SOURCE CODE - சினிமா விமர்சனம்




இந்த ஹாலிவுட்காரர்கள் இருக்கிறார்களே! நான் பிடித்த முயலுக்கு மூன்றுகால் என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். ஆனால் நான் எடுத்த படத்தில் முயலுக்கு இரண்டே இரண்டுகால் தான் என்று நம்மை நம்பவைத்துவிடுவார்கள். இவர்களிடம் சிக்கிய சயின்ஸ் பிக்சன் ஜானரானது நமக்குள்ளே இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா என்று அதுவே தன்னை நினைத்து ஆச்சரியம் கொள்ளவைக்கும் அளவு ஏகப்பட்ட பிக்சன்காளால் திணறடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக இந்த ‘நேரம்’ என்ற வஸ்துவை வைத்துக்கொண்டு இவர்கள் ஆடும் ஆட்டம் இருக்கிறதே! இன்னும் நேரம் என்றால் என்னவென்று தெளிவான அறிவியலைக் கண்டறிவதற்குள்ளே தங்களின் மூளையை உபயோகித்து  இவர்கள் திரைப்படத்தில் காட்டும் விசயங்களைப் பார்க்கும்போது அறிவியலறிஞர்களே வாயைப் பிளந்துவிடுகிறார்கள். சும்மா பேச்சுக்காக இதைச்சொல்லவில்லை. இன்டர்ஸ்டெல்லர் திரைப்படத்தின் பணியாற்றிய விஞ்ஞானி கிப் தோர்ன் , திரைப்படத்தில் வெளியான விசுவல் எஃபெக்ட்களை வைத்து வார்ம்ஹோல் பற்றிய தனது ஆய்வினை விரிவுபடுத்தியுள்ளார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

ஏற்கனவே டைம் லூப் பற்றிய பல திரைப்படங்களைப் பார்த்திருப்பீர்கள் அல்லது கேள்விப்பட்டிருப்பீர்கள். EDGE OF TOMMORROW, TRIANGLE, ABOUT TIME, HAUNTER, MINE GAMES, PREMATURE, TIMECRIMES என ஏகப்பட்ட லிஸ்ட்டை அடுக்கிக்கொண்டே போகலாம். இந்த டைம் லூப்போடு இந்த திரைப்படத்தில் வேறொரு விசயத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதுதான் யுக்ரோனியா எனப்படும் ஆல்டர்நேட்டிவ் டைம்லைன் (அ) பாரல்லல் டைம்லைன். இந்த ஆல்டர்நேட்டிவ் டைம்லைனை பார்க்கும்முன் இந்த வகையில் வெளியான திரைப்படங்களைப் பற்றி கூறிவிடுகிறேன். அதைவைத்துக்கொண்டு இதைப்பார்த்தால் உங்களுக்கு ஓரளவு விளங்கலாம்.
INGLORIOUS BASTARDS, THE GOOD DINOSAUR, BACK TO THE FUTURE போன்ற திரைப்படங்கள் இதற்கு உதாரணமாக கொள்ளலாம். முதல் திரைப்படமான இன்க்ளோரியஸ் பாஸ்டார்ட்ஸ் திரைப்படத்தின் கதைக்களமானது ஹிட்லரை கொல்வது. வரலாற்றின்படி ஹிட்லர் தானாக தற்கொலை செய்துகொள்வார். ஆனால் அவரை தன் திரைப்படத்தில் வரும் தன் கதாபாத்திரங்கள் கொலை செய்யமுயன்று அதில் வெற்றியடைந்ததாக க்வென்டின் காட்டியிருப்பார். இப்போது டைனோசருக்கு வருவோம். பூமியின் மீசோசோயிக் காலத்தில் (ஏறத்தாழ 6 கோடியே 60 லட்சம் ஆண்டுகளுக்கு ) முன்பே டைனோசர் இனம் பூமியில் மோதிய பெரும் விண்கற்களால் அழிந்தது எனப் படித்துள்ளோம். ஆனால் THE GOOD DINOSAURS திரைப்படத்தில், பூமியைத் தாக்கவந்த விண்கல்லானது திசைமாறி வேறிடத்திற்கு சென்றுவிடும். அதனால் டைனோசர் இனம் தொடர்ந்து பூமியில் வாழும். வாழ்வது மட்டுமின்றி தாவரஉண்ணிவகை டினோசர்களான அபடோசர்ஸ் விவசாயம் செய்து வாழ்வதுபோல் காட்டியிருப்பார்கள். அதன்பின் பிறக்கும் மனிதர்களை அந்த டைனோசர்கள் எலிகளாக கருதுவதும் , ஒரு மனிதக்குழந்தைக்கும் ஒரு டைனோசர்குட்டிக்கும் இடையே நடக்கும் நிகழ்வுகளென திரைப்படம் தொடர்ந்து பயணிக்கும்.

இப்போது மேட்டர் என்னவென்றால் இதுதான். வரலாற்றில் நடந்த விசயங்கள், ஒருவேளை நடக்காமல் போனாலோ, மாற்றி நடந்திருந்தாலோ என்ன ஆகும் என்பதுதான் இந்த ஆல்டெர்நேட்டிவ் டைம்லைன். ஒருவேளை வரலாறு மாற்றமடைந்திருப்பின் எல்லாமே மாறியிருக்கவேண்டுமே என்று நீங்கள் கூறுவது புரிகிறது. அங்கேதான் இந்த தியரி ஒரு ட்விஸ்டை வைக்கிறது. இப்போது THE GOOD DINOSAURS திரைப்படத்தை எடுத்துக்கொள்வோம். விண்கற்கள் பூமியைத் தாக்காததால் இந்த பூமியில் இருக்கும் டைனோசர்கள் நன்கு வாழ ஆரம்பிக்கிறது. ஒருகட்டத்தில் தாவரவகை உண்ணிகள் நாகரிகமடைந்து, விவசாயம் செய்ய ஆரம்பிக்கிறது. அதன்பின் தோன்றும் மனிதன் அதனுடன் இணைந்து வாழ்கிறான். பூமியில் இப்போது மனிதனைவிட புத்திசாலித்தனமான டைனோசர்கள் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும். மனிதன் அவைகளின் பணியாட்களாக கூட இருக்கலாம். ஆனால் இது நடைபெறவில்லை. அப்படி நடந்திருந்தாலும் அது வேறொரு காலக்கோட்டின்கீழ் நடக்கும். அதாவது ஒருவேளை டைனோசர் இனங்கள் தப்பித்திருந்தாலும், அவை வேறொரு காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும். அந்த காலக்கோட்டைப் பொறுத்தவரை மேலே சொன்ன கதைகள் நடைபெறலாம். ஆனால் அது நடந்திருந்தாலும் நாம் வாழும் இக்காலக்கோடானது மாறாது. நாம் வாழும் காலமானது தொடர்ந்தாற்போல் இயங்கிக்கொண்டிருக்கும். அதேபோல் அந்த காலக்கோட்டில் டைனோசர்களும் வாழ்ந்துகொண்டிருக்கும்.

நன்கு குழப்பி எடுக்கிறேன் என நினைக்கிறேன். காலத்தை அதன் நிகழ்வுகளின் அடிப்படையில் பல்வேறு காலக்கோடுகளாக பிரித்துக் கொள்ளுங்கள். 12 B திரைப்படத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள்.  ஒருவிசயம் நடந்தால், நடக்காமல் இருந்தால் என இருவேறு விசயங்களின் அடிப்படையில் இந்த காலக்கோட்டை வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் காதலித்த பெண்ணையே திருமணம் செய்தால் நடப்பவை ஒரு காலக்கோடாகவும், அவளே நம்மை கழட்டிவிட்டு வேறொருவருடன் திருமணம் செய்துகொண்டால் நடப்பதை ஒரு காலக்கோடாகவும் பிரித்துக் கொள்ளுங்கள். இப்போது ரியாலிட்டியில் நீங்கள் திருமணம் செய்யவில்லை. ஒருவேளை உங்களால் இறந்தகாலத்திற்கு சென்று அவளின் திருமணத்தை நிறுத்தி, உங்களையே திருமணம் செய்துகொள்ளும்படி  செய்கிறீர்கள். இப்போது மீண்டும் உங்களின் காலத்திற்கு, அதாவது ரியாலிட்டிக்கு வருகிறீர்கள். இப்போது உங்கள் வாழ்க்கையில் அவள் இருப்பாள் என நினைத்தால் அதுதான் இல்லை. உங்களின் தற்போதைய வாழ்க்கை அதேபோல்தான் இருக்கும். ஆனால் கடந்த காலத்தில் நீங்கள் மாற்றீனீர்கள் அல்லவா? அந்த வாழ்க்கை தனியாக வேறொரு டைம்லைனில் இயங்கும். இந்த கருமத்திற்கு பெயர்தான் ஆல்டர்நேட்டிவ் டைம்லைன். இது ஒன்னும் தெளிவான அறிவியல் இல்லை என்பதை நினைவில் கொள்க. இது ஒரு புனைவு. இதற்கும் ஐன்ஸ்டைனின் ரியாலிட்டி தியரிக்கும் பற்பல மடங்கு எதிர்வினை இருப்பதால் நாம் ரொம்ப போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம்.
அது எப்படி ? இறந்தகாலம் மாறினால் எதிர்காலமும் மாறவேண்டுமே என்று உங்களுக்கு சந்தேகம் வந்தால் நீங்கள் ரியாலிட்டி தியரியையும், ஆல்டர்நேட்டிவ் டைம்லைனையும் ஒருமுறை ரெபர் செய்துவிட்டு தொடர்ந்து படியுங்கள். இல்லையெனில் இந்த பத்தியைப் படியுங்கள். ‘உன் பதிவைப் படித்தால் கீழ்பாக்கத்திற்கு தான் செல்லவேண்டும்’ என நினைப்பவர்கள் இப்பத்தியைத் தாண்டிவிட்டு செல்லுங்கள். ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என ஆப்பிள் மரத்தடியில் அடிவாங்கிய நியூட்டன் கூறியிருக்கிறார். அதே கான்சப்ட் தான் இங்கும். இறந்தகாலம் மாறினால் எதிர்காலமும் மாறும் எனக் கோட்பாட்டின் எதிர்வினை தான் இது. இறந்தகாலம் மாறினால் அது வேறொரு ட்ராக்கிலும், எதிர்காலமானது மாறாமல் அப்படியே தான் இருக்கும் என்பதும்தான் இந்த தியரியின் சுருக்கம். இந்த கணிதத்தில் நேர்மாறல், எதிர்மாறல், ப்ரபோசனல் டு, ஆப்போசனல் டூ என்றெல்லாம் சொல்லுவார்களே! அதே தான்.   ஸ்ஸ்ஸ்ப்பபா!!!! ஒருவழியாக சொல்லவந்ததை ஓரளவு தெளிவாக சொல்லிவிட்டேன் என நினைக்கிறேன். இவைகளெல்லாம் மனிதனின் புனைவே தவிர நிருபிக்கப்பட்ட ஒன்றல்ல என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஏறத்தாழ நான்கு பக்கத்திற்கு அறிவியலை ஜூஸ் போட்டு கொடுத்துவிட்டேன். எனவே இப்போது திரைப்படத்திற்கு வந்துவிடுவோம். இல்லையெனில் நான் என்னிடம் இல்லாதவொன்றான அதிமேதாவித்தனத்தைக் காண்பிப்பதற்காக எனக்கே புரியாத பல தியரிகளைச் சொல்லி, உங்களை உளவியல் ரீதியாக பித்தனாக்கிவிடுவேன். காலை 7.40 மணிக்கு சி்காகோவை நோக்கி ஒரு ரயில் சென்றுகொண்டிருக்கிறது. ரயிலில் உள்ளே தூங்கிக்கொண்டிருந்த ஒரு ஆள் திடுக்கிட்டு எழுகிறான். அவன் எதிரே இருக்கும் பெண் சாதாரணமாக அவனுடன் பேசிக்கொண்டிருக்கிறாள். அவன் முகத்தில் பற்பல குழப்பங்கள். அவனுக்கு எதிரில் இருப்பவள் யார் என்று தெரியவில்லை. தன்னுடைய பெயர் கேப்டன் ஸ்டீவ் கோலின்ஸ் எனவும் தான் ஆப்கானிஸ்தானில் போரிட்டுக்கொண்டிருக்கும் ஒரு அமெரிக்க கேப்டன் என்றும் அவளிடம் தெரிவிக்கிறான் ; மேலும் நான் எப்படி இங்கு வந்தேன் என அவளிடம் கேட்கிறான். அவளோ சிரித்துவிட்டு ‘நீ சான் ஃபென்ட்ரஸ் (SEAN FENTRESS). நீ ஒரு பள்ளி ஆசிரியர். நான் கிறிஸ்டீனா’ எனக்கூறுகிறாள்.  ஷாக் ஆகும் ஸ்டீவ் பாத்ரூம் நோக்கி செல்கிறான். அங்குள்ள கண்ணாடியில் பார்க்கும்போது அவனுடைய முகம் மாறியிருக்கிறது. ‘இன்னாடா இது வம்பாக்கீதே’ என்று அவன் குழப்பத்தில் ட்ரைனில் அலைய, அந்நேரம் கிறிஸ்டீனா அவனிடம் வந்து ‘நாம் அடுத்த ஸ்டாப்பில் இறங்கிவிடலாம். உனக்கு என்ன ஆயிற்று எனக் கண்டறிந்துவிடலாம். எல்லாம் சரியாகிவிடும்’ என்று கூறி முடிப்பதற்குள் ரயில் வெடித்து சிதறுகிறது.

மீண்டும் ஸ்டீவ் கண்விழிக்கிறான். அவன் ஒரு அறையில் அடைக்கப்பட்டிருக்கிறான். ஒரு பெண்குரல் அவனை எழுப்புகிறது. ‘கேப்டன் ஸ்டீவ். நீங்கள் அந்த ரயிலில் பாம் வைத்தவனை கண்டுபிடித்தீர்களா ’ எனக்கேட்க, ‘நீ யார்? இங்கு நான் எப்படி வந்தேன். இது என்ன இடம்’ என்று ஸ்டீவ் குழம்புகிறான். சிறிதுநேரத்தில் தன்னுடன் பேசும் பெண்ணின் உருவம் அவன் அறையில் இருக்கும் டி.வியில் தெரி்கிறது. அவள் மீண்டும் மீண்டும் பாம் வைத்தவனைக் கண்டுபிடித்தீர்களா? எனக் கேட்க, இல்லை என்று ஸ்டீவ் சொல்கிறான். அப்போதுதான் அவனுக்கு அவள் பெயர் குட்வின் என நியாபகம் வருகிறது. ‘சரி, மீண்டும் முயற்சியுங்கள் . உங்களுக்கு முன்பு போலவே 8 நிமிடம் மட்டுமே இருக்கிறது’ என்று சொல்லிவிட்டு அவனை மீண்டும் ரயில் வெடிவிபத்து நடைபெறுவதற்கு 8 நிமிடங்களுக்கு முன்பு அனுப்பி விடுகிறாள்.

இம்முறை பாமைக் கண்டுபிடிக்கும் ஸ்டீவ், அதை எப்படி செயலிழக்கச் செய்வது எனத் தெரியாமல் விழிக்கிறான். அதனால் பயணிகளிடம் செல்போன், லேப்டாப், பேஜர் போன்றவற்றை அணைக்கச் சொல்கிறான். ஆனால் பாம் வெடித்துவிடுகிறது. மறுபடியும் அறைக்குள் இருக்கிறான். குட்வின் அவனிடம் மீண்டும் அனுப்புவதாக கூறுகிறாள். ஆனால் ஸ்டிவ் தன் தந்தையிடம் பேசவேண்டுமென கோரிக்கை வைப்பதற்குள் ரயிலுக்குள் அணுப்பப்படுகிறான். ரயிலில் சந்தேகத்துக்கிடமானவர்களை பார்க்கிறான். அதில் ஒருவனை பாலோவ் செய்து கிறிஸ்டீனாவுடன் சிகாகோவிற்கு முன்னாடி ரயில் நிலையத்தில் இறங்குகிறான். அந்த சந்தேகத்துக்கிடமான ஆசாமியுடன் சண்டை போடும் நேரத்தில் ரயில் தூரத்தில்  வெடிக்கிறது. அதேநேரம் ஸ்டீவ் தவறி ட்ராக்கில் விழுந்து வேறொரு ரயிலில் அடிபட்டு இறக்கிறான்.

மீண்டும் அறை. இம்முறை தன்முன்னுள்ள டி.வி. ஸ்க்ரீனீல் பேசிக்கொண்டிருக்கும் குட்வின்னிடம் உன்னுடைய பாஸிடம் பேசவேண்டுமென வற்புறுத்துகிறான். வேறுவழியில்லாமல் டாக்டர்.ரட்லஜ் ஸ்டீவ்விடம் பேசுகிறார். இம்முறை பிளானை முழுமையாக விவரிக்கிறார் ரட்லஜ். சோர்ஸ் கோட் என தான் கண்டறிந்த ஒரு சமாச்சாரமானது, ஒரு நிகழ்வு நடந்ததற்கு 8 நிமிடத்திற்குமுன் அந்த நிகழ்வில் இருந்த ஒருவரின் மூளையோடு, இப்போதிருக்கும் ஒருவரின் மூளையை கனெக்ட் செய்யும் ஒரு டெக்னாலஜி என்றும் அதைவைத்து அந்த பாம் வைத்தவனைக் கண்டறிந்தால் மட்டுமே, இன்னும் சிறிதுநேரத்தில் சிகாகோவில் வெடிக்க இருக்கும் மிகப்பெரிய வெடிவிபத்தை தடுக்க இயலும் என்றும் கூறுகிறார். ஆனால் இந்த சோர்ஸ் கோடினால் இறந்தகாலத்தை மாற்றமுடியாது எனவும் கூறுகிறார். அப்படியே மாற்றப்படும் இறந்தகாலமானது ஆல்டர்நேட்டிவ் டைம்லைனில் இயங்கும் எனக் கூறுகிறார். ஆனால் தான் கிறிஸ்டீனா எனும் பெண்ணைக் காப்பாற்றியதாக ஸ்டீவ் தெரிவிக்க, கிறிஸ்டீனா தற்போது இறந்தவிட்டாள், ஆனால் அவள் வேறொரு டைம்லைனில் உயிருடன் இருக்கலாம் என ரட்லஜ் கூறுகிறார்.

இதற்குபின் மீண்டும் ரயில்; மீண்டும் அறை; இடையில் கிறிஸ்டீனா மீது காதல் வேறு. தன் தந்தையிடம் ஒருமுறையாவது பேசிவிட வேண்டும் என பரிதவிப்பு வேறு; யார் அந்த பாமர் என்ற பெரும் கேள்வி வேறு. தான் எப்படி இங்கு வந்தோம்? தன் குழுவில் பணியாற்றிய சக ராணுவ வீரர்கள் என்ன ஆனார்கள் என பற்பல சந்தேகங்களைக் கொண்டிருக்கும் ஸ்டீவ்விற்கு எல்லா குழப்பங்களும் பிரச்சனைகளும் எப்படி முடிவுக்கு வந்தது என்பது மீதிப்படம்.

மூன் என்ற ஒற்றைப் படத்திலே உயரம் தொட்ட டங்கன் ஜோன்ஸ் , தனது இரண்டாவது திரைப்படத்திற்காக நடிகர் ஜேக் கில்லன்ஹாலை சென்று சந்தித்தார். தான் ம்யூட் (MUTE) எனும் திரைப்பட ஸக்ரிப்ட் எழுதி இருப்பதாக தெரிவித்த ஜோன்ஸ், அதை இயக்க ஒரு வருடத்திற்கு மேலாகும் என்றார். சரி அதுவரைக்கும் எதற்கு சும்மா இருக்கவேண்டும்? ஸ்பிசியஸ் போன்ற திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதிய பென் ரிப்லியின் ஒரு திரைக்கதை என்னிடம் இருக்கிறது. படித்துப்பாருங்கள்; அட்டகாசமாக இருக்கிறது என்றாராம் ஜேக். டங்கன் ஜோன்சும் படித்துப் பார்க்க அப்படி உருவானது தான் இந்த சோர்ஸ்கோட். ஆனால் பாருங்கள்; டங்கன் அதன்பின் வார்க்ராப்ட் எடுத்தார். தன் கனவுத்திரைப்படம் என்று சொன்ன ம்யூட் இப்போதுதான் எடுத்துக்கொண்டிருக்கிறார் . ஹைலைட் என்னவென்றால் ம்யூட் திரைப்படத்தில் இப்போது ஹீரோவாக நடித்துக்கொண்டிருப்பவர் நம் லெஜன்ட் ஆஃப் டார்சன் ஹீரோவான அலெக்சான்டர் ஸ்கார்ஸாட்.

ஒருவகையில் இந்த திரைப்படம் EDGE OF TOMMORROW-வின் முன்னோடி எனலாம். அத்திரைப்படம் உங்களுக்கு பிடித்திருந்தால் இதுவும் கண்டிப்பாக பிடிக்கும்.  திரைக்கதை பிரியர்களுக்கு ஏற்ற தீனி இந்த திரைப்படம் என்றும் சொல்லலாம். ஒரு அட்டகாசமான திரைக்கதையை வைத்துக்கொண்டு பட்டாசாக நகர்த்தியிருக்கும் திரைப்படம் தான் சோர்ஸ்கோட்.



Comments

  1. கிளைமாக்ஸ் ரொம்பவே மூவிங்கா இருக்கும் இல்லையா மெக்...
    அந்த கட்டிடத்தின் ஆர்க்கிடெக்சர் வாவ் வாவ் இல்லையா..
    ரியல்லி கூல் மூவி

    தம +

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை