அச்சம் என்பது மடமையடா – சினிமா விமர்சனம்




ஒரு நாவலின் சாராம்சம் கெட்டுவிடாமல், அது கொடுக்கும் தாக்கத்தை அப்படியே திரையில் காட்டும் வல்லமை வெகுசிலருக்கே அமையும். ஆங்கிலத்தில் மார்ட்டின் ஸ்கார்சேசே இதில் வல்லவர். ஒரு நாவலின் முழுமையான திரைவடிவத்தை அவர் திரைப்படங்களில் காணலாம். அந்த திறமை வாய்த்த தமிழின் ஒரே இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் மட்டுமே. அவரின் திரைப்படங்களுல் வேட்டையாடு விளையாடு, மின்னலே, நடுநிசி நாய்கள் தவிர்த்து மற்ற அனைத்தும் ஒரு நாவல் வாசிக்கும் அனுபவத்தைத் தரக்கூடியது. படத்தில் வரும் மெயின் கேரக்டர்களின் மனதையும் நம்மிடம் உணர்ச்சியுடன் வெளிப்படுத்துவார். அதுதான் கௌதம்.

ஆனால் எது ஒருவரின் திறமையோ, அது அவரின் மிகப்பெரிய மைனஸ் பாயின்டாகவும் இருக்கும். கௌதம் வெளிப்படுத்தும் இலக்கியத் தன்மையை, அவருடைய கதாபாத்திரங்கள் நொடிக்கு ஒரு முறை கூறிக்கொண்டே இருக்கும். ஒருநிமிடம் கூட நமது காதுக்கு ரெஸ்ட் கிடைக்காது. எதாவது பேசிக்கொண்டே இருப்பார்கள். அந்த கொஞ்சநஞ்ச ரெஸ்ட் மட்டும் நமக்கு விட்டால் போதும்; கௌதமால் ஆகச்சிறந்த இலக்கிய படைப்பை உருவாக்கிவிட முடியும்.

படத்தின் ட்ரைலரை வைத்தே கதையை எல்லோரும் புரிந்துகொண்டிருக்க முடியும். வேலை வெட்டி இல்லாத சிம்பு; சிம்புவின் தங்கையின் தோழியாக வழக்கம்போல் ஒரு கசங்கல் கூட இல்லாத உடையில் ஹீரோயின்; ரோட் ட்ரிப்; திடீர் ஆக்சன். படம் முழுக்க நம்மை ரெஸ்ட்டே எடுக்கவிடாத வசனங்கள். ஆனாலும் சலிக்கவில்லை. எவ்வளவு நேரம் வசனங்கள் வந்தாலும் நமக்குப் பிடித்திருக்கிறது. ஆங்காங்கே ப்ரில்லியன்டான வசனங்கள் நம்மை கிறங்கடிக்கிறது. காதல் எனும் அழகிய உணர்வை வழக்கம்போல் அழகாய் கடத்திக்கொண்டு செல்கிறார். ஆனால் அவர் செய்த ஒரு காரியம் முதல்பாதி முழுமையும் 5 பாடல்களைப் போட்டது தான். ஒருவேளை இரண்டாம்பாதி த்ரில்லர் கம் ஆக்சன் என்பதால் பாடல் போட்டு அந்த வேகத்தைக் குறைக்க வேண்டாம் என்று எண்ணியிருக்கலாம். அது ஓரளவு வொர்க்கவுட்டும் ஆகியுள்ளது. ஏனெனில் தள்ளிப்போகாத, ராசாளி ஆகிய இரு பாடல்களைத் தவிர்த்து மற்ற அனைத்துப் பாடல்களும் ஏதோ விசுவலால் நன்றாயிக்கிருக்கிறதே ஒழிய, தனியாய் கேட்கும்போது சுத்தம். அதிலும் சோக்காளி பாடல் ரஹ்மான் கேரியரில் எரிச்சலூட்டிய முதல் பாடல் என்றே சொல்லலாம். RAB போடுவதாய் கூறி நம் காதை RABE செய்துள்ளார் ரஹ்மான்.

டேன் மெக்கார்த்தர் ஒளிப்பதிவு பெரிதாய் தெரியவில்லை. ஆனால் ஆக்சன் காட்சிகளில் உதவியிருக்கிறது. எடிட்டிங் மற்றும் நான் லீனியர் எடிட்டிங் இரண்டும் அட்டகாசம். சிறிது தடம்பிறழ்ந்தால் கூட குழப்பியிருக்கும் படியான திரைக்கதையை, மிகச்சரியாக கத்தரித்து பார்வையாளனுக்குள் கடத்தியிருக்கிறார் ஆன்டனி.

சிம்புவின் எனர்ஜி இரண்டாம் பாதியில் மட்டுமே பிரதிபலிக்கிறது. தள்ளிப்போகாதே பாடலில் அவரிடம் எனர்ஜியே இல்லை. அவர் நினைத்திருந்தால் இன்னும் அற்புதமாக அந்த உணர்ச்சியைக் காட்டியிருக்கலாம். சாமியார் ஆனதிலிருந்து சாந்த சொருபியாகிவிட்டார் என நினைக்கிறேன். ஆனால் இரண்டாம் பாதியில் அவரின் நடிப்பு வழக்கம்போல அருமை. என்ன! எதற்கெடுத்தாலும் அடி தொண்டையிலிருந்து ‘கூட வரலாம்ல, ஒவ்வொருத்தனா போடனும்’ என்று பல்லைக் கடித்துக் கொண்டு டயலாக் டெலிவரி செய்திருப்பது தான் உதைக்கிறது. மஞ்சிமா மோகனை கௌதம் தவிர வேறு யார் கையாண்டிருந்தாலும் அழகாய் காட்டியிருக்கமுடியாது. சுமாரான அழகியை அருமையாகக் காட்ட முயற்சித்திருக்கிறார்; அது ஓரளவு வொர்க்கவுட்டும் ஆகியுள்ளது. நண்பன் மகேஷ் கேரக்டர் அட்டகாசம்.



பாடல்களை படமாக்கிய விதம், எப்போதும் போலில்லாமல் கொஞ்சம் விறுவிறுப்பான திரைக்கதை, ஏ.ஆர்.ரஹ்மானின் பிண்ணனி இசை, சிம்புவின் நடிப்பு ஆகியவை படத்தின் பலம். ஒரு பயணமானது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்; அதுதான் இரண்டாம் பாதி. அதன் போக்கை நாம் உணர்வதற்குள் பல அசம்பாவிதங்கள் நடந்துவிடுகின்றன. அதை அப்படியே தத்ரூபமாக நம் பார்வைக்கு கடத்தியுள்ளார் கௌதம். முதல் பாதி தட்டுத் தடுமாறி சென்றாலும் இரண்டாம்பாதியில் எழுந்து நின்று விறுவிறுவென நகர்த்திக் கொண்டு செல்கிறது திரைக்கதை. கண்டிப்பாக மிஸ் செய்யாமல் பார்க்கலாம்.

Comments

Popular posts from this blog

PERFUME – ஒரு பார்வை

MALENA (18+) – சினிமா விமர்சனம்

THE DEPARTED – ஒரு பார்வை