X-Men : APOCALYPSE – சினிமா விமர்சனம்



வெல், X-MEN சீரிஸ்களைப் பற்றித் தனியாக சொல்லத்தேவையில்லை. ஹாலிவுட் ரசிகர்கள் அனைவருக்கும் பரிட்சயமான பெயர்களில்  மிகமுக்கியமான ஒன்று X-MEN. சூப்பர்ஹீரோக்கள் என்றாலே உடனுக்குடன் நியாபகம் வரும் மார்வல் காமிக்ஸ் படைத்த மிகமுக்கியமான காமிக்ஸ்களில் எக்ஸ்மேனும் ஒன்று. காமிக்ஸ் உலகபிதாமகன் ஸ்டான் லீயால் 1963 உருவாக்கப்பட்ட X-MEN இன்று 2016-ல் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 10 திரைப்படங்களில் ஒன்றாக இருக்கிறது. அதற்கு மிகமுக்கிய மூன்று காரணங்கள் என்று பார்த்தால் இயக்குநர் ப்ரைன் சிங்கர், FIRST CLASS-ன் இரண்டாம் படைப்பான DAYS OF FUTURE மற்றும் இதுவரை சூப்பர் ஹீரோக்கள் கண்டிராத மிகபலசாலியான வில்லன் என் சபா நர் என்றழைக்கப்படும் அபோகலிப்ஸ்.  வெளிவர இருக்கும் அபோகலிப்சை, உருவான இடமான அமெரிக்காவிற்கு முன்பே நாம் காண இருக்கிறோம். ஆம், இத்திரைப்படம் உலகெங்கும் வெளியாகுவதற்குள் ஒருவாரம் முன்பே இந்தியாவில் ரிலிஸ் செய்யப்படுகிறது. இந்தியாவில் X-MEN ஃப்ரான்சீஸ்களுக்கென மிகப்பெரிய ஃபேன் பேஸ் இருப்பதால் இந்தியாவில் முதலில் ரிலிஸ் செய்வதாக ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது. (இப்போதெல்லாம் ரிலிசாகும் பெரும்பான்மையான ஹாலிவுட் திரைப்படங்கள் மற்ற நாடுகளில் ரிலிசாகும் முன்பே இந்தியாவிலும் சீனாவிலும் ரிலிசாகிவிடுகிறது.)

இதுவரை வெளிவந்த X-MEN திரைப்படங்களை மூன்றாக பிரிக்கலாம். முதலில் வெளிவந்த X-MEN, X-2 மற்றும் THE LAST STAND ஆகியவற்றை ஒரு ட்ரையாலஜி ஆகவும், WOLVERINE இரு பாகங்களாகவும், FIRST CLASS, DAYS OF FUTURE மற்றும் வரவிருக்கும் APOCALYPSE  ஆகியவற்றை ஒரு ட்ரையாலஜி எனவும் காலத்தைக் கணக்கில் கொண்டு மூன்றாக பிரிக்கலாம். இவற்றில் முதல் மூன்று திரைப்படங்கள் நிகழ்காலத்தில் நடப்பது போலவும், WOLVERINE-ன் இரு பாகங்களும் (தற்போது வரவிருக்கும் மூன்றாம் பாகத்தையும் சேர்த்துக்கொள்ளவும்) லோகன் யார் என்பதைக் கூறும் தனிக்கதையாகவும், FIRST CLASS ட்ரையாலஜி இறந்த காலத்தில் (1980-களின் மத்தியில்) நடப்பதாகவும் எடுக்கப்பட்டிருக்கும். 

மார்வலின் தந்தை ஸ்டான் லீ உருவாக்கிய இந்த X-MEN கதாபாத்திரங்களை திரையில் கொண்டு வர, இன்று நேற்றல்ல, கிட்டதட்ட 32 வருடங்களுக்கு முன்பே பரபரப்பாக வேலைகள் நடந்தன. மார்வல்லின் எடிட்டரான ராய் தாமஸ் மற்றும் கெர்ரி ஆகியோர் X-MEN-கான திரைக்கதையை எழுதி முடித்துவிட்டு, அப்போதைய காபிரைட் ப்ரொடக்சன் கம்பனியான ஒரியனை அணுகியது. ஆனால் அந்த திரைக்கதையைத் திரைப்படமாக்க போதிய அமௌன்ட் இல்லை என்று ஒரியன் நிறுவனம் கைவிரித்துவிட்டது. அதன்பின் ஸ்டான் லீயின் முயற்சியால் ஒரியனிடம் இருந்து X-MEN  கரோல்கா நிறுவனத்திற்கு கைமாறியது.   X-MEN –ஐத் திரையில் கொண்டுவர நடத்தப்பட்ட டிஸ்கஷனில் இடம்பெற்ற மிகமுக்கியமான இருவர் ஜேம்ஸ் கேமரூன் மற்றும் கேத்ரின் பிஜ்லோ. கேமரூனைப் பற்றி நாயக்கன்பட்டியில் 7-வது படிக்கும் மாணவருக்குக் கூடத் தெரியும் என்பதால் கேத்ரீனைப் பற்றிப் பார்க்கலாம். 2008 அகாடமி அவார்டைத் தட்டிய இவர் ஹர்ட் லாக்கர் திரைப்படத்தை இயக்கி ஓவர்நைட்டில் உலகப்புகழ் பெற்றவர்.  அதைத்தொடர்ந்து இயக்கிய ஜீரோ டார்க் தர்ட்டியும் விருதுகளைச் சம்பாதிப்பதற்காக உருவாக்கப்பட்டதுபோல் எண்ணற்ற விருதுகளைத் தட்டிச் சென்றது. கேமரூன் தயாரிப்பில் கேத்தரின் இயக்குவதாக இருந்த  அந்த ப்ராஜக்ட்டும் மேகரூனின் குளறுபடியால் நிறுத்தப்பட்டது. இதன்காரணமாக இத்திரைப்படத்தின் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த கார்கோலோ நிறுவனம், பல்வேறு காரணங்களால் தயாரிப்பைவிலக்கிவிட்டு, காமிக்ஸ் மீதான தன் உரிமையை மார்வலிடமே வழங்கியது. மார்வல் வந்த விலைக்கு விற்றுவிடலாம் என்ற முடிவில் கொலம்பியா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த, அக்காலக்கட்டத்தில் அனிமேசன் X-MEN டி.வி. சீரியஸ் ஒருபுறம் வெற்றியடைந்தது. இதைக்கண்ட ஃபாக்ஸ் நிறுவனம் உரிமையை மார்வலிடம் பேசி வாங்கியது.

உரிமையை வாங்கியதும் ப்ராட் பிட் நடிப்பில் டேவிட் ஃபிஞ்சரின் இயக்கித்தில் வெளியான செவன் திரைப்படத்தின் திரைக்கதையை எழுதிய ஆன்ட்ரூ, ஸ்கைஃபால், த அவியேட்டர், ஸ்பெக்டர், ஹுகோ, க்ளாடியேட்டர் போன்ற திரைப்படங்களிடன் திரைக்கதை ஆசிரியர் ஜான் லோகன், த கேபின் இன் தி வுட்ஸ், அவெஞ்சர்ஸின் இருபாகங்களை இயக்கிய ஜோஸ் வேடன் மற்றும் எழுத்தாளர் மைக்கேல் கேபோன் போன்றோர்களை அணுகியது. இவர்களிடமெல்லாம் காமிக்ஸை திரைப்படமாக்கும் சாத்தியத்தைப் பற்றி விசாரித்த ஃபாக்ஸ் நிறுவனம் 1996-ல் காமிக்ஸைத் திரைக்குக் கொண்டுவரும் தன் திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்தது.

பொதுவாக காமிக்ஸ்களில் பெரும் வெற்றிபெற்ற கேரக்டர்களைத் திரைப்படமாக்க முயற்சிக்கும் எந்தவொரு நிறுவனமும், முதல் திரைப்படத்தைப் பெரிய இயக்குநர்களைக் கொண்டே இயக்கத் திட்டமிடும். எடுத்துக்காட்டாக 1966-ல் வெளியான பேட்மேனிற்கு திரைத்துறையில் பலவிதமான அனுபவம் வாய்ந்த லெஸ்லியை ஃபாக்ஸ் நிறுவனம் பணிக்கு அமர்த்தியது. இதேபோல் சூப்பர்மேன் திரைப்படத்தையும் குறிப்பிடலாம். 1978-ல் வெளிவந்த சூப்பர்மேன் திரைப்படத்தை இயக்கியவர் ரிச்சர்ட் டோன்னர். ஓமன் திரைப்படத்தை இயக்கி உலகப்புகழ் பெற்றிருந்த அவருக்கு சூப்பர்மேன் திரைப்படத்தின் திரைக்கதையை எழுதித் தந்தவர் மரியோ பூசா. இப்படி இருக்க ஃபாக்ஸ் நிறுவனம் X-MEN ஃப்ரான்சீஸின் முதல் திரைப்படத்தை இயக்க நியமித்த இயக்குநர் ப்ரைன் சிங்கர். பப்ளிக் அக்ஸஸ் எனும் சுமாரன திரைப்படத்தை தந்திருந்த ப்ரைன் சிங்கருக்கு பேர் வாங்கிக்கொடுத்த திரைப்படம் என்றால் அது யூசுவல் சஸ்பெக்ட்ஸ்.  ப்ரைன் சிங்கரை அப்போது எந்தவொரு தயாரிப்பு நிறுவனமும் ஏற்றுக்கொள்ள முன்வராத காரணத்தால் யூசுவல் சஸ்பெக்ட்ஸ் திரைப்படத்தைத் தன் சொந்தக்காசில் தயாரித்து வெளியிட்டார். போதிய விளம்பரமின்மை காரணத்தால் பெரும் வெற்றியடைய வேண்டிய திரைப்படம் சூப்பர்ஹிட்டோடு நின்றது. இந்த திரைப்படத்தின் தாக்கம் ஸ்கேரிமூவியின் முதல்பாகத்திலேயே இடம்பெறும் அளவுக்கு சென்றது. இப்போது ப்ரைன் சிங்கருக்கு மீடியா வெளிச்சம் கிடைத்தது. அடுத்த என்ன செய்வார் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்தபோது அப்ட் பிப்புள் எனும் திரைப்படத்தை இயக்கினார். யூசுவல் சஸ்பெக்ட்ஸ் இயக்குநர் என்பதால் சோனியின் ட்ரைஸ்டார் நிறுவனம் திரைப்படத்தை வாங்கி திரையிட்டது. படம் அட்டு ப்ளாப் ஆகியது. 

இப்போது யோசித்துப் பாருங்கள். இதுவரை வெறும் இரண்டே திரைப்படங்கள் மட்டுமே ஒரு இயக்குநர்; அதிலும் ஒரு திரைப்படம் அட்டு ப்ளாப். இவரை நம்பி ஃபாக்ஸ் நிறுவனம் 60 மில்லியனைக் கொட்டத் தயாராக இருந்தது. இதற்கு இரண்டு காரணங்களில் ஒன்று யூசுவல் சஸ்பெக்ட்ஸ்; மற்றொன்று இத்திரைப்படத்தை இயக்குவதற்காக இதற்குமுன் நியமித்த இருவரில் ஒருவரான சின் சிட்டி இயக்குநர் ராபர்ட் இத்திரைப்படத்தை நிராகரிக்க, மற்றொருவரான ப்ரெட் ராட்னருக்கும் ஃபாக்ஸ் நிறுவனத்திற்கும் சண்டை வர இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய டாம் டீசாண்டோ சிங்கரை இத்திரைப்பபடத்திற்கு இயக்குநராக்கி விட்டார். ப்ரைன் சிங்கரை அப்ட் பிப்புள் திரைப்படம் வருவதற்குமுன்பே X-MEN-காக புக் செய்துவிட்டதால் ஃபாக்ஸ் நிறுவனத்திற்கும் வேறுவழி தெரியவில்லை. இத்தனைக்கும் சூப்பர்ஹீரோ கான்செப்ட் பற்றி சரிவரத்தெரியாதவர் சிங்கர்; ஆனால் சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் இயக்கவேண்டும் என்பது அவர் கனவு. அவர் இயக்கிய இரண்டு திரைப்படங்கள் மற்றும் குறும்படம் ஆகியவை அனைத்துமே மிகமெதுவாகத்தான் நகரும். இது ஒருபுறம் இருக்க முதல்பாகத்திற்கு திரைக்கதை எழுத நியமிக்கப்பட்ட டேவிட் ஹெய்டருக்கு முதல் திரைப்படமே இதுதான். அதற்குமுன் நடிகராக  பெயர் தெரியாத சில படங்களில் நடித்தும், ஒன்றிரண்டு திரைப்படங்களின் தயாரிப்பாளராகவும் இருந்த டேவிட் ஹெய்டர் இத்திரைப்படத்தின் திரைக்கதை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இதுதான் இப்படி என்றால் படத்தின் கதையை எழுத ப்ரைன் சிங்கர் தன்னுடன் இணைத்துக் கொண்டது சிங்கரின் நீண்டகால நண்பரான டாம் டிசான்டோ . அவருக்கும் கதையெழுதுவது இதுமுதல் திரைப்படம். படத்தின் மிகமுக்கியமான மூன்று துறைகளையும் இதுவரை எந்தவொரு அனுபவமும் இல்லாதவர்கள் நியமிக்கப்பட்டார்கள்.  ஆனால் நல்லவிஷயம் என்னவெனில் படத்தின் இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் உட்பட மற்ற டெக்னீஷியன்கள் அனைவருமே பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர்கள்.

இவ்வளவு நடந்தபின் படத்திற்கு பூஜைபோட்டு ஆரம்பிப்பார்கள் எனப்பார்த்தால் அதுதான் இல்லை. மீண்டும் மீண்டும் உள்ளுக்குள்ளே பல பூசல். திரைக்கதை ஆசிரியராக தனது நண்பர் க்றிஸ்டோபர் மொக்கொய்ரியை நியமிக்கவேண்டும் என சிங்கர் கேட்க, அது முடியாது என ஃபாக்ஸ் சொல்ல, பின் அடித்துப்பிடித்து அவரையும் உள்ளே இழுத்துவந்தார் சிங்கர். இப்படியாக பல சிக்கல்களுக்கு மத்தியில் திரைப்படத்தின் வேலைகள் துவங்க நடிகர் தேர்வு துவங்கியது. A BEUTYFULL MIND, L.A.CONFIDENTIAL போன்ற திரைப்படங்களின் நாயகன் ரசல் க்ரோவை சென்று பார்த்தார் சிங்கர். இவரை அணுகியதான் காரணம் வொல்வொரின் கேரக்டரில் நடிக்க. ஆனால் ரசல் க்ரோ கால்ஷிட் பிரச்சனையால் மறுத்தார்.  அந்த சமயத்தில் அவர் நடித்துக்கொண்டிருந்த திரைப்படம் ரிட்லி ஸ்காட்டின் க்ளாடியேட்டர். சரி என்று ஹூயு ஜாக்மேனிடம் வந்தார். எதோவொன்று மனதில் உதைக்க மீண்டும் வொல்வரின் கேரக்டருக்கு ஆல்தேடி கிளம்பினார் சிங்கர். இம்முறை அவர் அணுகியது டக்ரே ஸ்காட். அவரோ மிஷன் இம்பாஸிபிள் திரைப்படத்தின் இரண்டாம்பாகத்தில் வில்லனாக பிஸியாக இருக்க, வேறுவழியில்லாமல் ஹாலிவுட்டில் யாரென்றே தெரியாத ஜேக்மேனையே வொல்வரைனாக தேர்ந்தெடுத்தார். 

ஒருநிமிடம் அப்படியே 1998-ஐ விட்டுவிட்டு 2012-க்கு வாருங்கள். நோவா,  தி மேன் வித் ஐர்ன் பிஸ்ட்ஸ்,  ராபின் ஹுட், பாடி ஆஃப் லைஸ், எ ப்யூட்டிஃப்ல் மைன்ட் , தி கிளாடியேட்டர் L.A. CONFIDENTIAL  போன்று பல படங்களில் கலக்கிய ரசல் க்ரோ 2012-ல் LES MISERABLES எனும் திரைப்படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடித்தார். அப்போது முதல் மற்றும் முக்கியமான ஹீரோ யாரென்று கேட்கிறீர்களா? 1998-ல் ஹாலிவுட்டிற்கு யாரென்றே தெரியாத ஹூயூ ஜேக்மேன் தான் அது. 
இப்போது மீண்டும் 1998-ற்கே செல்லலாம்.  நடிகர் தேர்வில் மட்டுமல்லாமல் இசையமைப்பாளர் தேர்விலு பற்பல குழப்பங்கள் ஓடியது. சிங்கர் ஒருவரை நியமித்தால் ஃபாக்ஸ் நிறுவனம் நீ என்ன சொல்றது? நான் என்ன கேக்றது என்பதுபோல் வேறொருவரை நியமிக்க சொல்லி வற்புறுத்தும். சரி தயாரிப்பு நிறுவனம் சொல்வதையாவது கேட்போம் என்று சிங்கர் முடிவெடுத்தால், அந்த ஆள் அவைலபிளாக இருக்கமாட்டார். சரி நாம்  முதலில் பார்த்த ஆளையே நியமிப்போம் என்று அங்கு சென்றால் அவரும் பிஸியாகிவிடுவார். என்னடா இது என்று சிங்கர் வாழ்க்கையையே வெறுத்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எப்படியோ அடித்துப்பிடித்து ஷூட்டிங்கை நடத்தினால் கொடுத்த பட்ஜெட்டைத் தாண்டிப்போக ஆரம்பித்தது. 60 மில்லியனில் முடிக்கப்பட வேண்டிய திரைப்படம் 70 மில்லியனில் வந்து நின்றது. 

இன்னும் 5 மில்லியன் கொடுத்தா முடிச்சிடலாம் என சிங்கர் சொல்ல, அவரை ஏதோ சொத்தைப்பிரிக்க வந்த பங்காளியைப் போல் முறைத்தது ஃபாக்ஸ். நீ மட்டும்தான் எங்ககிட்ட இருக்க டைரக்டரா? ஸ்பில்பெர்க்க வச்சி மைனாரிட்டி ரிப்போர்ட் எடுத்துட்டு இருக்கோம். அதுக்கு செலவு பண்ணவா? இல்ல உனக்கு செலவு பண்ணவா? என டோஸ் விட வழக்கம்போல டாம் டீசான்டோ தலையிட்டு பேசி வாங்கி்க்கொடுக்க ஷூட்டிங்கை முடித்துவிட்டு ப்ரி-ப்ரொடக்சன் வேலையை ஆரம்பித்தார்.  சி.ஜி. செய்தபின் பார்த்த சிங்கருக்கு ஏமாற்றம் வர, வேறொருவரை வரவைத்து சி.ஜியை முடித்து வெளியிட்டார். ஃபாக்ஸின் நம்பிக்கை வீண்போகவில்லை. X-MEN ஃப்ரான்சீஸின் முதல் திரைப்படம் பெரும் வெற்றியடைந்ததோடு நல்ல பெயரையும் சம்பாதித்தது. அதுவரை காமிக்ஸ்களைத் தழுவி வெளிவந்த திரைப்படங்களுக்கு மத்தியில் X-MEN தனியாக ஒளிவிட்டது. 

இவ்வளவு பெரிதாக விக்கிபீடியாவை தமிழில் ட்ரான்ஸ்லேட் செய்து நான் கொடுக்கக் காரணம், இத்திரைப்படம் ஊத்திக்கொண்டிருந்தால் இன்று X-MEN ஃப்ரான்சீஸ் தொடர்ந்து இவ்வளவு தூரம் வந்திருக்குமா என்பது சந்தேகம்தான். இத்திரைப்படம் கொடுத்த தைரியத்தில் வதவதவென X-MEN சீரிஸை எடுக்க ஆரம்பித்தது ஃபாக்ஸ்; ஆனால் கவனமாக, மிக கவனமாக ஒவ்வொரு அடியையும் எடுத்துவைத்தது. ஒவ்வொரு திரைப்படத்தின் தரத்தையும் மெருகேற்றிக் கொண்டே வந்தது. அத்துடன் ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒரு கன்டினியூவிட்டியை முன்பே பிளான் செய்துவைத்தது என்றும் கூறலாம். ஆனால் இவ்வளவு கஷ்டப்பட்டு எடுக்கப்பட்ட ஃப்ரான்சீஸின் எட்டாவது திரைப்படமான (ஒன்பதுதான் ஆக்சுவல் கணக்கு. இந்த ஆண்டு சாதாரணமாக வெளியாகி அசாதரண வெற்றி பெற்ற டெட்பூலுடன் சேர்த்து ஒன்பது ) அபோகலிப்ஸ், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்று பார்ப்போம்.

ட்ரைலரைப் பார்த்தவர்கள் அனைவருக்குமே தெரிந்திருக்கும். உலகின் முதல் மியூட்டன்டான அபோகலிப்ஸ், ஏறத்தாழ 5600 வருடங்களுக்குப்பின் மீண்டும் எழுந்து உலகை அழிக்க ஆரம்பிக்கிறது. அபோகலிப்ஸின் படைப்பிரிவில் 4 ஹார்ஸ்மேன் என்றழைக்கப்படும் நான்கு தளபதிகளாக மெக்னிட்டோ, ஸ்டோர்ம், ஸைலாக், ஏஞ்சல். அவர்களை எதிர்க்கும் ப்ரொபசர் சேவியரின் அணியில் ஸ்காட், ஜேன், க்யூக் சில்வர், மிஸ்டிக், நைட் க்ராலர், பீஸ்ட், ஹவாக் ஆகியோர் இடம்பெறுகின்றனர். நிற்க! இவர்களெல்லாம் யார் மற்றும் இந்த படத்துடன் தொடர்புடைய முந்தைய திரைப்படங்கள் எவை என்பதை முன்னமே கூறிவிடுகிறேன். தெரிந்துகொண்டு பார்க்கும்பட்சத்தில் படத்தில் இடம்பெறும் கேரக்டர்களின் பிண்ணனியை அறியலாம். X, X2, X3, FIRSTCLASS, ORIGINS WOLVARINE, DAYS OF FUTURE ஆகிய ஆறு திரைப்படங்களையும் கண்டிப்பாக பார்த்தாலொழிய இத்திரைப்படத்தின் பிண்ணனி குழப்புவதற்கான வாய்ப்புகள் அதிகம். எடுத்துக்காட்டாக மெக்னிட்டோவிற்கென்று ஒரு சின்ன ப்ளாஷ்பேக் வரும்போது FIRST CLASS பார்க்காதவர்களுக்கு புரிவது கடினம். சார்ல்ஸ் சேவியருக்கும் மெக்னிட்டோவுக்கும் ரேவனுக்கும் இடைப்பட்ட உறவினை விளக்க அத்திரைப்படம் உதவும். மேலும் இப்போதைய மெக்னிட்டோ எதற்காக தலைமறைவான வாழ்க்கை வாழ்கிறார் என்பதை அறிந்துகொள்ள DAYS OF FUTURE வும் உதவும். இடையே கெஸ்ட்டாக வரும் வொல்வரினுக்கும் ஸ்ட்ரைக்கருக்குமிடைப்பட்ட உறவை உணர DAYS OF FUTURE மற்றும் ORIGINS WOLVARINE தேவைப்படுகிறது. மயுராவிற்கும் சேவியருக்குமான உறவை அறிந்துகொள்ள FIRST CLASS தேவைப்படுகிறது. இப்போது மெயின் கதைக்கு வரலாம்.

கி.மு. 3600-ல் எகிப்தில் துவங்குகிறது திரைப்படம். என் சபா நர் என்றழைக்கப்படும் பவர்ஃபுல் மியூட்டன்ட் நமக்கு அறிமுகமாகிறான். அவனுடைய ஸ்பெசணல் என்னவென்றால் அவனால் கூடு விட்டு கூடு பாய முடியும். அவன் யாருடைய உடம்பில் புகுகிறானோ அவர்களுடைய சக்தியைஅப்படியே பெற்றுக்கொள்வான். எகிப்தில் வொல்வரின் போன்று குணமடையும் சக்தியை பெற்ற ஒரு மியூட்டன்ட் உடலில் புகுந்து கொள்ளும்போது அங்கிருக்கும் புரட்சியாளர்களால் நிரந்தர உறக்கமடைகிறார். அவரை மீண்டும் ஒருகட்டத்தில் உறக்கத்திலிருந்து விழித்தெழ வைக்கிறார்கள். விழித்தெழும் அபோகலிப்ஸ் சந்தையில் தன் சக்தியை பயன்படுத்தி திருடும் ஸ்டோர்மைக் கண்டறிந்து தன் அணியில் சேர்த்துக்கொள்கிறார். இவ்வாறே ஏஞ்சல், ஸைலாக் ஆகியோரை சேர்த்துக்கொள்ளும் அபோகலிப்ஸ் மெக்னிட்டோவிடம் வருகிறார். மெக்னிட்டோ DAYS OF FUTURE-ல் ஏற்படுத்திய விபத்துகளால் தலைமறைவாகி சாதாரண இல்லறவாழ்க்கை வாழ்கிறார். ஒருகட்டத்தில் அவர் யாரென்று அறியும் போலிஸ் அவரைச் சுற்றி வளைக்க அந்தநேரத்தில் தன் மனைவியையும் மகளையும் இழந்துவிடுகிறார். மீண்டும் மனிதர்களின் மீது பயங்கர கோவத்தில் இருக்கும் மெ்கனிட்டோ அபோகலிப்ஸ் உடன் சேர்ந்துகொள்கிறார். அபோகலிப்ஸ் தன்னுடைய அல்டிமேட் சக்தியைப் பயன்படுத்தி தன் அணியில் உள்ள நால்வரின் பவரையும் அதிகரிக்க வைக்கிறார். இதை எல்லாம் மிகமிக லேட்டாக ரேவன் மூலமும் மயுரா மூலமும் அறியும் சேவியர் அபோகலிப்ஸைத்தடுக்க முயற்சிக்கும்போது சேவியரைக் கடத்துகிறான் அபோகலிப்ஸ். சேவியரின் உடலில் கூடு விட்டு கூடு பாய முயற்சிக்கிறான் அபோகலிப்ஸ். இதை எல்லாம் மீதி உள்ள மியூட்டன்ட்கள் எப்படித் தடுத்தார்கள் என்பதே மீதிக்கதை.

முதலில் அபோகலிப்ஸைப் பற்றி அறியவேண்டுமெனில் அவன் ஒரு இம்மோர்ட்டல். அதாவது காமிக்ஸ்படி அழிவில்லாதவன். இன்னும் சொல்லப்போனால் க்ளாஸ்  மியூட்டன்ட் வகையைச் சார்ந்தவன். அவனால் அனைத்தையும் கன்ட்ரோல் செய்யமுடியும். நியாயப்படி அவனுக்கு டெலிபதி சக்தி உள்ளதாக காமிக்ஸ் சொல்கிறது. ஆனால் திரைப்படத்தில் டெலிபதி பவரை அடைய அவன் சேவியரை அணுகவேண்டியாக காட்டப்பட்டுள்ளது. அவன் ஒரு கடவுள் என விளம்பரப்படுத்தப்பட்டு கடைசியில் அவனுக்கும் அழிவு இருக்கிறது என்று காட்டியது அந்தர்பல்டி வகையறா. அவனால் டெலிபதியை எதிர்க்கமட்டுமே முடியும் என்று திரைப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. காமிக்ஸில் வரும் வெறித்தனமான அபோகலிப்ஸைக் காட்டிலும் திரைப்படத்தில் காட்டப்படும் அபோகலிப்ஸ் படு வீக்கானவன். இதற்கு முந்தைய பாகமான DAYS OF FUTURE-ல் வரும் சென்டினல்ஸ் ரோபாட்டை பார்க்கும்போது நமக்கே ஆச்சரியாகும். படுபயங்கர வில்லனாக முன்னிறுத்தப்பட்ட அபோகலிப்ஸ் சென்டினல்சை விட வீக்காக உருவாக்கப்பட்டிருக்கிறான். 

மெக்னிட்டோ – எப்பேர்பட்ட வில்லன். எக்ஸ் மேன் ப்ரான்சீஸில் வொல்வரினை விட மெக்னிட்டோவுக்கு ரசிகர்கள் அதிகம். அப்படிப்பட்ட வில்லனும் அபகலிப்ஸுடன் இணைந்து செய்வது படுசப்பை. இதைவிட அதிபயங்கரமான மெக்னிட்டோவை நாம் பார்த்துள்ளோம். ஏதோ செய்யப்போகிறார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நமக்கு மிஞ்சுவது ஏமாற்றமே. உலகின்  அணுஆயுதங்களையெல்லாம் அபோகலிப்ஸ் ஏவத்தொடங்கும்போது ஏற்படும் ஆச்சரியம் அவை விண்ணில் வீணாக வெடிக்கும்போது அப்படியே புஸ்ஸாகிறது. கடைசியில் எல்லா மியூட்டன்ட்களும் ஒன்றிணைந்து அபோகலிப்ஸை அழிக்க முயற்சிக்கும்போது ஜேன் மட்டுமே அவனை அழிக்கமுடியும் என்று சேவியர் நம்பியது சரியான முடிவெனினும் நம்மால்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வொல்வரின் ஒரே காட்சியில் வருகிறான். கடைசி பாகத்தில் ஸ்ட்ரைக்கரால் பிடிக்கப்பட்ட வொல்வரின்  வரும் காட்சியில் விசில் பறக்கிறது.
பொதுவாக X-MEN சீரிஸ்களைப் பொறுத்த வரைக்கும் திரைக்கதை செம பலமாக விறுவிறுப்பாக இருக்கும். ஆனால் இந்த திரைப்படத்தின் முதல் 1 மணிநேரம் வரை படுதொய்வாக செல்வது பெரும்பலவீனம். கடைசி 20 நிமிடமும் இடையில் குயிக் சில்வரின் காட்சியையும் தவிர சொல்லிக்கொள்ளும்படியான காட்சிகளும் இல்லை. இத்தனைக்கும் DAYS OF FUTURE-கு திரைக்கதை எழுதிய அதே சைமன் கின்பெர்க் தான் இப்படத்திற்கும் திரைக்கதை. எப்படி இதில் கோட்டைவிட்டார் என்றே தெரியவில்லை. முதல் படத்தில் முட்டிமோதி கஷ்டபட்டு எடுத்த ப்ரைன் சிங்கர் இந்த திரைப்படத்தில் ஏன் இந்த சொதப்பு சொதப்பினார் எனத் தெரியவில்லை. இத்தனைக்கும் X, X2, FIRST CLASS (CO - WRITTER), DAYS OF FUTURE என ப்ரைன் சிங்கரால் படைக்கப்பட்ட அத்தனை திரைப்படங்களும் அட்டகாசமானவை. ஆனால், இத்திரைப்படம் X-MEN தொடர்களில் விழுந்த ஒரு ப்ளாக் மார்க் என்றே கூறலாம். 

X-MEN ரசிகர்களுக்கு வேறு வழியில்லை. நாம் ரசிக்கும்படியான சில காட்சிகளுக்காக பார்க்கலாம். X-MEN பார்க்காதவர்கள், பெரிதும் அபிமானமில்லாதவர்கள் பார்த்தால் X-SERIES களின் மீதான எதிர்மறை எண்ணம் உருவாக வாய்ப்புள்ளது. வெறும் கிராபிக்ஸ் மற்றும் 3D பிரியர்கள்  சலுப்புக்கு பார்க்கலாம். X-MEN ப்ரான்சீஸைப் பொறுத்தவரை 3டி எபெக்ட் எப்போதும் பட்டாசாக இருக்கும் என்பதை இத்திரைப்படமும் நிருபித்துள்ளது. டெக்னிக்கலாக ஜெயித்து மெயின் மேட்டரில் ஊற்றிக்கொண்டது அபோகலிப்ஸ். இதுவரை வந்த X-சீரிஸ்களில் நான் மொக்கையென நினைப்பது THE WOLVARIE (2013) மட்டுமே. ஆனால் அந்த திரைப்படமும் நீட்டாக போகும். அதில் ஒரு அட்வெஞ்சர் ஃபில் இருக்கும். ஆனால் இப்போது அபகலிப்ஸ் தான் X-MEN சீரிஸில் படுதொம்மையான படமாக கருதுகிறேன்.

Comments

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

THE PURGE – சினிமா விமர்சனம்