாவய்யா போன்ற படங்களையும் பாருங்கள்.


என்னதான் தெலுகு திரைப்படங்களில் ஒரே கதையாயிருந்தாலும் அது எடுக்கப்படும் விதங்கள் ஹீரோக்களுக்கு ஏற்றவாறு மாறுபட்டுக்கொண்டே இருக்கும். எவ்வளவு மொக்கையாக எடுக்கப்பட்டிருந்தாலும் மினிமம் ஒருமுறையாவது பார்க்கும் அளவிற்காவது எடுத்து விடுவார்கள். அதேபோல் தெலுங்கில் ஹீரோக்களும் ஓரளவு பார்க்கும் வண்ணமும், தாருமாறான நடனத்திறமைகளும் , உடலளவில் பிட்னெஸ்ஸுடனும் இருப்பார்கள். தெலுகில் இருக்கும் ஒரே தலையாய பிரச்சனை என்னவெனில் வாரிசு சினிமா. இப்போதைய காலகட்டத்தில் தெலுங்கில் சினிமா அறிமுகம் இல்லாத ஒரு குடும்பத்தில் இருந்து ஒருவர் ஹீரோ ஆவதென்பது, சூரியனில் ஆழ்துளை கிணறு போட்டு நீர் எடுத்து, அதில் பருப்புசாம்பார் செய்வது போன்றதொரு இயலா காரியம். ஆனால் ஒருவிஷயம்; ஒரு ஹீரோவை ஆந்திரவாலாக்களுக்கு பிடித்துவிட்டால் அவருக்காக உயிர்விடவும் துணியுமளவிற்கு டைஹார்ட் ரசிகர்கள் சூழ்ந்திருக்கும் மாநிலம் ஆந்திராவும், தெலுங்கானாவும் தான். இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் தியேட்டர்கள் இருப்பதும் அங்குதான்.


சரி இப்போது மேட்டருக்கு வருவோம். என்.டி.ஆர் -  இவர் பெயரைக் கேள்விப்படாதவர்கள் தென்னிந்திய அளவில் யாரும் இருக்கமாட்டார்கள். நம் எம்.ஜி.ஆரைப் போல் ஆந்திர மக்களின் திலகமாக இருந்து அரசியலில் தனக்கென்று ஒரு இடம்பிடித்து, அழிந்துகொண்டிருந்த டோலிவுட்டிற்கு உயிரூட்டி , ஆந்திர மக்களின் நெஞ்சங்களில் இன்றும் ‘பெத்தத் தேவுடு’ வாக வாழ்ந்து கொண்டிருக்கும் பெயர் இது. அவருக்கு 8 மகன்கள், 4 பெண்கள். இதில் 4-வது மகனான ஹரிகிருஷ்ணா திரைத்துறையில் நடிக்க ஆரம்பித்த காலம் தெலுங்கு சினிமா வரலாற்றின் கருப்புப்பக்கங்கள் என்றே சொல்லலாம். ‘அவன விடாதீக, கொல்லுக’ என்று வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் சொல்லும் காதல் தண்டபாணி, அவருடைய இளமைக்காலத்தில் ஹீரோவாக நடித்திருந்தால் எப்படியிருக்குமோ அப்படியிருக்கும் ஹரிகிருஷ்ணாவின் படங்கள். கன்னட ஹீரோக்களையோ அடித்துண்ணும் அளவிற்கு பர்சனாலிட்டியுடன் ஹரிகிருஷ்ணா களமிறங்கிய படங்களைப் பார்த்து சீதபேதியில் ஆந்திரமக்கள் தவித்த காலமும் உண்டு. ஆந்திரமக்களை அவதிக்குள்ளாக்குவதை விரும்பாத பெரியவர் மகனை ராஜ்யசபை எம்.பி ஆக்கி அனுப்பிவிட்டார். ஹரிகிருஷ்ணாவின் தொல்லைகளுக்கு பாலகிருஷ்ணாவே தேவலை என்றெண்ணிய மக்களுக்கு அப்போதைய நிலையில் சீரஞ்சீவி அருமையாகத்தெரிய மெகாஸ்டார் ஆனார் சீரஞ்சீவி. பாலகிருஷ்ணாவோ ‘நேன் புட்டிண்தி’ என்று தொடர்ந்தாற்போல் டயலாக் பேசிப்பேசி தொடையைத் தட்டித்தட்டி புண்ணாக்கிக்கொண்டே போனார். இருந்தாலும் பெரியவரின் மானம் காத்த பிள்ளையாய் அவர் திரையுலகில் விளங்கினார்.


ஹரிகிருஷ்ணாவுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியை ஊரறியத்திருமணம் செய்திருந்த ஹரிகிருஷ்ணா , இரண்டாம் மனைவியைத் தனிமைப்படுத்தியே வைத்திருந்தார். இரண்டாம் மனைவிக்குப் பிறந்தவர்தான் தரக் ராம். பின் என்ன பிரச்சனையாலோ இரண்டாம் மனைவியை முழுவதுமாக ஒதுக்கிவைக்க ஆரம்பித்தார். அப்போதைய காலகட்டத்தில் ஜூனியர் என்.டி.ஆர் குடும்பத்தைக் கவனிக்க யாருமில்லை. ஜூனியரின் தாய், தனியே வேலைக்குச் சென்று தன் மகனை வளர்த்து வர, இதைக்கேள்விப்பட்ட பெரியவர் ஜூனியரைத் தன்னுடனே அழைத்துச்சென்றார். ஆனால் சின்னவரை பெரியவரின் குடும்பத்தில் யாரும் ஆதரிக்கவில்லை. இருந்தாலும் பெரியவருக்கு ஜூனியரைப் பார்த்ததும் ஒரு நம்பிக்கை வந்தது. தனக்குப் பின் தன் பெயரைக் காப்பாற்றப்போவது இவன் என்றெண்ணி தரக் ராம் எனும் பெயரை நந்தமுரி தரக் ராமாராவ் எனமாற்றி உண்மையான ஜூனியராக்கினார். தாத்தா இருக்கும் வரை ஓரளவு அவப்பெயரிலிருந்து தப்பித்துக்கொண்டிருந்த ஜூனியரும் அவர் தாயாரும், தாத்தாவின் இழப்பிற்குபின் நிராதரவானார்கள்.


அக்காலக்கடத்தில் ஜூனியரின் தாயார் ஒரு சூளுரை எடுத்ததாகக்கூறப்படுகிறது. எந்த குடும்பத்தில் தன்னையும் தன் மகனையும் ஏற்கவில்லையோ, அதே குடும்பமே வந்து தங்களை மீண்டும் அழைத்துப்போகச் செய்வேன் என்பதே அது. அதற்காக ஜூனியரைத் தயார் படுத்தினார் அந்த அம்மையார். சிறுவயதிலிருந்தே நடனத்தின் மீது தீராக்காதல் கொண்டிருந்த ஜூனியரை குச்சிப்புடி நடனவல்லுநராக மாற்றினார். பிறப்பினாலேயே இருந்த நடிப்புத் தாகமும் மிதமிஞ்சி இருக்க நடிப்புதான் தன்னுடைய இலக்கு என்பதை ஜூனியரின் ஆழ்மனதில் விதைத்தார். இடையிடையே தாத்தா இருக்கும்போது சிறுவன் கேரக்டரில் நடித்துக்கொண்டிருந்த ஜூனியர், தாத்தாவின் டைரக்சனில் வெளியான ராமாயணம் திரைப்படத்திற்காக சிறந்த குழந்தைநட்சத்திரத்திற்கான தேசியவிருது வாங்கினார். அப்போதைய காலகட்டத்தில் இயக்குநர் குணசேகர்(ருத்ரமாதேவி இயக்குநர்) பரிந்துரையின் பேரில் ராஜமௌலியைச் சந்தித்தார் ஜூனியர். இருவரும் இணைந்து படம் செய்வதாக முடிவெடுத்த ஆண்டு 1999. ஆனால் ஜூனியருக்கு முதலில் வந்த திரைப்படம் நின்னு சூடாளனி (2001). முதல் படம் வெளியாகும்போது ஜூனியரின் வயது 18.  படம் அட்டு ப்ளாப். யாருடா பால் குடிக்கிற அமுல்பேபிய ஹீரோவா போட்டு படமெடுத்தது என்றளவிற்கு விமர்சனம். ஹீரோயினைப் போல் மூன்று மடங்கு சைசில் இருக்கும் ஹீரோவைப் பார்த்ததும் இவர் ஹரிகிருஷ்ணா பார்ட்-2 என்று மக்கள் தெறித்தோட ஆரம்பித்தார்கள்.


ஆனால் அதை மாற்றினார் ராஜமௌலி. ப்ளான் செய்த மாதிரி என்.டி.ஆரின் நடிப்பில் ராஜமௌலி தன் முதல் திரைப்படமான ஸ்டூடன்ட் நம்பர்.1ஐ இயக்கினார். ஓரளவு ஃபேமஸாக இருந்த எம்.எம்.கீரவாணி இசையில் பாடல்கள் வெளியாகி அனைத்தும் செம ஹிட் அடிக்க, பாடல்களுக்காகவே படம் தாருமாறாக ஓடியது. அதே ஆண்டில் வெளிவந்த சுப்பு எனும் திரைப்படமும் பேரைக் கெடுக்காமல் ஓரளவு காப்பாற்றிக் கொடுத்தது. அதன்பின் 2002-ல் வெளிவந்து என்.டி.ஆரின் முதல் ஆக்சன் ப்ளாக்பஸ்டர் ஆதி. விவிவி-யின் இயக்கத்தில் வெளிவந்து அந்த ஆண்டின் பாக்ஸ் ஆபிசை அடித்துத் துவைத்துப் போட்டது. அதே ஆண்டில் வெளியான அல்லரி ராமுடு ஒரு ஆவரேஜாக அமைந்தது. ஜூனியர் என்.டி.ஆர் வளரும் நடிகர்களில் அதிவேகமாக வளர்ந்து வருபவராக மாறினார்.


மீண்டும் ராஜமௌலியுடன் இணைந்த சிம்மாத்ரி 2003-ல் வெளிவந்து ஆந்திராவைத் தாக்கியது. ‘நூ விசிலேஸ்தே ஆந்த்ரா சோடாபுட்டி’ பாடலில் என்.டி.ஆரின் ஆட்டத்தைப் பார்த்து அதிர்ந்தது ஆந்திரா மட்டுமல்ல; முழுக்க முழுக்க ஆக்சனை மட்டும் முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்ட இத்திரைப்படம் என்.டி.ஆரின் மிக முக்கியமான மூன்று படங்களில் ஒன்று எனலாம். இதன்பின் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் வெளியான ஆந்த்ராவாலா பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே பெரிய பட்ஜெட்டில் வெளியாகி மரண ப்ளாப் ஆகியது (இதற்கு காரணம் பூரி ஜெகந்நாத்தின் ராசி எனலாம். பூரி படம் எடுத்தால் ஒன்று மெகா ப்ளாக்பஸ்டர் ஹிட் அல்லது படுபயங்கர ப்ளாப் எனும் இருவகையிலே அடங்கும்). அதன்பின் தொடர்ந்தாற்போல் மூன்று ப்ளாப்களைத் தெவிட்டத் தெவிட்டக் கொடுத்தார் என்.டி.ஆர்.  அதன்பின் அசோக் எனும் திரைப்படம் வந்து ஓரளவு என்.டி.ஆரின் பெயரைக் காப்பாற்றியது.  அதைத்தொடர்ந்து வந்த ராக்கி பெயர் சம்பாதித்தாலும் பாக்ஸ் ஆபிசில் அவுட்.


இம்முறை மீண்டும் ராஜமௌலி வந்தார். இருவரும் யமதொங்கா-வில் இணைந்தனர்.  ஜூனியர் என்.டி.ஆரின் சினிமா வாழ்க்கையை அவர் உருவத்தை வைத்து இரு காலக்கட்டங்களாக பிரிக்கலாம். யமதொங்காவிற்கு முன், யமதொங்காவிற்கு பின். முன் அவர் உருவத்தைப் பார்த்தால் செந்திலைப் பார்த்தது போல் இருக்கும். உருட்டுக்கட்டையைப் போல் பார்க்க தந்தையின் ஜெராக்ஸாக இருந்தவர் 30 கிலோ எடையைக் குறைத்து எலும்பும்தோலுமாய் வந்தார். யமதொங்காவில் நடித்ததும் சிம்மாத்ரியில் நடித்ததும் ஒருவரே என்று கூறினால் நம்புவதற்கே கடினமாய் இருக்கும்படியான உருவமாற்றம். அதுமட்டுமா? என்.டி.ஆரின் நடனத் திறமையை உலகறியச்செய்த படமென்றால் அது யமதொங்கா தான். ரம்பாவுடன் வரும் டிஸ்கோ பாடலில் என்.டி.ஆர் போட்டிருக்கும் ஸ்டெப்களில் பத்து சதவீதம்தான் எல்லாபுகழும் பாடலில் விஜய் போட்டிருப்பார் எனில் என்.டி.ஆரின் டான்ஸ் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப்பாருங்கள். டான்ஸ் மட்டுமில்லாமல் நடிப்பிலும் தன்னை மேன்மேலும் இம்ப்ரூவ் செய்த என்.டி.ஆர் , ஒரு முழுப்படத்தையும் தான் ஒருவன் மட்டுமே தாங்க முடியும் என்பதை ஸ்க்ரீன் ப்ரசென்ஸில் காண்பித்த திரைப்படம் எமதொங்கா.


அதைத்தொடர்ந்து 2008-ல் வெளிவந்த கான்ட்ரி ஊத்திக்கொள்ள திடுதிப்பென்று ஓராண்டு நடிப்புக்குத் தடைவிதித்து விட்டு தாத்தாவின் கட்சியான தெலுங்கு தேசத்தில் இணைந்து கட்சிக்காக பிரச்சாரம் செய்யக்கிளம்பினார். பிரச்சாரம் முடிந்துவிட்டு வரும் வழியில் ஒரு பெரிய விபத்து நடந்து பலத்த காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார் (பின்குறிப்பு – கட்சியில் ஏற்றுக்கொள்ள காரணம் சந்திரபாபு நாயுடுவுக்கு என்.டி.ஆரின் மீது மிகுந்த மரியாதை இருந்தது. மேலும் நாயுடுவின் உறவினர் மகளை என்.டி.ஆர் மணமுடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் நந்தமுரி குடும்பத்தில் ஏற்றுக்கொள்ளவில்லை). அந்த விபத்திலிருந்து என்.டி.ஆரின் பொதுவாழ்க்கை மாறியது எனலாம். அன்றிலிருந்து இன்றுவரை தன் திரைப்படங்களில் ‘குடி, குடியைக்கெடுக்கும்’ என்று சொல்வதற்குமுன் ‘சாலைகளில் பார்த்து பயணியுங்கள்; உங்களுக்காக உங்கள் குடும்பம் காத்துக்கொண்டிருக்கும்’ என்று அட்வைஸ் சொல்லாமல் படத்தை ஆரம்பிக்கமாட்டார்.


இரண்டாண்டு இடைவெளிக்குப் பின் 2010-ல் வெளிவந்த ப்ருந்தாவனம், அதுர்ஸ் இரண்டும் தாருமாரு ஹிட் அடித்து என்.டி.ஆரை மீண்டும் உச்சத்திற்கு கொண்டுவந்தது. டாப் 3 நடிகர்களில் ஒருவரான என்.டி.ஆர் அதே காலகட்டத்தில் பொது வாழ்விலும் மிக முக்கியமான இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள ஆரம்பித்தார். சித்தப்பா பாலகிருஷ்ணா எம்.எல்.ஏ ஆகி மக்களுக்கு தொண்டு செய்தார் என்றால், இவரோ தன் ஆதரவாளர்களை எம்.எல்.ஏ ஆக்கி தொண்டு செய்தார். கட்சியில் தனக்கென்று தனியிடம் பிடித்துக்கொண்ட என்.டி.ஆர் , பெரியவரைத் தெய்வமாக நினைக்கும் மக்கள் மனதிலும் ‘சின்னத் தேவுடு’ என்றழைக்கும் வண்ணம் பெயர் பெற்றார்.


அதன்பின் தென்னிந்திய அளவில் பெரிய பட்ஜெட்டில் படம் செய்யலாம் என்று இயக்குநர் மெஹர் ரமேஷை அனுகினார் ஜூனியர். இவர் ஒரு கர்நாடக்ககாரர். என்.டி.ஆரின் ஆந்த்ராவாலா திரைப்படத்தைக் கன்னடத்தில் இயக்கியவர். எதுக்கு சம்பந்தமே இல்லாம கன்னடத்துக்காரரிடம் ஜூனியர் என்.டி.ஆர் படம் கொடுத்தார் என்று யோசிக்கத்தோன்றுகிறதா? ஜூனியர் என்.டி.ஆரின் தாயார் கர்நாடகத்தைச்  சார்ந்தவர். 2011-ல் வெளிவந்தது சக்தி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 5 மொழிகளில் வெளியாக முதல் வாரம் தாருமாறாக ஓடி இரண்டாவது வாரம் தியேட்டரை விட்டு ஓடியது. அதே ஆண்டு ஊசரவெள்ளி ரிலிசாகி ஆவரேஜாக ஓடியது (இதைத்தான் வேதாளமாக்கி ப்ளாக்பஸ்டராக்கினார் சிவா).


என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த என்.டி.ஆரிடம் வந்தார் போயபட்டி சீனு. இவர் ஆந்திராவின் ஹரி+பேரரசு இணைந்த கலவை. பாலகிருஷ்ணாவுக்கு சிம்மா எனும் அல்டிமேட் ஹிட்டைக் கொடுத்து டோலிவுட்டைக் கதிகலக்கியவர். அவ்வெற்றியின் சூடு தணிவதற்குள்ளே என்.டி.ஆரிடம் ஓ.கே செய்துவிட்டார். கீரவாணியின் பாடல்கள் அனைத்தும் செம குத்து குத்தியிருக்க, அதை டவுன்லோட் செய்து கேட்ட எனக்கு வீடியோ சாங் பார்க்கும் ஆவல் வர, வீடியோ சாங் எங்கும் கிடைக்காமல் போக, படத்தையே டவுன்லோட் செய்து பார்த்தேன். நான் பார்த்த முதல் என்.டி.ஆர் திரைப்படம் தம்மு. படத்தை சும்மா ஓட்டி ஓட்டி பார்க்க, ஒரு பேரதிர்ச்சியைக் கண்டு தொண்டை விக்கித்து நின்றேன். ஹீரோவுக்கும் வில்லனுக்குமான சண்டையில் என்டிஆர் 4 அடி நீள அருவாளை வைத்து பறந்தவாறே ஒரு சுழற்று சுற்றி வில்லனை நோக்கி வீச, வில்லனோடு சேர்ந்து தென்னைமரம் துண்டாக சரியும். அடப்பாவிகளா என்று விழுந்து விழுந்து சிரித்தேன். முதல் பாராவில் சொன்ன லைன் நியாபகம் வருகிறதா? அதே மனநிலையில்தான் நானும் அப்போது இருந்தேன். ஆனால் யதேச்சையாக தம்மு திரைப்படத்தை முழுவதுமாக பார்க்கும்போது அந்த பனைமரம் வெட்டும் காட்சி எனக்கு சிரிப்பை மூட்டவில்லை; மாறாக சரியான மசாலா காட்சியாகவே தெரிந்தது. அதன்பின் ஊசரவெள்ளி பார்த்து என்.டி.ஆர் ரசிகனாக மாறியது பெருங்கதை.


ஆந்திர உணவு சாப்பிட்டால் ஒன்று புரியும்; அவர்கள் இனிப்பு செய்தால் அதீத இனிப்பாக இருக்கும்; காரமென்றால் அதீத காரமாக இருக்கும். எதிலும் அதிகமாக விரும்புவார்கள் திரைப்படத்திலும் அந்த வழக்கத்திற்கு மாறான அதீதத்தை வெளிப்படுத்துகிறார்கள். அவ்வளவே! இதை உலகமகாக்காரணமாக கொண்டு நாம் அவர்களை மட்டம் தட்டுகிறோம். ஆனால் இந்தித் திரையுலகமே ஆந்திரப்படங்களை ரசித்து, ருசித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் எந்த படத்தை சுட்டு நடிக்கலாம் என்று பல கான்கள் பரிதவித்துக்கொண்டிருக்கார்கள்.


சரி மீண்டும் நடப்புக்கு வருவோம். போயபட்டி சீனுவுடன் இணைந்த தம்முவும் ஆவரேஜ் சக்ஸஸையே கொடுக்க உடனடியாக ஒரு சூப்பர்ஹிட் தேவைப்பட்டுக்கொண்டிருந்த என்.டி.ஆர் இம்முறை அனுகியது சீனு வைட்லா. சீனு வைட்லா எப்படி என்றால் கதை என்னவென்று இவரிடம் கேட்கவே தேவையில்லை. ஏனென்றால் எல்லா படமும் ஒரேமாதிரியாக எடுக்கும் படுபயங்கர இயக்குநர் இவர். டான் சீனுவானாலும் சரி, தூக்குடுவானாலும் சரி; ஒரே கதை. ஆனால் ப்ளாக்பஸ்டர் ஹிட்டுக்கு இவர் கேரண்டி. தூக்குடுவை பாலிஷ் செய்து இவர் பாஷாவை இயக்கினார். தமன் இசையில் பாடல்கள் ஒருபக்கம் தாருமாறாக ஹிட் அடிக்க, இன்னொருபுறம் என்.டி.ஆரின் ஸ்டைலிஷ் ஆக்சன் மற்றும் ப்ரம்மானந்தம்+நாசர்&கோ உடனான என்.டி.ஆரின் காமெடியால் படம் பெரிய வசூல் சாதனை செய்தது. இப்படத்திற்குப்பின் ஜப்பானில் சூப்பர்ஸ்டாரைத் தொடர்ந்து ரசிகர்மன்றம் என்.டி.ஆருக்கு அமைத்தார்கள். பாஷாவின் ஹிட்டைத் தொடர்ந்து இந்துவில் ஒரு ப்ரத்யோகமான கட்டுரையில் சூப்பர்ஸ்டாரின் அடுத்த போட்டி ஜுனியர் என்.டி.ஆர் என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரை என்.டி.ஆரை உயரத்திற்கு தூக்கிச்சென்றது. அதேநேரத்தில் இந்த காலகட்டத்தில் நந்தமுரி குடும்பத்திற்கு போதாத காலம் எனலாம். பாலகிருஷ்ணாவிற்கு வழக்கம்போல லயன், சிம்மா கைக்கொடுத்தாலும் குடும்ப உறுப்பினர்களான கல்யான்ராம் போன்றோர் சினிமாவில் பலத்த அடி வாங்கியிருந்தார்கள். மற்றொருபுறமோ அல்லு குடும்பத்தினர்களான (அல்லது சிரஞ்சீவி குடும்பத்தவர்)  அல்லு அர்ஜூன், ராம் சரண், பவன் கல்யாண் போன்றோர் அடுத்தடுத்து ஹிட்டடித்து நந்தமுரி குடும்பத்தையே ஒதுங்கவைத்துவிட்டார்கள். இப்படியொரு நிலையில் நந்தமுரி குடும்பத்தினரின் பெயரைக் காக்கும் ஒரே ஆளாக என்.டி.ஆர் மாத்திரமே விளங்கினார். அதனாலோ என்னவோ பாலகிருஷ்ணாவுக்கு எப்போதும் இல்லாத கரிசனம் என்.டி.ஆரின் மீது விழுந்து ‘வாடு நா வம்சத்து மகாடு’னு ஓப்பன் பேட்டி கொடுத்து அணைத்துக்கொள்ள ஆரம்பித்தார். எந்த குடும்பம் ஒதுக்கியதோ அதே குடும்பம் மீண்டும் ரெட்கார்பெட் போட்டு அணைத்துக்கொண்டது. அதே நேரத்தில் தன்னை ஒதுக்கியவர்கள் என்று அவர்கள்மீது என்றும் வஞ்சத்தோடு என்.டி.ஆர் இருந்ததில்லை. இதற்கு சான்றாக இப்போது திரைக்கு வரவிருக்கும் தோழா திரைப்படத்தை கூறலாம். நாகார்ஜூனா, கார்த்தி இணைந்து நடிக்கும் இத்திரைப்படத்தில் முதலில் கமிட்டான என்.டி.ஆர் , பாலகிருஷ்ணாவுக்கும் நாகார்ஜூனாவுக்கும் இருக்கும் பழையபகையை நினைவில் கொண்டு திரைப்படத்திலிருந்து விலகிவிட்டார்.


ஆனால் மீண்டும் பழைய குருடி கதவத்தொரடி என்பதுபோல் ஹைடெக் படத்திலிருந்து விலகி ஒரு பழிவாங்கும் கதையைத் தேர்ந்தெடுத்தார் என்.டி.ஆர். கப்பர்சிங் (தபாங் தெலுங்கு ரீமேக்) புகழ் ஹரிஷ் இயக்கிய இந்த படத்தை பார்க்கவிரும்புபவர்கள் நேரே பிரபாஸ் நடித்த மிர்ச்சி படத்தை சிடியில் வாங்கி பார்த்துவிடுவது நலம்; அந்த படத்திற்கும் இந்த படத்திற்கும் ஏழே ஏழு வேற்றுமைகள் தான். மத்தபடி அதே படத்தை, அதே மெத்தேடில், அதே கதையை வைத்து என்.டி.ஆருக்கு வேட்டு வைத்தார் ஹரிஷ். சரி, போய்த்தொலையுது அடுத்ததாவது ஒழுங்கான படமாக பிடிக்கலாம் என்றெண்ணி ரபாஷாவில் சைன் செய்தார் என்.டி.ஆர். ரபாஷா ஏதோ தப்பித்து ஓடியது போன ஜென்மத்தில் என்.டி.ஆர் செய்த புண்ணியம் எனலாம்.


உடனடி ப்ளாக்பஸ்டர் மீண்டும் தேவைப்பட, அதேநேரத்தில் பூரி கையில் ஒரு கருத்தாழமிக்க கதையுடன் வந்து சேர்ந்தார். பூரி ஜெகந்நாத்துடன் இணைவது ஒருசக்கர சைக்கிளில் இங்கிருந்து காஷ்மீருக்கு போவது போன்றது. போய் சேர்ந்தால் பெரும்புகழ்; பாதியிலே விழுந்தால் பலத்த அடி. ரிஸ்க்கை எடுத்தார் என்.டி.ஆர். அதுவரை ஸ்லிம்மாக இருந்தவர் திடுதிப்பென்று சிக்ஸ்பேக்குடன் வந்து நிற்க ஒருங்கிணைந்த ஆந்திரா ஸ்தம்பித்தது. குங்க் ஃபூ பாண்டா திடுதிப்பென்று சிக்ஸ் பேக் உடலுடன் வந்து நின்றால் ஆச்சரியப்படாமல் இருக்கமுடியுமா? டெம்பர் வெளியாகி மீண்டும் என்.டி.ஆரின் வெற்றிக்கணக்கைத் துவக்கிவைத்தது. டெம்பர் முடிந்ததும் யோசித்தபோது தான் தன்னுடைய 25-வது படம் அடுத்தது என்ற நினைவுக்கு அவருக்கு வந்தது. ஒரு மாஸ் ஹீரோவாக உலாவரும் என்.டி.ஆர் இம்முறை தேர்ந்தெடுத்தது த்ரில்லர்+குடும்பக்கதை. அதுதான் நானாக்கு ப்ரேமதோ. 


ஒரு சின்ன கேப். இதுவரை என்.டி.ஆர் நடித்த திரைப்படங்களை ஓரளவு வரிசைக்கிரமமாக பார்த்துவிட்டோம். ஆனால் அவர் எப்படி திரைப்படங்களை சூஸ் செய்கிறார் என்பதையும் ஒரு பத்தியில் பார்த்துவிடலாம். தெலுங்கில் ஹீரோக்கள் தங்களின் படங்களை தேர்ந்தெடுப்பது செம காமெடியாக இருக்கும். தான் ஒரு படத்தை ஹிட் கொடுக்கவேண்டுமெனில் இப்போது பேமஸாக இருக்கும் ட்ரென்ட் எதுவோ அதை அப்படியே மாற்றம் செய்யாமல் எடுத்து ஹிட்டாக்கிவிடுவது. இம்மாதிரிக்கு எடுத்துக்காட்டு ப்ருந்தாவனத்தை முதன்மையாக கொண்டு அத்தாரின்டிக்கி தாரேடி, கோவிந்துடு அந்தவாரில்லே போன்ற படங்களும், மகதீராவை முதன்மையாக கொண்டு பத்ரிநாத், ஓம் சக்தி, பத்ரா போன்ற படங்களையும் குறிப்பிடலாம். மிர்ச்சியை வைத்து ராமய்யா வஸ்தாவய்யா , தூக்குடுவை வைத்து பாஷா போன்ற படங்களும் அடக்கம். இரண்டாவது தனக்கு எந்த மாதிரி செட் ஆகுமோ அதையே பாலோ செய்வது. இதற்கு எடுத்துக்காட்டாக மகேஷ்பாபுவை சொல்லலாம். மகேஷ்பாபு தன்னுடைய ட்ரென்டிலிருந்து எப்போது மாறி நடிக்கவே மாட்டார்; நடித்தாலும் அது ஊத்திக்கொள்ளும். ஆனால் இவ்விரண்டு தாண்டி மற்றொன்று சுயமாக யோசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது. இந்த விஷயத்தை தெலுங்கில் செய்யும் இரண்டே இரண்டு ஹீரோக்கள் என்.டி.ஆரும் பவன்கல்யாணும் மட்டுமே. தொடர்ச்சியாக இவர்கள் இருவரின்  5 படங்களை எடுத்தப்பார்த்தால் இது விளங்கும். இரண்டு படங்கள் ட்ரென்டை பாலோ செய்தும், இரண்டு படங்கள் தங்களின் இமேஜை வெளிப்படுத்துவதாகவும் ஒரு படம் தங்களின் பரிட்சார்ந்த முயற்சியாகவும் இருக்கும். என்.டி.ஆரின் பரிட்சார்ந்த முயற்சிகளை நோக்கினால் ஸ்டூடன்ட் நம்பர்-1, அசோக், நா அல்லுடு, ப்ருந்தாவனம், கான்ட்ரி, டெம்பர்,  ஊசரவெள்ளி. அதூர்ஸ், ஆந்த்ராவாலா போன்ற படங்களைச் சொல்லலாம். அந்த வரிசையில் நானக்கு ப்ரேமதோ என்.டி.ஆரின் மற்றொரு பரிட்சார்ந்த முயற்சி எனலாம்.


சரி, படத்தை ஆரம்பிப்பதற்குமுன் இயக்குனர் சுகுமாரைப் பற்றியும் ஒரு பத்தியில் பார்த்துவிடலாம். டென்சனாக வேண்டாம்; எனக்கு ராஜமௌலிக்கு அடுத்து தெலுங்கில் மிகமிக பிடித்த இயக்குநர் சுகுமார். தெலுகு சினிமாக்களை ஓரளவு தரமாக்க முயற்சியில் ஈடுபடும் ஓரிரு இயக்குனர்களில் ஒருவர் சுகுமார். ஆர்யா எனும் தனது முதல் திரைப்படத்தின்மூலம் தெலுங்கு மாத்திரமில்லாமல் தென்னிந்திய திரையுலகையே திரும்பிப்பார்க்கவைத்த சுகுமார் உடனே ராமை வைத்து ஜகடம் எடுத்து வெற்றியாக்கினார். அதனைத் தொடர்ந்தாற்போல் ஆர்யா-2 வையும் இயக்கி, தன் பெயரை என்றும் தெலுங்கு சினிமாவில் நிலைத்திருக்கும்படி செய்த சுகுமார் 100% லவ் திரைப்படத்தை இயக்கி அதிலும் வெற்றி கண்டார். அடுத்து அவருக்கு அடித்தது ஜாக்பட். மகேஷ்பாபுவை வைத்து நேநொக்கடைனே எனும் தெலுங்கின் முதல் இன்டர்நேசனல் லெவல் சைக்கலாஜிக்கல் த்ரில்லரை இயக்கினார். ஆனால் படம் எதிர்பார்த்தபடி போகவில்லை. காரணம் படம் தரத்திலும் திரைக்கதையிலும் ஹாலிவுட் ஆட்களையே மூக்கின்மேல் விரல்வைக்கும் வண்ணம் எடுக்கப்பட்டிருக்கும். ஊத்திக்கொண்டதற்கு முக்கியமான காரணம் படத்தின் கிளைமாக்ஸில் நல்ல குத்து சாங் இல்லாமல் போனது தான். இப்படியொரு திரைப்படத்தை ப்ளாப்பாக்கி விட்டார்களே ஆந்த்ராவாலாக்கள் என்று கடுப்பாக்கும் வண்ணம் மிகச்சிறந்த திரைக்கதை வாய்ந்த திரைப்படம். படம் ஆவரேஜ் என்றதும் சிறிது கேப் விட்டு குமாரி 21F-ஐ தயாரித்தார் சுகுமார். இந்த திரைப்படம்தான் தெலுகில் பூத்த அற்பூதம் என்று கொஞ்ச நாட்களுக்குமுன் விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது. என்.டி.ஆருடன் நானக்கு ப்ரேமதோ கமிட் ஆனதும் முதல்வேலையாய் சுகுமார் செய்தது கிறிஸ்டோபர் நோலன் செய்த விஷயத்தையே. இன்செப்சன் திரைப்படத்தை தன் திரைக்கதை டேலன்ட் வெளிப்படுத்தும் வண்ணமும் அதேசமயம் பாக்ஸ் ஆபிசில் கலக்கும்படியாகவும் அமைய நோலன் என்னென்ன முயற்சிகளைக் கையாண்டாரோ அதையே சுகுமாரும் பின்பற்றினார். எளிமையான, அதேநேரத்தில் வலிமையான திரைக்கதை.


கேயாஸ் தியரி பற்றி தசாவதாரத்தில் கமல் சொல்லியிருப்பது உங்கள் நினைவிற்கு வரலாம். அந்த தியரியின்படி பட்டர்ப்ளை எஃபெக்ட் என்ற ஒரு சம்பவத்தை அறிமுகப்படுத்தினார் எட்வர்ட் லோரன்ஸ். கேயாஸ் தியரி (ஒழுங்கின்மை விதி) என்பது என்னவெனில் குத்துமதிப்பான நிகழ்காலம், குத்துமதிப்பான எதிர்காலத்தை உண்டாக்காது. இப்படிச்சொன்னால் நமக்குப்புரியாது என்பதானல் தான் பட்டர்ஃப்ளை எபெக்டைக் கூறி எளிமையாக்கினார் வில்லியம் ஜேம்ஸ். பிரபஞ்சத்தைப் பொருத்தவரை எந்தவொரு சிறுவிளைவுகளும் மாபெரும் விளைவுகளுக்கு அடிப்படையாக அமையும் என்பதே மையக்கருத்து. இது கணிதத்தில் பயன்படுத்தும் தியரி எனினும் டைனமிக்ஸின் மிகமுக்கிய கோட்பாடுகளில் இதுவும் ஒன்று. சரி குழப்பாமல் படத்தில் சொல்வதையே உங்களிடமும் சொல்லிவிடுகிறேன்.


காற்று வெப்பத்தினால் ஆவியாகும்போது அவ்விடத்தை நிரப்ப வேறொரு இடத்திலிருந்து காற்று வரும். இதன் அடிப்படையில்தான் பருவக்காற்றுகள், சூறாவளிக்காற்றுகள் போன்றவை இயங்குகின்றன. இப்போது ஒரு பட்டாம்பூச்சியானது தானாக பறந்துகொண்டிருக்கும்போது சாதாரண அழுத்தத்தை நிறைவு செய்யும்பொருட்டு வேறொரு இடத்திலிருந்து காற்று பெயர்ந்து அவ்விடத்திற்கு வரும். இது இயல்பானாது;ஆனால் அதே பட்டாம்பூச்சியை யாராவது பிடிக்க முயன்றால் வேகமாக சிறகை அடிக்கும். அப்போது காற்றின் தேவை அவ்விடத்தில் அதிகரிக்கிறது. அதை நிறைவு செய்யும் பொருட்டு தொடர் இனைப்பில் காற்றானது இடம்பெயருகிறது. இவ்வாறு தொடர்  இணைவானது எங்கோ ஒரு மூலையில் முடிவடையும். அவ்விடமானது அதிக காற்றுத்தேவையை உள்ளடக்கியிருக்கும். அதைநிறைவு செய்யும் பொருட்டு பேரதிகமான காற்றுச்சுழல் உண்டாகி பெரிய புயலையே உண்டாக்கக்கூடும். இதுதான் அந்த தியரி. இதை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டதே இத்திரைப்படத்தின் திரைக்கதை.


படத்தின் கதை தந்தையிடமிருந்த சொத்துகளைப் பறித்து அவரின் அடையாளத்தை அழித்த வில்லனின் அடையாளத்தை அழிக்கப்போகும் மகன். இதைத்தான் கேயாஸ் தியரியைக்கொண்டு அருமையாக எடுத்து இருக்கிறார் சுகுமார்.  இதுவரை இருந்த என்.டி.ஆருக்கும் இந்த படத்தில் அபியாக வரும் என்.டி.ஆருக்கும் குறைந்தபட்சம் 100 வித்தியாசங்களையாவது காணலாம். அவ்வளவு சேஞ்ச். கெட்டப் முதல் பாடி லாங்குவேஜ், டயலாக் டெலிவரி, ஸ்டைல் என அனைத்திலும் ஹைடெக்கான என்.டி.ஆர். தெலுங்கைப் பொறுத்தவரை என்.டி.ஆர் போன்று சிறந்த நடிகரைக் காண்பதறிது. எந்தவொரு சிச்சுவேஷனையும் சமாளிக்ககூடிய திறமை என்.டி.ஆருக்கு இருப்பதால் தான் படம் முழுமைக்கும் தன் ஸக்ரீன் ப்ரசென்சால் நகர்த்தி ஜெயித்திருக்கிறார். படத்தில் மற்ற நடிகர்களுக்கும் நடிக்கும்படியான வாய்ப்பிருந்தும் , அவர்களை எல்லாம் ஓவர்டேக் செய்துள்ளார்.


படத்தின் பெரும்பலங்களில் ஒன்று ப்ரில்லியன்டான ரசிக்கும்படியான வசனங்கள். படத்தின் கதையைப் பொறுத்தவரை வில்லன் புத்திசாலி; ஹீரோ வில்லனைவிட புத்திசாலி. இவர்களிருவரும் சந்திக்கும் காட்சியானது எப்படி இருக்கும்? இந்த படத்தைப் பார்த்தால் உங்களுக்கு புரியும். தெலுகு சினிமாக்களில் இவ்வளவு ஸ்மார்ட்டான அதிபுத்திசாலித்தனமான வசனங்களை நான் இப்போது தான் பார்க்கிறேன். வில்லன் ஹீரோவிடம் கேம் விளையாடலாமா என்று கேட்டுவிட்டு ‘இதுவரை இந்த கேமில் நான்  தோற்றதேயில்லை’ என்று கூறும்பொது, ஹீரோ ‘நான் இதுவரை தோற்றுப்போன கேம் விளையாடியதே இல்லை’ என்பார். வில்லனும் ஹீரோவின் தந்தையும் சந்திக்கும் காட்சியில் ஒரு கேள்வியை வில்லன் கேட்பார்; அந்த கேள்விக்கான விடையை கண்டுபிடிக்க கிட்டத்தட்ட எனக்கு இரண்டு மணி நேரம் ஆயிற்று.


இதேபோல் இப்படத்தின் இசையைப் பற்றி கண்டிப்பாக சொல்லவேண்டும்; இசையென்றால் பாடல்கள் இல்லை; பிண்ணனி இசை. பாடல்கள் வழக்கம்போல நம் டி.எஸ்.பி எல்லா ட்யூனையும் மிக்ஸ் செய்து போட்டுவிட்டார். ஆனால் பி.ஜி.எம் பின்னி எடுத்துள்ளார். இதுவரை டி.எஸ்.பி பி.ஜி.எம் போட்ட திரைப்படங்களையும் இந்த படத்திற்கு அவர் போட்டிருக்கும் இசைக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள். ஸ்லோவாக செல்லும் காட்சிகளைக் கூட தன் இசைத்திறமையால் அடுத்து என்ன என்று எதிர்பார்க்கவைக்கும் இசை. வில்லனின் பர்த்டே பார்ட்டிக்கு என்.டி.ஆர் என்டர் ஆகும்போது வயலின் வைத்து ஒரு சிம்பனி ஆர்க்கெஸ்ட்ராவே வாசித்திருப்பார் டி.எஸ்.பி. பாடல்கள் படத்துடன் பார்க்கும்போது கேட்கலாம்; படத்தைத் தாண்டி வெளிவந்தாலும் மனதில் நிற்கும்படியாக இறந்த தன் தந்தைக்கு சமர்ப்பித்த ‘நானாக்கு ப்ரேமத்தோ’ பாடல் உண்மையில் அருமை. அப்பாடலின் வரிகள் அப்படியே டி.எஸ்.பியின் உள்ளத்திலிருந்து கொட்டிருக்கவேண்டும். அவரின் இழப்பை அப்பாடலின்வழி நமக்குக் காட்டியிருப்பார். இது தவிர இரண்டு பாடல்கள் ‘லவ் தெப்பா’ மற்றும் ‘ஐ வான்ன பாலோவ்’ ஆகிய பாடல்களும் சுமார் ரகத்திற்கு மேல்.


நான் என்.டி.ஆரைப் பார்த்து வியந்த ஒரு விஷயம் நடனம். தென்னிந்திய அளவில், ஏன் இந்திய அளவில் பிரபுதேவாவிற்கு அடுத்தபடியாக எவ்வளவு கடினமான ஸ்டெப் என்றாலும் அதை முகத்தில் எள்ளளவும் காட்டாமல் அசால்டாக போடும் திறமை வாய்ந்தவர். யமதொங்கா (டிஸ்கோ பாடல்), ப்ருந்தாவனம் (சின்னதோ வைப்பு), பாஷா (அனைத்துப் பாடல்களும்), டெம்பர் (டெம்பர் சாங்) போன்ற பாடல்களில் அவர் ஆடியிருக்கும் ஸ்டெப் சான்ஸ்லெஸ் எனலாம். ஆனால் அவரின் நடனத்திறமையை ராஜமௌலிக்குப்பின் சரியாக பயன்படுத்தியவர் சீனுவைட்லா. மற்ற இயக்குநர்கள் படத்தின் ஒரே குத்துபாடலில் மட்டும் அவருக்கு கடினமான ஸ்டெப் கொடுத்து ரசிகர்களை ஏமாற்றிவிடுவார்கள். சுகுமாரும் அப்படியே செய்துவிட்டார். 5-ல் 4 பாடல்களில் மிகச்சுமாரான நடனத்தைக்கொடுத்து ஏமாற்றிய சுகுமார், லவ் தெப்பா பாடலில் போட்டு பிழிந்து எடுத்துள்ளார். இன்னும் யூட்யூப்பில் அந்த பாடல் வரவில்லை. வந்தால் பாருங்கள்; அட்டகாசமான நடனஅசைவுகள்; தமிழில் அப்படியொரு நடனத்தைக் கண்டிப்பாக காணமுடியாது.


எனக்கு என்.டி.ஆரை பர்சனலாக மிகவும் பிடிக்க காரணம் தெலுங்கில் எந்தவொரு வேடத்தையும் ஏற்று நடிக்கும் திறமை வாய்ந்த ஒரே நடிகர் என்.டி.ஆர். மேலும் தெலுங்கை அழுத்தம் திருத்தமாக எவரும் எளிமையாக உணரும்படியான உச்சரிப்பு அவர் படத்தில் மட்டுமே வரும். அதேபோல் தன் படங்களில் முடிந்தவரை மது அருந்தும் காட்சிகள், சிகரெட் பிடிக்கும் காட்சிகளை அவாய்ட் செய்து நல்ல கமர்ஷியலைக் கொடுக்கும் ஒரே தென்னிந்திய நடிகர். சினிமாவைத் தாண்டி மனிதநேயமிக்க நடிகர்களில் ஒருவர். பாஷா திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் , கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த தன் ரசிகனின் குடும்பத்தை அதே மேடையில் தத்து எடுத்துக்கொண்டு, இன்றளவும் அக்குடும்பத்தை பராமரித்து வரும் தன்மையானவர். இதெல்லாம் புகழுக்காக செய்கிறார் என்று ஒரேவார்த்தையில் அவரின் மனிதாபிமானத்தைக் கொச்சைப்படுத்திவிட முடியாது. சென்னை வெள்ளத்திற்கு முதன்முதலில் நிவாரண நிதி வழங்கி அதை வெளியில் சொல்லவிரும்பாமல் அமைதிகாத்தவர். இன்றளவும்  அவருடன் பழகியவர்கள் அவரை விட்டு பிரிந்ததில்லை. இம்மாதிரியான குணம் இயற்கையிலேயே ஒருசிலருக்கு அமையும். அம்மாதிரியான மனிதர் தான் என்.டி.ஆர். இன்னும் 15 வருடங்களுல் ஆந்திர முதல்வராகும் வாய்ப்பு அவருக்கிருந்தாலும் தன் சொந்தவிஷயங்களுக்காக கட்சியைப் பயன்படுத்தியதில்லை. வெளியில் மட்டுமல்லாமல் சினிமாவிற்குள்ளேயும் கனிவுடன் இருப்பவர். அவரை வைத்து படம் எடுக்கும் இயக்குநர்களில் ஒருவர்கூட அவரைப் பற்றி குறை சொல்லியதில்லை. சினிமாவிற்குள்ளேயும் தன்னால் இயன்ற அளவு கமர்சியல் படங்களின் தன்மையை மாற்ற முயற்சி எடுத்து வருபவர். ‘ராஜமௌலியின் பேமஸிற்கு காரணம் நாங்கள் தான்’ என்று தெலுங்கின் முண்ணனி ஹீரோக்கள் ராஜமௌலியை மட்டம் தட்ட முயன்றபோது ஈகா (நான் ஈ) எடுத்து எல்லாருடைய வாயையும் அடைத்தார். ஈகா திரைப்படத்திற்கு முதல் ஆளாய் வந்து வாழ்த்து தெரிவித்தவர் என்.டி.ஆர். தனக்கு சரியெனத் தோனும் விஷயங்களைத் தாமதிக்காமல் செய்துவிடுவார். படத்தின் வெற்றிக்கு யார் காரணம் என்று கேட்டால் தன் படத்தில் பணியாற்றிய அனைவருமே என்று யாரையும் விட்டுக்கொடுக்காமல் பேசும் தன்மையானவர். இம்மாதிரியான பண்புகளைக்கொண்டிருக்கும் ஒரு சிறந்த நடிகரை யாருக்குத்தான் பிடிக்காது?


என்னைப்பொறுத்தவரை என்.டி.ஆரின் 25 பெரும் வெற்றியடையும் என்பதில் சந்தேகமில்லை. தமிழிலும் படம் ரிலிசாகப்போகிறது என்கின்றனர். தமிழில் வந்தால் மிஸ் பண்ணாமல் பார்த்துவிடுங்கள். வெறும் கேம் மாதிரியாக மட்டும் நகராமல் காதல், குடும்ப பாசம், சின்ன சின்ன காமெடி வசனங்கள் என்று ஸ்மூத்தாக செல்கிறது. ப்ரில்லியன்டான கமர்ஷியல் திரைப்படத்திற்கு ஒரு ஆகச்சிறந்த உதாரணம் இந்த நானாக்கு ப்ரேமதோ.





Comments

  1. அருமையான தொகுப்பு
    பயனுள்ள பதிவு

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை