RATATOUILLE – சினிமா விமர்சனம்



அது 2005 என்று நினைக்கிறேன்; பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போது நான் படித்துக்கொண்டிருந்த  பள்ளிக்கு, அருகிலுள்ள கல்லூரியில் இருந்து எம்.பி.ஏ மாணவர்கள் தங்களின் ப்ராஜெக்ட்காக புத்தகங்களை விற்க வந்தார்கள். “Whitakers world of facts” எனும் அப்புத்தகத்தின் வண்ணப்படங்களைப் பார்த்ததுமே வாங்கிவிடவேண்டும் என்ற ஆவல் எனக்குள் மலர்ந்தது. மேலும் அக்காலக்கட்டத்தில் பொது அறிவிலும் புத்தகங்கள் படிப்பதிலும் எனக்கு அதீத ஆர்வம். எட்டாம் வகுப்பு படிக்கும்போதே கல்லூரியில் பி.ஏ. ஹிஸ்டரி படித்துக்கொண்டிருந்த என் சித்தப்பாவின் வரலாற்றுப் புத்தகங்களையெல்லாம் படித்து முடித்துவிட்டேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். காமிக்ஸ், அரசியல் வரலாற்றுக்கட்டுரைகள், ஆச்சரியங்கள், அதிசயங்கள், விண்வெளி என எதைப்பற்றிய செய்தி கிடைத்தாலும் படித்துவிட்டுத்தான் மறுவேலை. அப்படியொரு அறிவுப்பசியில் (இப்போ இல்ல; அப்போ) திளைத்துக்கொண்டிருந்த எனக்கு அப்புத்தகம் பெரும் பொக்கிசமாகவே பட்டது. ஆனால் விலை கொஞ்சம் அதிகம்; எப்படி வாங்குவது?


அன்று வீட்டிற்கு வந்ததுமே என் நாடகத்தை அரங்கேற்ற ஆரம்பித்தேன்; முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு சாப்பிடுவதைக்கூட விரும்பாதவனாக வீட்டில் உலாவினேன். என் முகத்தைப் பார்த்ததுமே அகத்தில் ஏதோ பிரச்சனை என்றுணர்ந்த என் அன்னையார் தனியே அழைத்து என்னவென்று கேட்க ‘விடும்மா’ என்று மீண்டும் சோகமாய் பிகு பண்ணினேன். அப்படி சொன்னால்தான் மீண்டும் துருவித்துருவி கேட்பார்கள் என்று எனக்குத் தெரியும். மீண்டும் கேட்கும்போது கண்ணில் ஆவலுடன் புத்தகத்தைப் பற்றி கூறினேன். எங்கள் வீட்டில் அவ்வளவு எளிமையாக பணம் தந்துவிடமாட்டார்கள். தினமும் பள்ளிக்குச் செல்ல டிப்ஸ் 1 ரூபாயிலிருந்து 2 ரூபாயைத் தாண்டிவிடாது. ஆனால் இரண்டே இரண்டு விசயங்களுக்கு மட்டும் எவ்வளவு ஆனாலும் தந்துவிடுவார்கள். ஒன்று உணவு; மற்றொன்று படிப்பு.


புத்தகம் என்றதும் பணத்தைத் தந்துவிட்டார்கள். அன்றைய நாள் பள்ளிக்கு போகும்போது பெருமகிழ்ச்சி மற்றும் மிடுக்குடன் சென்றேன். என்னவோ அந்த புத்தகத்தின்மீதான ஈர்ப்பு என்னை ஒருவழி ஆக்கிவிட்டிருந்தது. புத்தகத்தை அன்று வாங்கியபின் உடனே திறந்து பார்க்கவில்லை. தம்பிகளுடன் சேர்ந்து திறந்துபார்க்கவேண்டும் என்ற எண்ணம். ஒரு அவஸ்தையான சந்தோசத்துடன் அன்றைய நாளைக்கடத்திவிட்டு மாலையில் வீட்டுக்கு வந்ததும் தம்பிகளுடன் சேர்ந்து கண்ணை மூடிக்கொண்டு ஒரு பக்கத்தைத் திருப்பினோம். சரி,  இந்த ப்ளாஷ்பேக்கை இங்கேயே நிறுத்திவிட்டு திரைப்படத்திற்கு செல்லலாம்.


ரெமி எனும் எலியின் கதை இது. இயற்கையாகவே முகர்ந்து மணத்தை வைத்தே உணவு எப்படியானது என்பதைக் கண்டறியும் திறமை வாய்ந்த ரெமி, தன் குடும்பம் மற்றும் குழுவுடன் ப்ரான்சின் ஒரு கிராமப்பகுதியில் ஒரு வீட்டில் வசித்துவருகிறது. ரெமியைப்பொறுத்தவரை தான் எலியாக பிறந்ததைவிட தங்கள் குழுவினருக்கு உணவைப்பற்றிய விழிப்புணர்வே இல்லாமல் கண்டதைச்சாப்பிடுகிறார்களே என்ற வருத்தம் அதிகம். மனிதர்களைப்போல் நாமும் உணவைச்சமைத்து ரசித்து, ருசித்து சாப்பிடவேண்டும் என்று நினைக்கிறது ரெமி. ரெமியிடம் இருக்கும் திறமையைச் சரிவரபுரிந்துகொள்ளாமல் ரெமியின் தந்தை ரெமியை பாய்சன் செக்கராக பயன்படுத்துகிறார். இவர்கள் வசிக்கும்வீட்டின் சமையலறையில் அவ்வப்போது சென்று உணவைத் திருடும் ரெமி டி.வியில் குஸ்டோ எனும் சமையல்கலைஞரின் சமையல்நிகழ்ச்சியைப் பார்க்கிறது.  அவரின் ஹோட்டல் 5 ஸ்டார்களைப் பெற்று பாரிசின் சிறந்த ரெஸ்டாரன்டாக இருக்கிறது. குஸ்டோவின் தாரக மந்திரம் “ANYONE CAN COOK”. அதே பெயரில் ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார் குஸ்டோ. அதிர்ஷ்டவசமாக அந்த புத்தகம் ரெமி வசிக்கும் வீட்டிலேயே இருக்கிறது. அதைப்பார்த்து சமையலின் அனைத்துக்கலைகளையும் தியரிட்டிக்கலாக கற்றுக்கொள்கிறது ரெமி. குஸ்டோவை  துரோணராக நினைத்து சமையல்கலையில ஒரு ஏகலைவனாக மாறுகிறது ரெமி.  சிலநாட்களில் குஸ்டோவின் ரெஸ்டாரன்டிற்கு கொடுக்கப்பட்ட ஐந்து ஸ்டார்களில் ஒன்று குறைக்கப்படுகிறது; அதேநேரம் குஸ்டோவும் இறந்துவிடுகிறார். இச்சமயத்தில் எதேச்சையாக வீட்டு ஓனரிடம் எலிகள் மாட்டிக்கொள்ள தப்பிக்கும் முயற்சியில் ரெமி தன் குடும்பத்தையும் குழுவையும் பிரிந்து விடுகிறது. அப்போது அதன் இமாஜினரி தோழராக குஸ்டோ தோன்றி ரெமியை வழிநடத்துகிறார்.     


குஸ்டோவின் வழிகாட்டுதலின்பேரில் ரெமி குஸ்டோவின் ரெஸ்டாரன்டை அடைகிறது. அங்கு ஸ்கின்னர் எனும் தலைமை குக்கின் மேற்பார்வையில் குஸ்டோவின் ரெஸ்டாரன்ட் நடைபெற்று வருகிறது. குஸ்டோவின் இறந்தபின் அவரது ரெஸ்டாரன்ட் மேலும் ஒரு ஸ்டாரை இழந்து 3 ஸ்டார் ஹோட்டலாக மாறிவிடுகிறது. ரெமி அங்கு சென்ற நேரம் லுங்குய்னி எனும் வாலிபனைக் காண்கிறது. ரெஸ்டாரன்டின் கழிவுகளை அகற்றும் நபராக பணியமர்த்தப்படும் லுங்குய்னி, யாருக்கும் தெரியாமல் அங்கு தயாராகிக்கொண்டிருந்த சூப்பில் ஏதேதோ போட்டு நாஸ்தியாக்கிவிடுகிறான். சூப்பின் வாசத்தை வைத்து அது நாசகதியிலிருப்பதை உணரும் ரெமி, தன் திறமையைப் பயன்படுத்தி யாருக்கும் தெரியாமல் அந்த சூப்பை சரிசெய்யமுயலுகிறது. அது சரிசெய்வதை லுங்குய்னி பார்த்துவிடுகிறான். அதேநேரத்தில் லுங்குய்னி சூப்பை கிளறியபோது பார்த்துவிடும் ஸ்கின்னர், லுங்குய்னியை வாங்கு வாங்கென வாங்கிக்கொண்டிருக்கும்போது தவறுதலாக அந்த சூப் ரெஸ்டாரன்டில் ஒருவருக்கு பரிமாறப்படுகிறது. அந்த நபர் ஒரு உணவு விமர்சகர். அவர் சூப் பிரமாதம் என சொல்ல, லுங்குய்னியை பரிசோதிக்க முடிவெடுக்கிறார் ஸ்கின்னர். அதேநேரத்தில் எலியைப் பார்த்துவிடும் ஸ்கின்னர், அதை கொன்றுவிடும்படி லுங்குய்னியிடம் கட்டளையிட, அவன் அதைக்கொல்லாமல் அதனிடம் டீல் பேசுகிறான். டீலின்படி ரெமி லுங்குய்னிக்கு உதவ ஆரம்பிக்கிறது. ஆனால் எப்படி?


ஏதேதோ முயற்சிகளுக்குப்பின் ரெமியும்  லுங்குய்னியும் ஒரு ஐடியாவைக் கண்டறிகிறார்கள். லுங்குய்னியின் தலைமுடியை ஸ்டியரிங்காக பயன்படுத்தி ரெமி அவனை இயக்க ஆரம்பிக்கிறது. அதன்மூலம் கிச்சனில் அவன் தொப்பிக்குள் ஒளிந்துகொண்டு அவனை இயக்கி சமைக்க ஆரம்பிக்கிறது. குஸ்டோ ரெஸ்டாரன்டின் புகழ் பரவுகிறது; லுங்குய்னியின் புகழும் தான்.

ஒருகட்டத்தில் குஸ்டோவின் வாரிசுதான் லுங்குய்னி எனும் உண்மையைக் கண்டறியும் ஸ்கின்னர், குறுக்கு வழியில் அவனை ரெஸ்டாரன்டை விட்டுத் துரத்த முயற்சிக்கிறார். இதை அறியும் ரெமி குஸ்டோவின் வாரிசு லுங்குய்னி என்பதற்கான டி.என்.ஏ ரிப்போர்டை ஸ்கின்னரிடம் இருந்து பறித்து லுங்குய்னியிடம் தந்து அவனை ஓனராக மாற்றுகிறது. அதன்பின் பேரும்புகழும் அடையும் லுங்குய்னிக்கும் ரெமிக்கும் ஒரு கட்டத்தில் பிரச்சனை வருகிறது. லுங்குய்னியின் மீதான கடுப்பில் இருக்கும் ரெமி ஏதேச்சையாக தன் குடும்பத்தையும் குழுவையும் கண்டறிகிறது.


குஸ்டோ ரெஸ்டாரன்டின் புகழ் மீண்டும் பரவ, அது ஆன்டன் ஈகோ எனும் உணவு விமர்சகரின் காதை எட்டுகிறது. இவர்தான் குஸ்டோவின் 5 ஸ்டார் ரெஸ்டாரன்ட் 4 ஸ்டாராக மாற காரணமானவர். இவரை திருப்தி படுத்துவது மிகக்கடினம். அவர் லுங்குய்னியைச் சந்தித்து உன் உணவுத்திறமையை நாளை என்னிடம் வெளிப்படுத்து என்கிறார். ஆனால் அன்றிரவு ரெமிக்கும் லுங்குய்னிக்கும் பிரச்சனை பெரிதாக , கோவமான ரெமி தன் குடும்பத்தையே கிச்சனுக்கு அனுப்பி கிடைத்ததைத் திங்க சொல்கிறது. என்னதான் இருந்தாலும் ரெமியிடம் தான் நடந்துகொண்டது தவறு என உணரும் லுங்குய்னி அதனிடம் மன்னிப்பு கேட்க வருகிறான். ஆனால் ரெமி தன் குடும்பத்தையே அழைத்துவந்து திருடுவதைப் பார்க்கும் லுங்குய்னி கோபத்தில் ரெமியைத் திட்டி அனுப்பிவிடுகிறான். இன்னொருபுறம் சோகமாக வெளியேறிய ரெமியை ஸ்கின்னர் கடத்திவிடுகிறான். அடுத்தநாள் ஆன்டன் ஈகோ வர, என்ன நடந்தது என்பது கிளைமேக்ஸ்.


நல்ல உணவு, நல்ல புத்தகம், நல்ல சினிமா இவை மூன்றும் நம்மை கடந்தகாலத்துக்கு உடனே அழைத்துச்சென்றுவிடும். எடுத்துக்காட்டாக நீங்கள் திரையரங்கில் பார்த்த நல்ல சினிமாவை எப்போதாவது நினைவுக்குக்  கொண்டுவந்தால் அந்த சினிமா மட்டும் நினைவுக்கு வராது. அதனுடன் அன்றைய நாளில் அந்த சினிமாவை நீங்கள் பார்க்கும்முன் நடந்த நிகழ்வுகளும் நினைவுக்கு வரும். நான் சின்ன வயசில் தீவிர கேப்டன் ரசிகன். அவருடைய வல்லரசு திரைப்படம் வந்தபோது அதைப்பார்க்க எங்கள் குடும்பத்துடன் (ஒரே டி.வி.எஸ் 50-ல் 5 பேர்) சென்ற காட்சிகள் அப்படியே நினைவுக்கு வருகின்றது. முன்னே இருக்கும் கேப்பில் நானும் என் நடுத்தம்பியும் அமர, அப்பா ஓட்ட, அம்மாவின் மடியில் கடைசித்தம்பியுடன் வண்டியில் செல்லும்போது ஏதோ நான் ப்ளைட் ஓட்டும் விமானிபோல் வண்டியைப் பிடித்துக்கொண்டு ‘த்ர்ர்ர்ர்ர்ர்ரு’ என்று சவுண்டு விட்டுக்கொண்டே போனது இப்போது நினைவுக்கு வருகிறது. திரையரங்கில் இடைவேளையில் 1 ரூபாய்க்கு 5 முறுக்கு என வாங்கி தம்பியிடம் இருந்து கடலை உருண்டைக்கு எக்ஸ்சேஞ்ச் செய்தது; கேப்டன் சுவரில் கால்வைத்து விடும் பேக் கிக்கைப் பார்த்து அதே போல முன்னால் இருப்பவர் மண்டையில் உதைத்தது என அந்நினைவுகள் என்றும் மறக்கமுடியாதவை. இத்தனைக்கும் அப்போது எனக்கு என்ன வயதிருக்கும் என்பதைக்கூட என்னால் யோசிக்கமுடியவில்லை.


இதேபோல் பார்த்திபன் கனவு புத்தகம்; நான் பனிரென்டாம் வகுப்பு படிக்கும்வரை விடுமுறை என்றாலே எனது பெரியம்மாவின் வீட்டுக்கு சென்றுவிடுவது வழக்கம். அங்கு தறிக்கு பாவு போடும் தொழில் செய்வார்கள். நான் பாவுக்கான நூல்கட்டை சுற்றிக்கொண்டிருப்பேன். பத்தாம் வகுப்பு விடுமுறையில் செல்லும்போது என் சின்ன அண்ணன் பார்த்திபன் கனவு புத்தகத்தை கொண்டுவந்தார். காலை 7 மணிக்கு நூல்கட்டை சுற்றிக்கொண்டே அதைப்படிக்க ஆரம்பித்த நான் 11 மணிக்கு தான் சாப்பிடவே போனேன் முடித்துவிட்டு. எப்போது 8.30 மணிக்கே சாப்பிட்டுவிடும் நான் சாப்பாட்டைக்கூட மறந்துவிட்டு படித்துக்கொண்டிருந்தேன். அதன்பின் வாங்கிய திட்டுகள் மறந்தாலும் ‘இவனுக்கு என்ன ஆச்சு?’ என்று மனதினுள் நினைத்தவாறே கிட்டத்தட்ட ஐந்தாறுமுறை சாப்பிட அழைத்த பெரியம்மாவின் பரிதாபமான முகம் இன்றும் மறக்காது. இதேபோல் அங்கு நான் தங்கியிருந்த காலங்களில் என் கேர்ள் பிரண்ட்  தந்தையின் பழைய புத்தகக்கடையும் என்றும் மறக்கவே மறக்காது; அங்குதான் இரும்புக்கை மாயாவியிலிருந்து கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்ட காமிக்ஸ்களைப் படித்திருப்பேன். இதேபோல் நல்ல உணவுக்கான எடுத்துக்காட்டாக இட்லியைக்கூறுவேன். இப்போது கூட என் பேவரைட் இட்லி தான் . இட்லியைப் பார்த்ததும் ஒருகாலத்தில் தனியொருவனாக இருந்து 46 இட்லிகளை ஒரேவேளையில் சாப்பிட்ட நினைவு கண்டிப்பாக வந்துவிடும்.


எதற்கு இப்படி என் சரிதத்தைக்கூறி உங்கள் நேரத்தை வீணாக்கிக்கொண்டிருக்கிறேன் என்றால் படத்தின் கிளைமேக்ஸ் பற்றி கூறவே. ஆன்டன் ஈகோ, ரெமியின் உணவைச்சாப்பிடும்போது தன் சிறுவயது நினைவுக்குப்போவார் அல்லவா? அந்த நேரத்தில் நானும் மெய்மறந்தேன். அந்த நேரத்தில் நான் முதல் மூன்றுபேராவில் சொன்னேன் அல்லவா ? அந்த நினைவுக்குள் சென்றேன். நான் என் தம்பிகளோடு சேர்ந்து திறந்தபோது நான் பார்த்த முதல் புகைப்படம் இத்திரைப்படத்தைப் பற்றியது. அதில் ரெமியும் லுங்குய்னியும் சமைத்துக்கொண்டிருக்கும் காட்சி. இந்த படத்த எப்படியாச்சும் பாக்கனும்டா என்று என் தம்பியிடம் நான் கூறியது நினைவுக்கு வந்தது. ஆம்; என்றோ நான் பார்க்கவேண்டும் என்று நினைத்து மறந்த ஒரு திரைப்படம் என் வாழ்க்கையின் அதிஅற்புதமான ஒரு நிகழ்வை நினைவுக்குக்கொண்டுவந்தது. என்னை அறியாமலே ஐந்து நிமிடம் ஒரு சிறுபையனைப்போல் உணர்ந்தேன். சாரி, விமர்சனத்துக்குப் போகலாம்.

படத்தின் கதையைப் பற்றி பார்த்தாயிற்று; டெக்னிசீயன்களைப் பற்றியும் இசையைப்பற்றியும் பார்க்கலாம் என்றால் இந்த பதிவு இன்னும் பத்து மடங்கு அதிகமாகும். பிக்சார் நிறுவனத்தின் படைப்பு என்பதனால் தரத்து ஒருதுளிகூட குறைவில்லை. ரெமி தன் குடும்பத்தைப் பிரிந்தபின் குஸ்டோவின் வழிகாட்டுதலைத்தொடர்ந்து பாரிஸின் அன்டர்க்ரவுண்டில் ஓடி மேலே வரும் காட்சியில் வரும் அனிமேசன் ஒன்று போதும் தரத்தை விளக்க; அதி அற்புதமான அனிமேசன் . அதேபோல் படத்தின் திரைக்கதையும் எந்த இடத்திலும் தொய்வில்லாமல் வேகவேகமாக முன்னேறிப்போய்க்கொண்டே இருக்கிறது. படத்தின் மையக்கரு யார்வேண்டுமானாலும் வெற்றிபெறலாம் என்பதே; இன்னும் சிம்பிளாக சொல்லவேண்டுமெனில் 3 இடியட்ஸ் ,சாரி நண்பன் திரைப்படத்தில் வரும் ‘உனக்கு பிடிச்ச துறைய தேர்ந்தெடுத்துக்க; அதுல உன் திறமைய வளத்துக; வெற்றியத்தேடி நீ ஓடாத; வெற்றி உன்னத்தேடி தானா வரும்’ என்பது தான். அனிமேசன் ரசிகர்கள் மட்டுமின்றி மற்றவர்கள் உட்பட அனைவரும் கண்டிப்பாக தவறவிடக்கூடாத படம். இந்த திரைப்படத்தை ஏற்கனவே பார்த்து, இதை மிக விரும்பியவர்களுக்கு நான் பரிந்துரைக்கும் மற்றொரு திரைப்படம் The Hundred Foot Journey (2014). இதுவும் உணவு சம்பந்தமான அருமையான திரைப்படம்.



பின்குறிப்பு – பிக்சார் பற்றி ஹாலிவுட் பாலா அண்ணனின் மின்புத்தகம் யாரிடமாவது இருந்தால் அதை எனக்கு அனுப்பிவைக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். Mail ID – Joinmegu@gmail.com

Comments

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை