Friday, 15 April 2016

தெறி – சினிமா விமர்சனம்
இளையதளபதி விஜய் – இன்று தமிழின் மிகமுக்கியமான 4 நடிகர்களில் ஒருவர். தமிழகம்தாண்டி கேரளாவிலும் சூப்பர்ஸ்டாராக ஒளிருபவர். தேமே என்று ஒரே ரோட்டில் பயணித்துக்கொண்டிருந்த விஜயை, சிறிதளவு நடிப்பிலும் கதையிலும் மாற்றம் செய்ய முயற்சித்த திரைப்படம் என்றால் அது காவலன். அதற்குமுன்வரை காது கிர்ரென்று ஆகும்வரை மூச்சுவிடாமல் பேசிக்கொண்டிருந்த விஜய் எனும் மாஸ் ஹீரோவை, நடிகர் விஜயாக அடையாளப்படுத்திய திரைப்படம் காவலன். அதன்பின் அவரது சினிமா கேரியரில் அவர் சூஸ் செய்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் அவருக்குள் இருக்கும் நடிகரையும், ரசிகர்கள் உண்மையாகவே எதிர்பார்த்த விஜயையும் திரையில் காட்டிக்கொண்டே வந்தது எனலாம். துப்பாக்கி, கத்தி, வேலாயுதம், நண்பண் என ஒவ்வொரு திரைப்படமும் விஜயை ஒவ்வொரு தளத்திற்கு கொண்டு சென்றது. சென்ற ஆண்டு வெளியான புலி சிறிது அதிருப்தியான திரைப்படம் எனினும் , ஒரு மாஸ் ஹீரோவான விஜய் குழந்தைகளுக்காக ஒரு படம் செய்த தில் அவ்வளவு எளிதாக மற்ற ஹீரோக்களுக்கு வராது. 

ஆம்; நான் ஒரு தீவிர அஜித் ரசிகன்தான்; எனினும் விஜய் ஹேட்டர் கிடையாது. விஜயின் இடைப்பட்ட காலத்திரைப்படங்கள் மற்றும் அவரின் நடவடிக்கைகள் அவர் பெயரை ஒட்டுமொத்தமாக டேமேஜ் செய்தது. அந்த சமயங்களில் விஜயை ஓட்ட ஆரம்பித்தவர்கள் இன்றுவரை அவர் எது செய்தாலும் ஓட்டுவதையே குறிக்கோளாக கொண்டு திரிகின்றனர். என்ன காரணம் என்றும் தெரியவில்லை; ஏதோ எஸ்.ஏ.சி என்பவரால் மட்டும்தான் விஜய் இந்தளவிற்கு வந்தார் என்பதையெல்லாம் துளிகூட ஏற்றுக்கொள்ளமுடியாது. அப்படிப்பார்த்தால் தெலுங்கு சினிமாவில் சினிமா பிண்ணனியில்லாமல் கடினப்பட்டு வந்த ஹீரோக்களைக் காட்டுவதே அரிது. தமிழில்கூட சிம்பு, ரவி, சூர்யா, கார்த்தி, தனுஷ் என பெரும் பட்டாளமே வாரிசு சினிமாவினால் மட்டுமே இத்துறைக்கு வந்தது. அதேபோல் ரீமேக் விஜய் என்றொரு பெரிய அவப்பெயர் அவரைச்சுற்றி வலம்வருகிறது. உண்மையில் ரீமேக் கிங் என்றால் சல்மான்கானைத்தான் சொல்லவேண்டும். ஒவ்வொரு மொழியிலும் ஹிட் அடிக்கும் திரைப்படங்கள் மற்ற மொழியில் ரீமேக் ஆவது சகஜம். அந்த மொழியில் இருப்பதை மாற்றி எடுக்கவேண்டும், அப்படியே காபி அடிக்கக்கூடாது என்று சொல்வதெல்லாம் தவறு; அது டைரக்டரின் விருப்பம். படம் பிடித்திருக்கிறதா இல்லையா என்பதை விட்டுவிட்டு அது காபி, இது காபி என்று ஒரு ரீமேக் திரைப்படத்தில்  குறை சொல்ல ஒன்றுமே இல்லை. இதுமாதிரி ஆயிரம் குறைகள் சொன்னாலும் விஜய்யிடம் ஒரு தனி ஸ்க்ரீன் பிரசன்ஸ் இருக்கிறது என்பதுதான் உண்மை. இன்னும் சொல்லப்போனால் அஜித்திற்கு இருக்கும் டைஹார்ட் ஃபேன் பேஸ் விஜய்யிடம் கிடையாது; ஆனால் அதிக ரசிகர்கள் விஜய்க்குத் தான் இருக்கிறார்கள். இது சும்மா உட்டாலங்கடிக்காக சொல்லவில்லை; என்னதான் சமூக வலைத்தளங்களில் விஜய்யின் திரைப்படங்களை ஓட்டினாலும், கலெக்சன் ரீதியாக எப்போதும் விஜயக்கு ஒரு தனியிடம் உள்ளது. இதுவரை வந்த டாப் டென் தமிழ் திரைப்படங்களின் வசூலில் இரண்டு விஜய் திரைப்படங்கள் உள்ளது என்றபோதே விஜய்யின் வெற்றி தெரிந்துவிடும்.

பாபா திரைப்படத்தில் சூப்பர்ஸ்டாரிடம் தலைவர் கவுண்டர் ஒரு டயலாக் சொல்லுவார். பஞ்ச் பேசப்போகும் சூப்பர்ஸ்டாரைத் தடுத்து, ‘பாபா! பஞ்ச் பேசப்போரியா? இன்னைக்கு தமிழ்நாட்டுல நேத்து வந்த பசங்கள்லாம் பஞ்ச் பேசிட்டுத் திரியிராங்க’ என்று. உண்மையில் விஜய்யும், அஜித்தும் சிறிது கேப் விட்ட நேரத்தில் எக்கச்சக்கமான ஹீரோக்கள் தமிழ்சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்கள். கடந்த மூன்று, நான்காண்டுகளாகத்தான் இருவரும் தலையெடுத்து இருக்கிறார்கள். இக்காலக்கட்டம் இருவருக்குமே ஜாக்பெட் என்றே சொல்லலாம். விஜய்யின் ஒவ்வொரு திரைப்படத்தின் வசூலையும் அஜித்தின் திரைப்படமும், அஜித்தின் ஒவ்வொரு திரைப்படத்தின் வசூலையும் விஜய்யின் திரைப்படமும் மட்டும்தான் முறியடிக்கமுடியும் என்பதை ப்ரூவ் செய்யும்விதமாக இருவரும் போட்டிப்பொட்டுக்கொண்டு நல்ல திரைப்படங்களை ரசிகர்களுக்கு அளித்துவருகிறார்கள். புலியின் ரெக்கார்டை வேதாளம் அடித்ததுபோல் வேதாளத்தின் ரெக்கார்டை இந்த தெறி அடிக்குமா என்பதனைப் பார்க்கலாம்.

சத்ரியன் + பாட்ஷா + டெம்பர் + என்னை அறிந்தால் = இதுதாங்க தெறி. கேரளாவில் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்துவரும் பேக்கரிக்கடைக்காரரான ஜோசப் குருவிலா தன் மகள் நிவேதிதாவுடன் ஜாலியாக வாழ்கிறார்.  நிவேதிதாவின் ஸ்கூல்மிஸ்ஸான எமி ஜாக்சன், ஒருநாள் நிவேதிதாவைப் பள்ளிக்குக்கூட்டி செல்லும் வழியில் சில ரவுடிகளால் ஆக்சிடன்ட் ஆக, போலிசில் கேஸ் கொடுக்கிறார். போலிஸ் என்றதும் பதட்டமாகும் ஜோசப், எமியைத் திட்டிவிட்டு தயங்கித்தயங்கி ஸ்டேசன் செல்கிறார். அங்கு ஒரு போலிஸ்காரர் ஜோசப்பைப் பார்த்து விஜய்குமார் என்று அழைக்கிறார். இதனால் சந்தேகமாகும் எமி, ஜோசப் யாரென்று அறிய கூகுளில் பார்க்கிறார்; பார்த்ததும் ஷாக் ஆகி ஜோசப்பின் வீட்டிற்கு செல்கிறார். அதேநேரத்தில் ஜோசப் வீட்டில் மலையாள ரவுடிகள் ஜோசப்பைப் போட்டு அடித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்நேரம் ஒருவன் குழந்தையைப் போட்டுத்தள்ளலாம் எனச்செல்ல விஷ்வரூபமெடுக்கிறார் ஜோசப். ஒவ்வொருத்தனையும் அடி பின்னிஎடுக்க, அதை எமி பார்க்க உடனே ப்ளாஷ்பேக். 

விஜய்குமார் எனும் நேர்மையான போலிஸ் அதிகாரி ஒரு ரேப்கேஸில் மந்திரி வாணமாமலை ( இயக்குநர் மகேந்திரன்) மகனைக் கொடூரமாக கொன்றுவிடுகிறார். வானமாமலை, சாவைவிடக் கொடுமையான தண்டனையை உனக்குத் தருவேன் எனக்கூறிவிட்டு அதற்கான நேரத்திற்காக காத்திருக்கிறார். இடைப்பட்ட காலத்தில் விஜய், மருத்துவர் சமந்தாவைச் சந்திக்க, காதல் டெவலப் ஆகி கல்யாணம் முடிந்து குழந்தை பிறந்து சந்தோசமாக வாழ்கின்றனர். திடீரென ஒருநாள் பட்டென்று சமந்தாவையும் விஜயின் தாய் ராதிகாவையும் விஜய்யின் கண்முன்னே போட்டுத்தள்ளிவிட்டு, வீட்டு கேஸை ஆன் செய்துவிட்டு கிளம்புகிறார் வில்லன். சமந்தாவின் கடைசி ஆசைப்படி குழந்தையை காப்பாற்றி யாருக்கும் தெரியாமல் மறைந்து கேரளாவில் வாழ்கிறார். இப்போது வில்லனுக்கும் உண்மை தெரியவருகிறது. மீண்டும் கொலைமுயற்சி; இதையெல்லாம் எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் தெறி.

இந்த அட்லி இருக்காரே! அவரைப்போல் நூதனமாக திருடும் ஆசாமியை நான் பார்த்ததே இல்லை. மௌனராகத்தை உல்டா செய்து ராஜாராணியாக்கியவர் இதில் என்னென்ன திரைப்படத்தையெல்லாம் திருடி ரெடி பண்ணமுடியுமோ அத்தனையும் செவ்வனே செய்துள்ளார்.  முதல் அரைமணிநேரம் பாட்ஷா மற்றும் என்னை அறிந்தால் அடுத்த அரைமணிநேரம் டெம்பர். இடையில் காதல் காட்சிகள் எல்லா புதுவிசயம். அதேபோல் இரண்டாம்பாதியில் சத்ரியன்; கிளைமேக்ஸில் வரும் நாற்காலி சண்டைக்காட்சி  ஊசரவள்ளி; சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சையெடுத்து சம்பாதிக்கும் ஆட்களை அடிப்பது விக்ரமார்க்குடுவில் விக்ரம் ராத்ததோரின் இன்ட்ரே சீன். ஆனால் இவ்வளவு பிரச்சனைகளுக்குமிடையில் திரைப்படம் எனக்கு பிடிக்கக்காரணம் விஜய். 

உண்மையில் விஜய்யிடம் இவ்வளவு மேனரிசங்கள் உள்ளதா என்று ஆச்சரியப்படவைத்த திரைப்படம். ஜாலியான தகப்பனாக, மகனாக, காதலனாக, கணவனாக, தெறி போலிசாக என ஒவ்வொரு கேரக்டரையும் உள்வாங்கி செய்துள்ளார். சீன் போடாத, சீனான போலிசாக விஜய் வரும் காட்சிகள் எல்லாம் விசில் பறக்கிறது. டயலாக் டெலிவரி, பாடு மாடுலேசன், கெட்டப் என ஒவ்வொன்றிலும் விஜயை முழுமையாக காட்டிய திரைப்படம் இதுதான். உண்மையில் விஜய் ஹேட்டர்சைக் கூட விஜய் ஈர்த்துவிடும் அளவிற்கு செய்துள்ளார். சமந்தாவின் குடும்பத்தை முதலில் சந்திக்கும்போது அவருடைய ஆக்டிங் மற்றும் அந்த வசனங்கள் எல்லாம் சூப்பர் என்றால் அதைத்தொடர்ந்து வந்த சண்டைக்காட்சியை முடித்துவிட்டு நேராக வில்லனிடம் சென்று ‘எனக்கு உன்னவிட பெரிய பெரிய வில்லனுங்கள எல்லாம் சமாளிக்கனும். நான் வரேன்’ என்று பேசிவிட்டு வரும்போது கிளாஸ். சமந்தா, சாவதற்குமுன் இருவரும் பேசிக்கொள்ளும் காட்சி, கிளைமேக்ஸில் வில்லனுடைய ஆட்களையெல்லாம் அடித்து, துவம்சம் செய்துவிட்டு அசால்டாக பேசும் காட்சி, டூர் போக இருக்கும் தன் மகளிடம் அட்வைஸ் செய்யும் காட்சி என விஜய்க்கென்றே பார்த்து பார்த்து எடுத்திருக்கிறார்கள். 

விஜய்யைத்தாண்டி வந்தால் மீனாவின் குழந்தை. அக்குழந்தை வரும் காட்சிகளும் அதுபேசும் வசனங்களும் அட்டகாசம். விஜய் ஒருபக்கம் அட்வைஸ் செய்துகொண்டிருக்கும்போது ‘நானும் வரட்டா பேபி’ என்று விஜய் கேட்க ‘டூர் என்னமாதிரி பேபிங்களுக்குத் தான் பேபி; நான் உன்ன பேபினு கூப்டரதுக்காகலாம் உன்ன விடமாட்டங்க பேபி’ என்று அது சொல்லும்போதெல்லாம் அழகாய் இருக்கும். மலையாள ரவுடிகள் பிரச்சனை செய்யும்போது ‘டேய் நில்லுங்கடா. சாரி சொல்லுங்கடா’ என மிரட்டும் காட்சி கிளாஸ். 

மெயின் வில்லனாக மகேந்திரன்; விஜய்யின் குடும்பத்தைக்கொல்லும் காட்சியிலும், கிளைமேக்ஸ் காட்சியிலும் தன் நடிப்புத்திறமையைக் காட்டுகிறார். எல்லாரையும் அடித்துநொறுக்கும் விஜயைப்பார்த்து வெல் குட் என்று அவர்சொல்லிவிட்டு காட்டும் ரியாக்சன் அபரிதம்.  மொட்டை ராஜேந்திரன், எமி ஜாக்சனெல்லாம் படத்தின் அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட் என நினைக்கிறேன். இருவரும் படம் முழுக்க வந்தாலும் ஒருவேலையும் இல்லை. சமந்தாவிற்கு என்ன தான் நடிப்பு, அழகு இருந்தாலும் அவருடைய நீளமான வாய் அவர் அழகைக் கெடுத்துவிடுகிறது. ராதிகா வழக்கம்போல  தான் ஒருமுதிர்ந்த வாணி-ராணி என்பதை அழகாய் நடித்து நிருபித்துள்ளார். 

ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் கலர்ஃபுல்லாகத்தான் எடுத்திருக்கிறார். ஆனால் சில காட்சிகள் அவுட் ஆஃப் போகஸ். எடிட்டர் ரூபன் முடிந்தவரை கத்தரித்து இருக்கிறார். ஆனால் ராங்கி பாடலை எதுக்கு படத்திலிருந்து எடுத்தார்கள் எனத்தெரியவில்லை. வெல் இசையமைப்பாளர் ஜ.வி.பிரகாஷ்தான் சமிபத்தில் எனக்குத்தெரிந்து எல்லா திரைப்படங்களிலும் ஹிட்டடித்துக்கொண்டிருக்கும் நபர். திரிஷா இல்லைனா நயன்தாரா, ஈட்டி, கொம்பன், காக்கா முட்டை என மியூசிக்கல் ஹிட் அடித்தவரின் 50-வது படம். பாடல்கள் வ்வந்த புதிதிலே எனக்கு டீனா,மீனா ஈக்கா பாடலும் ராங்கி மற்றும் ஜித்து ஜில்லாடி ஆகிய பாடல்கள் பிடித்திருந்தது. ஆனால் செல்லக்குட்டி எனும் விஜய் பாடிய பாடல்தான் சமீபத்தில் அவர் பாடியதிலேயே மொக்கையான பாடல். பேசாமல் டீனா மீனா பாடலை விஜய் பாடியிருக்கலாம். பிண்ணனி இசை அட்டகாசம். ஆனால் பில்டிங் சண்டைக்காட்சியில் மட்டும் கொஞ்சம் சொதப்பல். தெறி தீம் மியூசிக்கை சரியாக உபயோகப்படுத்தவில்லை. 

படத்தின் பலங்களென பார்த்தால் விஜய், மீனாவின் மகள், மகேந்திரன், வசனம், பிண்ணனி இசை, ஒளிப்பதிவு, கேரக்டர் நேர்த்தி ஆகியவற்றை சொல்லலாம். படத்தின் பலவீனம் என்று பார்த்தால் இன்கம்ப்ளீட் ஃபீல், அட்லி கொடுத்த ஓவர்பில்டப், பல திரைப்படங்களில் இருந்து சுட்டு எடுத்து பட்டி, டிங்கரிங் பார்த்த திரைக்கதை ஆகியவற்றைக் கூறலாம்.

மொத்தத்தில் இது விஜய் திரைப்படம்; அட்லி திரைப்படம் என்றெல்லாம் சொல்லமுடியாது. இன்னும் சொல்லமப்போனால் அட்லி இந்த திரைப்படத்தில் சொதப்பியிருகிறார்; ஆனால் விஜய் சொதப்பவில்லை. விஜய்க்காக கண்டிப்பாக பார்க்கலாம். 
உங்கள் விருப்பம்

4 comments:

 1. சிறந்த திரைக் கண்ணோட்டம்

  இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

  ReplyDelete
 2. Your reviews are usually good. And, here also you have proved it. Well done sir!!!

  ReplyDelete
 3. //இந்த அட்லி இருக்காரே! அவரைப்போல் நூதனமாக திருடும் ஆசாமியை நான் பார்த்ததே இல்லை. //
  Rofl

  ReplyDelete