பயணம் @ டைம்மெஷின் -6



முந்தைய பதிவுகள் 








பயணம் @ டைம்மெஷின்



அத்தியாயம் -3
கி.மு. 2 ஆம் நூற்றாண்டு

பகுதி -4
தஞ்சாவூர் பயணம்



செந்நிறக்கதிர்களுடன் , இருளைக்கிழித்து உதயமானன் சூரியன் . ஏற்கனவே காலைக்கடன்களை எவ்வாறு முடிக்கவேண்டும் , எங்கே எவ்வாறு குளிக்கவேண்டும் என்பதை கடந்த இரு காலைப்பொழுதுகளில்  அவர்கள் கற்றுக்கொண்டபடியால் , இன்றைய தினம் அவர்களுக்கு எளிமையாக இருந்தது . இரண்டுநாட்களில் , அவர்கள் வாழ்க்கை திக்குத்தெரியாத காட்டாற்றைப்போல் பயணித்திருப்பது அதிசயமாய் இருந்தது. மேலும் பல விஷயங்கள் அவர்களை அதிசயப்படுத்தும் என்பதனை சொல்லித்தெரிவதில்லை .  அன்றைய காலைப்பொழுதில் குளிக்க , செய்யாறு நதி உதவியது . அந்நதியைச்சுற்றி அமைந்துள்ள கிராமமே , திருவத்திபுரம் . அவ்வூரைச்சுற்றி காணப்படும் புனித மண்ணில் நடக்காமல்  சுற்றிக்கொண்டு செல்ல முடிவெடுத்து , தங்களின் பயணத்தை தொடங்கினர் . பின்னாளில் , வேங்கடனை வழிபடும் வைணவர்கள் , திருநீறு எனும் நாமக்கட்டியை தயாரிக்க , அவ்வூரைச்சுற்றிலும் இருந்த திருமண்ணையே எடுத்தார்களாம் . இன்னமும் , ஶ்ரீரங்கம் உட்பட பல கோயில்களுக்கு திருமண் அனுப்பும் வழக்கம் இன்னும் தொடர்கிறது என்றும் கூறுகிறார்கள் . சரி அதைவிடுவோம் . தங்களின் பயணத்தை தொடர்ந்த மூவரும் , வழியில் காணப்பட்ட ஒரு சிவன் கோவிலில் நிறுத்தி , வணங்கினர் .

‘இது என்ன கோயிலுங்க ?’  -சந்த்ரு

‘இதுதான் வேதபுரீஸ்வரர் ஆலயம் . முன் நாம் காஞ்சியில் இருந்தோமல்லவா ? அப்போது தொண்டைமான் வம்சத்தின் அரசனுக்கு உதவியவர் , இந்த சிவன் ’

‘அப்படியா? எப்படி கடவுள் வந்து உதவினாரு ?’ - சந்த்ரு

‘முன்னொரு காலத்தில் விசுவாவசு எனும் கொடியவன் , தொண்டைமானை எதிர்த்து போர்தொடுக்க வந்தான் . தொண்டைமானும் உயிர்போனாலும் பரவாயில்லை என்று தன் மக்களை காப்பாற்ற , வீரத்தோடும் தீரத்தோடும் போரிட்டான் . ஆனால் , விசுவாவசு அரக்ககுலத்தை சார்ந்தவன் ஆதலாலும் , பெரும்படையை கைவசம் கொண்டிருந்ததாலும் போர்நெறிகளைப்பற்றி கவலைப்படாமல் , தொண்டைமானின் படைகளை சிதறடித்தான் . தொண்டைமான் , திக்கு தெரியாமல் இச்சிவபெருமானின் முன் வந்துநின்றான் . சிவனோ , நந்தியை தளபதியாக கொண்டு , சிவகணங்கள் அனைத்தும் குதிரைகளாகவும் யானைகளாகவும் மாற்றி  , தொண்டைமானின் படையை புதுப்பித்து அனுப்பினார் . பின் என்ன , சிவகணங்களின் ஆக்கிரோஷமான தாக்குதல்களாலும் , நந்தியின் அபரீதமான வழிகாட்டுதலாலும் , தொண்டைமானின் வீரத்தாலும் , விவாவசுவை வென்று தொண்டைமண்டலத்தை மீட்டெடுத்தார் , தொண்டைமான் .

இரண்டுநாட்களுக்குமுன் இக்கதைகளை கூறியிருந்தால் ,  வயிறுவலிக்க சிரித்திருப்பார்கள் , பாலாவும் சந்துருவும் . ஆனால் , இவ்விரண்டுநாட்களில் நிகழும் நிகழ்ச்சிகள் , அவர்களுக்குள் பெரும் மாற்றதை பதிந்துவிட்டது . நம் மாபெரும் தமிழர்களின் பழந்தமிழ்வாழ்க்கையை நினைத்தால் புல்லரிக்க ஆரம்பித்தது . கோசனின் கோட்டைக்குள் வீரப்புலியாய் பாய்ந்த இளங்கோட்சென்னியின் கதையை நம்ப முடியாமல் தவித்தவர்களின் அறியாமையை , முந்தைய இரவில் புலியை விரட்டியடித்த பெண் , இவர்களின் அறியாமையையும் சேர்த்துவிரட்டிவிட்டாள் .

‘அப்படிங்களா ?. -சந்த்ரு
சிறிது நேரம் , அவர்களின் மனக்கண்களின்முன் அந்நிகழ்ச்சிகள் , ஒரு திரைப்படமாக ஓடின .

 சரிங்க . கிளம்பலாம் ’ - பாலா

பயணம் , தொடங்கியது . ஏற்கனவே போதுமான அளவு தமிழகத்தின் இயற்கையை வர்ணித்துவிட்டோம் . செய்யாறை பொறுத்தவரை , அது ஒரு வேளாண் நகரம் .பின்னாளில் , பல்லவ மன்னர்களின் ஆட்சிக்கும் , விஜய மன்னர்களின் ஆட்சிக்கும் , ராஜராஜசோழனின் ஆட்சிக்கும் உட்பட இருக்கும் பகுதி . முன்னே , அவ்வணிகன் அமர்ந்து வண்டியை செலுத்த , பின்னால் , சிறிது தூரம் காலாற நடந்துவருவதாக கூறிவிட்டு நடக்க ஆரம்பித்தார்கள் . வெறும் கால்கள் தான் . ஒரு அழகிய மண்சாலையின் ஊடே , தென்னைமரங்கள் காவலிருக்க , சுற்றியும் நெல் மற்றும் பருப்புவகைகளை விளைவிக்ககூடிய பயிர்கள் , காட்டில் தன் இளந்தண்டையும் புதிதாக அரும்பிய இலைகளுடனும் காட்சிக்கு அகப்பட்டன . அறுவடைத்திருநாளிற்குபின்  , நடப்பட்ட நாற்றுகளாக இருக்கும் .

‘பாலா ! உன்னால நம்பமுடியுதா ?’

‘என்னத்த டா ?’

‘இங்க நடக்கற விஷயங்களத்தான்டா ?’

‘நம்பவும் முடியல . நம்பாம இருக்கவும் முடியல ’

‘இத்தனைக்கும் , நாம இங்க வர வெறும் பத்து செகன்ட் தான் ஆச்சுல ? ’

‘ம் .நம்ம டைம் மெஷின் வேகம் அப்படி மச்சி  ’

‘அது என்னடா வேகம் ?’

‘உனக்கு புரியற மாதிரி சொல்லனும்னா , டைம் ட்ராவல் பன்ற YEARS வச்சி , ஸ்பீட் மெஷர் பண்ணிக்கலாம் , ’

‘சரி . இதோட ஸ்பீட் எப்படி இருக்கும் ?’

‘200 years Per Second’

‘ப்பா !! அவ்வளவு வேகமாடா ?’

‘அடப்போடா .இது என்ன வேகம் .கார்ல் சாகன்னு ஒரு ஆளு 475 years per second ல , ஒரு காலாண்டரே போட்டுருக்காரு.’

‘அது யாருடா கார்ல் ?’

‘அவரு அமெரிக்க சயன்டிஸ்ட் . 20த் சென்சுரி அப்போ , ஒரு காலாண்டர் தயாரிச்சாரு . இதுவரைக்கும் , இந்த யுனிவர்ஸ் பிறந்ததுல இருந்து 20த் சென்சுரி முடியற வரைக்கும் ஒரு வருஷத்துல எல்லாத்தையும் அடக்குனாரு . அவரு காலாண்டர் படி பார்த்தோம்னா , ஒரு செகன்ட்கிறது 475 Years’

‘சத்தியமா புரியல மச்சி’

‘இப்போ ஜனவரி 1ந்தேதி இருக்கா ? அன்னைக்கு நைட் 12 மணிக்குதான் BIG-BANG நடந்துச்சாம் ’

‘BIG BANG மீன்ஸ் , இந்த கேலக்ஸி வெடிச்சி , ஒவ்வொன்னா உருவாசினு சொல்லுவாங்களே ? அதுதான ?’

‘YES. அதேதான் .ஆனா , அது கேலக்ஸி வெடிச்சதால ஏற்படல . யுனிவர்ஸ் உருவான நிகழ்ச்சிதான் BIG BANG . அதுக்கப்பறம்தான் கேலக்ஸி உருவாச்சி . அவரு கணக்குப்படி செப்டம்பர் 8ந்நேதி சூரியனும் 12ந்தேதி நம்ம பூமியும் ,13ந்தேதி நிலாவும் உருவாச்சி. பூமில காத்தும் தண்ணியும் உருவானது செப்டம்பர் 20ந்தேதி .இப்போ நாம இருக்க காலம் , அவருகணக்குப்படி டிசம்பர் 31ந்தேதி , நைட்டு 11 மணிக்கு மேல இருக்கனும் .’

‘சரி , ஃப்யூச்சர்ல இத எப்படி DEFINE பண்ணுவாங்க ?’

‘அவரோட காலண்டர் வேலிடிட்டி , 2000மாவது வருஷத்தோட முடியுது . அன்னைக்கு நைட் 12 மணி தான் டெட் லாஸ்ட் .’

‘டேய் எப்படி மச்சி உனக்கு இவ்வளவு விஷயம் தெரியுது

‘டைம் ட்ராவல் பத்தின ஆர்ட்டிகல்ஸ்ல இதுவும் ஒன்னுடா’

‘ஓகே மச்சி’

பாலா ஒன்றும் அரைகுறை விஞ்ஞானி கிடையாது . அவனுக்கு திறமைகள் இருந்தாலும் வாழ்வியல் அழகு தெரியாமல் லேப்பிலேயே கிடப்பவன் என்று சந்துருவுக்கு புரிந்தது . மெல்ல , பேசிக்கொண்டே சென்றார்கள் .அன்றைய தினம் விரைவான பயணமாக அமைந்தது அவர்களது அதிர்ஷ்டம் என்றே கூறலாம் . ஏனெனில் , உறையூரில் மீண்டும் ஒரு அதிர்ஷ்டமும் , ஆச்சரியமும் , கஷ்டமும் காத்திருந்தன . மெல்ல வெள்ளாற்றை தாண்டி , மதிய உணவை உண்டனர் . அங்கிருந்து அடுத்த இரண்டு மணிநேரத்தில் காவிரியை அடைந்தனர் . காவிரியை ஆழம் குறைந்த இடத்தினில் கடினப்பட்டு கடந்தனர் .காவிரத்தாயைப்பற்றிய வரலாற்றை பற்றி அவர்களுக்கு தேவையில்லையெனினும் நாம் அறிந்துகொள்ளலாம் .




காந்தன் எனும் சோழமன்னன் ,  தன்நாடு  மழையில்லாமல் வருந்துவதைப்பார்த்து வேதனையுற்றான் . எப்படியாயினும் தன்நாட்டை காக்கவேண்டும் என்ற முடிவுடன் , அகத்தியமாமுனியை காணச்சென்றான் . அகத்தியரின்பால் , அதீத அன்புடையவன் சிவபெருமான் மீது சிறந்த பக்தியுடையவன் .அந்நேரத்தில் , அகத்தியமுனி , குடகு மலையின்கண் , தவம் செய்யும் பொருட்டு வாழ்ந்துகொண்டிருந்தார் . அகத்தியரை சந்தித்து , தன் நாட்டின் நிலையையும் , தம் மக்களின் கவலையையும் கூறி , தனக்கு உதவுமாறு மன்றாடி கேட்டான் .தாய்ப்பாலுக்கு அழும் குழந்தையும் , நீருக்கு ஏங்கும் பயிர்களும் ஒன்றுதான் என்பதை உணர்ந்திருந்த அகத்தியரும் , தன் கமண்டலத்தில் அடைத்து வைத்திருந்த , நீரை கீழே ஊற்றி, சோழநாடு செல் என பணித்தாராம் . அச்சிறுநீர் , மலைகளின் ஊடே பரவி , கிளைநதிகளையும் இணைத்து , மாபெரும் வற்றாத ஜீவநதியாகி , சோழநாட்டை அடைந்தது . கோள்கள் நிலைதிருத்து , அதனால் கோடைகாலம் நீடித்தாலும் , தன்நிலை திரியாமல் நீர் தந்தாள் அவள் . அவளே இன்றைய தமிழகத்தைக்காத்துக்கொண்டிருக்கும் வற்றாஜீவநதியான காவிரி .





காவிரியைத்தாண்டியதும் , சீத்தலை எனும் கிராமத்தை அடைந்தார்கள் . அதுவே அவ்வணிகனின் சொந்த ஊர் ஆகும் . அன்றைய இரவை அவன் வீட்டில் தங்கிவிட்டு செல்லலாம் என முடிவு எடுத்தார்கள் .  அவ்வணிகனின் மனைவியின் கனிவான நடத்தையில் , பாலாவும் சந்துரும் கிறங்கிப்போனார்கள்  .அவனின் , குழந்தையோ , மழலை மொழி பேசி , இவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தது .பின் , உணவருந்திவிட்டு துயில் செல்ல சென்றார்கள் . வணிகனும் , பாலாவும் சந்துருவும்  வீட்டின் வெளியில் ஆளுக்கொரு கயிற்றுக்கட்டிலில் படுக்க , அக்குழந்தை வணிகனின் மாரில் ஏறிக்கொண்டு , கதை சொல்லுமாறு கெஞ்சியது .

‘முன்னொருகாலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே கலகம் ஏற்பட்டது . வாழ்வினை அமர வாழ்வாக்கும் மருந்தாகிய அமிர்தத்தை அடைய , தேவர்களும் அரக்கர்களும் மேரு எனும் மலையை அச்சாக கொண்டு , வாசுகி எனும் பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடலில் அமிர்தம் பெற கடைந்தார்கள் . அமிர்தம் வரும் நேரத்தில் ’




‘ஏங்க. இதுலாம் உண்மையா ? அப்படி ஒரு மலையும் கடலும் இருக்கா என்ன ?’

‘ஒவ்வொரு கதையினூடும் , நம் வாழ்க்கைக்கு தேவையான பல கருத்துகள் இருப்பதானாகவே நான் அறிகிறேன் சந்து .இப்போது மேரு மலைக்கு பதில் புவியை வைத்துக்கொள்ளலாம் . தேவர்களுக்கு பதில் பகலும் , அசுரர்களுக்கு பதில் இருளும் என கொள்ளலாம் .இப்போது பாருங்கள் , இரவும் பகலும் இழுக்க இழுக்க , புவியில் உள்ள  , கனிமங்களான இரும்பு , தங்கம் , செம்பு போன்ற அமிர்தங்கள் கிடைக்கின்றன .இப்படி கூட இக்கதைக்கு பொருள் தரலாம் .’
ஆச்சரியத்துடன் , அவன் கூறியதை கேட்டுக்கொண்டிருந்த இருவரும்

‘ஓ சரிங்க .’
என்று பதிலளித்தார்கள் . வேறு என்ன பேசுவது என்று தெரியாமல் குழம்பியிருக்கலாம் .
 மூவரும் , மெல்ல  தென்றல் வீசும் காற்றிற்கு உருகி , துயிலை தற்சமயம் மேற்கொண்டனர் .

மறுநாள் காலை , வணிகன் காவிரிப்பூம்பட்டிணம் எனும் கடற்கரை நகரத்திற்கு பொருள்களை ஏற்றிச்செல்ல , அப்போதைய தலைநகரான உறையூரில் பாலாவும் சந்துருவும் அவ்வணிகனிடம் இருந்து பிரியா விடை பெற்றனர் . மணிமேகலை எனும் மாபெரும் காப்பியத்தினை படைத்த சாத்தனாரின் , முப்பாட்டனாரான அவ்வணிகன் , மெல்ல புன்முறுவல் பூத்தவாறு கிளம்பினான் .

திடிரென தூரத்தில் , ஒரு தேரும் உள்ளே ஒரு இளைஞனும்  இருந்தனர் . அத்தேர் , கட்டுப்பாட்டை இழந்து , புயல்போன்று  இவர்களை கடந்து சென்றது . ஒரேநொடியில் தாங்கள் தப்பிப்பிழைத்ததை எண்ணி சந்தோஷமும் , அதே நேரத்தில் யாருடா அவன் என்கிற கோபமும் ஒன்றுசேர  , சந்துரு அத்தேர் சென்ற திசை நோக்கி பார்த்தான் .

அதே நேரத்தில் , சீனாவில்  இருக்கும் அனைத்து மாகாணங்களையும் ஒன்றிணைத்து , ஒரு வலிமைமிக்க பேரரசினை உருவாக்கிக்கொண்டிருந்தான் கின் ஷிஹுஆங்டி .



இதன் தொடர்ச்சியைப்படிக்க இங்கே அழுத்துங்கள்


Comments

  1. arumai innun satru viruvurppu serkalame sakothara

    ReplyDelete
    Replies
    1. சேர்த்துடலாம்ணே !! கொஞ்சம் ஸ்மூத்தான பயணமாகவே இருக்கனும்னு நினைச்சித்தான் , மெதுவா உருட்டிட்டுப்போறேன் . இனிமேல் , நீங்க கேட்கற மாதிரியான பயணமா மாறிடும் அண்ணே !!

      Delete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை