A SEPERATION - சினிமா விமர்சனம்
தமிழில்
உலகசினிமா வரவேண்டும் என்றால் உலகத்திரைப்படங்களைப் பார்ப்பதால் மட்டுமோ , தமிழ் மற்றும்
உலகஇலக்கியங்கள் படிப்பதால் மட்டுமோ வந்துவிடாது . முதலில் நாம்
சார்ந்துள்ள சமூகத்தின் நிலையை நன்கு உணரவேண்டும் . நம் சூழ்நிலையையும் , நம்
மக்களின் பிரச்சனைகளையும் மனப்பூர்வமாக உணர்ந்தாலே , உலகப்படைப்புகளுக்கு நிகரான திரைப்படங்களைத்
தமிழ் இயக்குநர்களால் கொடுக்கமுடியும் . ஆனால் அந்தமாதிரியான படங்கள் தமிழ்நாட்டில்
கலெக்சன் எடுக்குமா என்பது சந்தேகம் தான் . காரணம் ரசிகர்களாகிய நாம் முதலில் ஒன்றை
மனதில் நிறுத்தவேண்டும் . நமக்கு , நேரத்தைக்கடத்த உதவும் கமர்சியல் படங்களும் தேவை
. அதேநேரம் நாம் என்னமாதிரியானதொரு சமூகத்தில் வாழ்கிறோம் என்பதனை உணரும் பொருட்டு
இம்மாதிரியான படங்களையும் ஊக்கப்படுத்தவேண்டும் .
நான்
முதன்முதலில் ஆங்கிலம் தவிர மற்றையமொழி படங்களைப்பார்க்க ஆரம்பித்தது ஒரு கிரேக்க படத்தினால்
தான் . ஆனால் அந்த படத்தைப்பார்த்ததும் ‘ஆள வுடுங்கடா சாமி’ ரேஞ்ச்-க்குச் சென்று விட்டேன்
. அதன்பின் CHILDRENS OF HEAVEN எனும் ஈரானிய படத்தின் மூலம் , மீண்டும் எனது உலகசினிமாக்களைப்
பார்க்கும் ஆரவம் அதிகரித்தது . இப்போது ஸ்பானிஷ் மற்றும் ஈரானியப்படங்களைப் பார்க்க
ஆரம்பித்ததால் , இனி விமர்சன உலகம் முழுக்க அனைத்துவகையான திரைப்படங்களைப்பற்றியும்
உங்களிடம் மொக்கைப்போடலாமென்று இருக்கிறேன் . அதில் முதலாவதாக ஒரு சாம்பிள் தான் இந்த
A SEPERATION .உலகளவில் பாராட்டுகளைப்பெற்ற பெரும்பாலான ஈரானியப்படங்களின் கதை , ஒரு
சின்னவிஷயமாகவே இருக்கும் . ஆனால் அந்த சின்னவிஷயங்களினால் மனிதர்களுக்குள் ஏற்படும்
மாற்றங்களைப்பற்றி அலசுவதே இப்படங்களின் நோக்கமாக இருக்கும் . A SEPERATION படமும்
அவ்வகையைச்சார்ந்தது தான் .
இந்த
படத்தில் கதை என்று எதை எழுதுவது என எனக்குத்தெரியவில்லை . அதனால் எளிமையாகக் கூறவேண்டுமென்றால்
, ஒரு பிரச்சனை ஆகிறது . அதைத்தொடர்ந்து சில நிகழ்வுகள் நடைபெறுகின்றன . இவற்றின் தொகுப்பே இத்திரைப்படம் .
நடேர் – நடுத்தர மேல் வர்க்கத்து ஆண் . அல்ஜைமர்
எனும் ஞாபகமறதி மற்றும் தன்னிலை மறக்கும் நோயால் பாதிக்கப்பட்டுள்ள தன் தந்தையின் மீது
உயிரையே வைத்திருப்பவன் . எங்கும் எதிலும் நேர்மை , ஞாயம் பேசுபவன் . தன் 11 வயது மகள்
டெர்மா உடனும் மனைவி சிமினுடனும் வாழ்ந்து வருகிறான் .
சிமின் – தம்
குடும்பத்தின் எதிர்காலம் கருதி , தன் கணவனை வெளிநாட்டிற்கு வருமாறு வற்புறுத்துகிறாள்
. ஆனால் அவன் அதை மறுக்கவே , விவாகரத்து கேட்டு கோர்ட்டில் நிற்கிறாள் . ஒரு பிரச்சனை
என்றால் , அதன் பின்விளைவுகளை யோசித்து , அதிலிருந்து எப்படியாவது தப்பித்துவிடவேண்டும்
என்றுநினைப்பவள். தான் விவாகரத்துக்கேட்டால் உடனே தந்துவிடுவதா என்று மனதினுள் குமுறுபவள்
.
டெர்மா – தாயும் தந்தையும் பிரிந்துவிடக்கூடாது
என்று நினைத்து , தன் தந்தையுடன் இருக்கிறாள் . அப்போதுதான் தன் தாய் , தன் தந்தையை
விட்டு வெளிநாடு செல்லமாட்டாள் என்றுணர்ந்தவள் .
ரஸியா – நாலரை மாத கர்ப்பிணி . தன் கணவனுக்கும்
, தன் மதத்திற்கும் அடங்கி ஒடுங்கி வாழ்பவள் . வேலையின்றி 11 மாதங்களாக கஷ்டப்படும்
தன் கணவனுக்காக , ஏதாவது ஒரு வேலைசெய்து பிழைப்பை ஓட்டலாம் என்று எண்ணுபவள் . அந்தமாதிரி
ஒரு சமயத்தில் தான் நடேரின் வயதான தந்தையை கவனித்துக்கொள்ளும் வேலை அவளுக்கு கிடைக்கிறது
.
ஹோட்ஜட் – ரசியாவின் கணவன் . கோபக்காரன் . மதத்தை
உண்மையாக நம்புபவன் . வேலையின்மையின் காரணமாய் சமூகத்தின்மீது வெறுப்பில் இருப்பவன்
.
இப்போது
கதை இதுதான் . நடேர் வேலைக்குச்சென்று வீட்டிற்கு
திரும்பும் போது , நடேரின் தந்தை கீழே விழுந்து கிடக்கிறார் . அந்நேரம் ரசியா வர ,
என் தந்தையை விட்டு எங்கே சென்றாய் என கோவமடைகிறான் . அவளை வீட்டை விட்டு அனுப்பும்பொருட்டு
, நீ திருடிவிட்டாய் என்று பொய் சொல்லி வீட்டை விட்டு அனுப்புகிறான் . அப்போது தவறுதலாய்
கீழே விழுந்துவிடுகிறாள் ரசியா .
அடுத்தநாள்
, சிமின் தன் கணவனிடம் , ரசியாவின் கரு கலைந்துவிட்டது
என்று போனில் கூறுகிறாள் . மருத்துவமனையில் சென்று பார்க்கும் நடேருக்கு , ரசியாவின்
கணவனுடன் மோதல் ஏற்படுகிறது . கருவைக்கொன்ற குற்றத்திற்காக , நடேர் நீதிமன்றத்தில்
நிறுத்தப்படுகின்றான் . அங்கு வழக்கை விசாரிப்பவரிடம் , ரசியா கர்ப்பமாக இருப்பது தனக்குத்தெரியாது
என்று கூறுகிறான் . அதன்பின் அந்த வழக்கு என்ன ஆனது ? யார்மீது குற்றம் ? நடேரும் சிமினும்
என்ன ஆனார்கள் என்பதை அழகாய் , அதேநேரம் திரில்லராய் நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்
Asghar Farhadi .
மேலே
இருக்கும் கதாபாத்திரங்களில் அனைவரையும் நாம் அறிந்திருப்போம் . இதில் ஒரு கதாபாத்திரம்
கூட நமக்கு புதிதானவர்கள் இல்லை . நம் குடும்பத்தில் , நம் உறவினர் , நண்பர் என்ற ஏதாவதொரு
நிலையிலாவது மேற்குறிப்பிட்டவர்கள் நம்முடன் பழகியிருப்பார்கள் . கதையைப்படித்தால்
ஒன்றும் பெரிதாய் இல்லையே ? எதற்கு இந்த படத்தைப்பார்த்துக்கொண்டு என்று நினைக்கத்தோன்றும் . ஆனால் நான் முதலிலேயே கூறியது
போல் , கதைக்காக பார்க்கும் படமல்ல . மனித உணர்வுகளுக்குள் நடைபெறும் போராட்டங்களை
உணர்த்தும் படம் இது .
ரசியா
, முதல்நாள் வேலைக்கு வரும்போது நடேரின் தந்தை , தன்னுடைய உடையிலேயே சிறுநீர் கழித்துவிடுகிறார்
. அதை அவரால் உணரமுடியாது . அவரை பாத்ரூமில் அழைத்துச்சென்று , அவரிடம் குளிக்குமாறு
சொல்கிறாள் ரசியா . ஆனால் அதையும் உணராத அவர் அப்படியே நின்று கொண்டிருக்கிறார் . அவரைத்தான்
தான் குளிப்பாட்ட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட அவள் , போன் செய்து மதகுருமார்களிடம்
கேட்கிறாள் . அவர்கள் சரி என்றபின்னே , அவள் சென்று அந்த வயதானவரைக்குளிப்பாட்டுகிறாள்
. அப்போது , அவளின் மகள் , ‘பயப்படாதம்மா . நா அப்பாகிட்ட சொல்லமாட்டேன்’ என்கிறாள்
.
‘உங்க
அப்பாவ விட்டுட்டு வாங்க .’ என்று சொல்லும் சிமினிடம் , நடேர் ‘என் தந்தையை விட்டு
என்னால் வர முடியாது’ என்கிறான் . ‘நீங்க என்னதான் அவர பாத்துகிட்டாலும் , அவருக்கு
நீங்கதான் பாத்துக்கிரிங்கனு தெரியாது ’ என்று கூறும் மனைவியிடம் நடேர் இவ்வாறு கூறுகிறான்
‘ஆனால் எனக்குத்தெரியும் . அவர் தான் என் தந்தை ’
இதுமாதிரி,
படம் முழுதும் ஏகப்பட காட்சிகள் படத்தில் ஜொலிக்கின்றன . இத்திரைப்படம் ஒரு நாட்டின்
கலாசாரம் , மதத்தின் மீதான நம்பிக்கைகள் , சட்டத்தின் முரண்பாடுகள் , ஆணாதிக்கம் மற்றும்
பெண்ணாதிக்கம் , வர்க்க வாரியான குடும்பத்தின் நிலை என்று பலவிதமான குறியீடுகள் மற்றும் காட்சியமைப்புகளை
கொண்டுள்ளது. தன் வீட்டிலுள்ள பிற ஆண்கள் முன்னிலையில் வர மறுக்கும் ரசியாவின் குடும்பத்தில்
நிலவும் ஆணாதிக்கத்தைக்கண்டிக்கும் அதேநேரம் , தன் கணவன் முன்னிலையிலே ஒரு காட்சியில்
புகை பிடித்துக் கொண்டிருப்பாள் சிமின் .
இந்த
படத்தில் நடித்தவர்கள் எல்லாம் நடிகர்கள் என்று குறிப்பிடுவது தவறு . அனைவரும் கலைஞர்கள்
. ஒருவருக்குக்கூட நடிக்க ஸ்கோப் இல்லை என்று சொல்லிவிடமுடியாது . நடேர் பாத்திரத்தில்
நடித்த PEYMAN MOAADI , சிமின் வேடத்தில் நடித்த லைலா ஹெடாமி , தெர்மேவாக நடித்த SARINA FARHADI என அனைவரும் அருமையான நடிப்பினை
வழங்கியுள்ளார்கள் . இவர்களையெல்லாம் தூக்கி சாப்பிடும்விதமாக , படத்தில்
ஆங்காங்கே வலம் வரும் பெரியவர் , உண்மையில் நடிகர்தானா என்ற சந்தேகம் வருமளவிற்கு தூள்
கிளப்பியிருக்கிறார் . கதை முழுதும் அவரைச்சுற்றியே நடைபெறுகிறது என்பதைக்கூட
உணரமுடியாதவராக அவர் வருவது அற்புதம் . இசை மற்றும் ஒளிப்பதிவு கூடுதல் பலம் . இயக்குநர்
அஷ்கார் பர்ஹதி-கு இது மூன்றாவது திரைப்படம் . படத்தின் முழுகிரெடிட்டும் அவருக்குத்தான்
. இந்த படத்திற்காக எண்ணற்ற விருதுகளை வாங்கி வீட்டில் அடுக்கமுடியாமல்
தவித்துப்போய் விட்டார் . ஆஸ்கார் , கோல்டன் குளோப் , ஆசிய திரைப்பட விருது , ஆசிய
– பசுபிக் திரைப்பட விருது , பெர்லின் என உலகம் முழுதும் விருதுகளை அள்ளியுள்ளது
இத்திரைப்படம் .
Jodaí-e Nadér az Simín எனும் பாரசீக டைட்டிலை
, ஆங்கிலத்திற்கு ஏற்றவாறு A SEPERATION என வைத்துள்ளார்கள் .மொழிப்பிரச்சனை என்றெண்ணி
பார்க்காமல் விட்டுவிடாதீர்கள் . இது மொழியையும் கடந்து உணரும் திரைப்படம் . மனிதர்கள்
அனைவருக்கும் பொதுவான திரைப்படம் . ஒரு வித்தியாசமான
உணர்வை இந்த படம் கண்டிப்பாய் தரும் . இந்த படத்தின் கிளைமேக்ஸ் வழியாக உங்களையே நீங்கள்
புரிந்துகொள்ளலாம் . படத்தைப்பார்த்து , கிளைமேக்ஸ் புரியவில்லை என்று நீங்கள் நினைத்தால்
, இப்படத்தை சினிமா கண்ணோட்டத்தில் நீங்கள் அனுகியிருக்கிறீர்கள் என்று அர்த்தம் .
ஒருவேளை ‘என்னடா இது ? கிளைமேக்சே இல்லை’ என்று நினைத்தால் , நீங்கள் ஒரு ஐந்தறிவு
கொண்ட அற்புத மனித உயிர் என்று அர்த்தம் .
BURIED - சினிமா விமர்சனம்
ROAD TO PERDITION - சினிமா விமர்சனம்
LIFE IS BEUTYFUL - சினிமா விமர்சனம்
IT'S A WONDERFUL LIFE - சினிமா விமர்சனம்
THE PIANIST - சினிமா விமர்சனம்
THE PRESTIGE - சினிமா விமர்சனம்
தொடர்புடைய இடுகைகள்
BURIED - சினிமா விமர்சனம்
ROAD TO PERDITION - சினிமா விமர்சனம்
LIFE IS BEUTYFUL - சினிமா விமர்சனம்
IT'S A WONDERFUL LIFE - சினிமா விமர்சனம்
THE PIANIST - சினிமா விமர்சனம்
THE PRESTIGE - சினிமா விமர்சனம்
இயல்பான எழுத்து நடையில் எழுதியிருக்கிறீர்கள்... படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகின்றன தங்களின் எழுத்துக்கள்...
ReplyDeleteநன்றிங்க !!!
Deleteஆகா ஜோரான படமாக இருகிறதே...
ReplyDeleteநல்ல அறிமுகம் மெக் தொடர்க ...
கண்டிப்பா பார்க்கலாம்ணா ! அருமையான படம் !!!
Delete