Thursday, 25 December 2014

FORREST GUMP – ஒரு பார்வைlife was like a box of chocolates. 
You never know what you're going to get.இந்த படத்தின் பெயரைப்பார்த்ததும் , ஒரு அடர்ந்த காடு , அங்கே செல்லும் ஒரு இளைஞர் பட்டாளம் . அங்கிருக்கும் ஒரு விநோதமான ஜந்துவின் தாக்குதல் . ஸ்லீவ்லெஸ்சும் , மினிஸ்கர்ட்டும் அணிந்த ஹீரோயின் மாத்திரம் கடைசியில் தப்பிப்பிழைப்பார் என்று சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள் . ஏனெனில் இது ஒரு படமல்ல ! பாடம் . வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்பதை கண்முன் நிறுத்தும் ஹீரோவின் பெயர் தான் ஃபாரஸ்ட் கம்ப் . அது என்ன பெயர் ? இவ்வளவு வித்தியாசமாக ? ஃபாரஸ்ட்டு , ஹில்ஸ்-னு லாம் யோசிக்காதிங்க . தன்னுடைய பெயருக்கான காரணத்தையும் இந்த ஃபாரஸ்ட் நம்மிடம் பகிர்ந்து கொள்வார் .

உடனே ஃபாரஸ்ட் என்பவர் கருணையுள்ளம் கொண்ட கோடிஸ்வரராகவோ , நாட்டிற்காக உயிரை அர்ப்பணித்த ஒரு மாவீரனாகவோ , மாபெரும் கல்வியாளனாகோவா , வாரி வழங்கும் வள்ளலாகவோ , தன் குடும்பத்திற்காக உயிரைக்கொடுக்கும் பாசக்காரனாகவோ கருதவேண்டாம் . அவன் மிகவும் சாதாரணமானவன் . இன்னும் சொல்லப்போனால் , இந்த பதிவைப்படித்துக்கொண்டிருக்கும் உங்களையும் , எழுதிய என்னையும் விட குறைந்த IQ திறன் உள்ளவர் .


படத்தைப்பற்றி பார்க்கும்முன் உங்களிடம் சில கேள்விகள் .

1.   உங்கள் நண்பர் , உங்களிடம் ஒரு தொழிலைப்பற்றி கூறுகிறார் . ஐடியா முழுதும் அவருடையது. திடீரென அவர் இறந்துவிடுகிறார் .நீங்கள் அவர் சொன்னத் தொழிலைத் தொடங்கி , கடினமாக உழைத்து மாபெரும் பணக்காரர் ஆகிவிடுகிறீர்கள் .  இறந்த உங்களின் நண்பருக்கு நீங்கள் என்ன செய்வீர்கள் ?

2.   நீங்கள் மனப்பூர்வமாய் ஒரு பெண்ணைக் காதலிக்கிறீர்கள் . அவளும் உங்களைக் காதலிக்கிறார் எனினும் சில காரணங்களால் அதைத்தெரியப்படுத்தாமல் உங்களை விட்டுச் செல்கிறார் . அவரைப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் நீங்கள் சந்திக்கிறீர்கள் . அப்போதும் நீங்கள் காதலித்தபோது இருந்த மாதிரியே அவளின் குணம் இருந்தும் , அவளின் பழக்கவழக்கங்கள் , நடவடிக்கைகள் , சேர்க்கைகள் தவறாக இருக்கின்றது . அவளின் சூழ்நிலை உங்களுக்கு நன்றாய்த்தெரியும் . அவள் ஏன் அம்மாதிரி ஆனாள் என்பதும் உங்களுக்குத் தெரியும்  என்றால் , அந்நேரத்தில் என்ன செய்வீர்கள் ?


3.   நீங்கள் நாட்டிலேயே பெரும் பணக்காரர் . அதை ரோட்டில் போகும் ஒருவரிடம் சொல்லும்போது அவர் நம்ப மறுக்கிறார் . அப்போது என்ன செய்வீர்கள் ?

சரி , படத்திற்கு வருவோம் .ஒரு இறகு  காற்றில் பறந்து வருகிறது . அது நிலத்தை வந்தடையும் இடம் ஒரு பேருந்து நிறுத்தம் . அந்த இறகைக் கையிலெடுப்பவன் தான் கம்ப் .  அதை எடுத்து பத்திரப்படுத்திக்கொள்கிறான் . அவன் அருகில் ஒரு பெண்மணி , பேருந்துக்காக காத்திருக்கிறாள் . அவளுடைய ஷூவைப்பார்க்கிறான் கம்ப் . பின் அவளிடம் தன் கதையை விளக்குகிறான் . அதாவது அவனுடைய முதல் ஷூ அனுபவம் .

சிறுவயதில் தண்டுவடத்தில் ஏற்பட்ட பாதிப்பால் , தன்னிச்சையாக நடக்கும் திறனை இழக்கிறான் கம்ப் .தந்தையில்லாத கம்பிற்கு  தாய் தான் எல்லாம் . அவனுடைய தாய்க்கும் உலகமே மகன் தான் . மருத்துவர் உதவியுடன்  LEG BRACE எனப்படும் ஷூவைக் காலில் அணிந்துகொள்கிறான் . அதன் உதவியுடன் தான் நடக்கவும் செய்கிறான் . கம்ப்பிற்கு பள்ளிவயது வந்ததும் , அவனுடைய தாய் பள்ளியில் சேர்க்க முயல்கிறாள் .அதற்காக அவ்வூரிலேயே மிகப்பெரிய மற்றும் திறமையான பள்ளியை அனுகுகிறாள் . ஆனால் அவனுடையக் குறைவான IQ திறை காரணம் காட்டி , அவனை பள்ளியில் சேர்க்க மறுக்கிறார் பிரின்சிபால் . அவரிடம் மன்றாடும் கம்ப்பின் தாய் , கடைசியில் தன் உடலை பிரின்சிபாலுக்கு இரையாக்கி , கம்ப்பைப் பள்ளியில் சேர்க்கிறாள் . இதை அறியும் திறனற்றவன் தான் கம்ப் .


முதல்நாள் பள்ளிக்குச்செல்ல , பள்ளி வேனில் ஏறுகிறான் . அங்கு நம்மைப்போல இருக்கும் சில சிறுவர்கள் , நடக்கும் திறனற்ற அவனுக்கு அமர இடமளிக்க மறுக்கிறார்கள் . அப்போது தான் ஜென்னியைப் பார்க்கிறான் . ஜென்னி ஒரு ஏழைக்குடும்பத்தைச் சார்ந்தவள் . பொறுப்பற்ற தந்தை . தாயில்லாமல் வளரும் அவள் அன்புக்கு ஏங்குகிறாள் . ஜென்னியும் கம்ப்பும் , நல்ல நண்பர்களாகின்றனர் . ஒருமுறை மாணவர்கள் சிலர் கம்பைக் கல்லால் அடிக்க , அவனை ஓடுமாறுப் பணிக்கிறாள் ஜென்னி . ஃபாரஸ்ட் ஓட ஆரம்பிக்கிறான் . அதுவரை கம்பிகள் உடைய ஷூவுடன் ( நடக்கும் திறனற்றவர்கள் அணியும் LEG BRACE) நடக்கும் பாரஸ்ட் , அதன்பின் நன்றாக நடக்க ஆரம்பிக்கிறான் . வருடம் ஓடுகிறது .  அதேபோல் மாணவர்கள் கல்லால் அடிக்க , பாரஸ்ட் ஓடுவதும் தொடர்கிறது . அப்படி ஒருமுறை பாரஸட் ஓடுவதைப்பார்க்கும் PT கோச் , அவனை பள்ளியின் ரக்பி அணியில் சேர்த்துக்கொள்கிறார் . இந்த இடத்தில் ஒன்றை கவனிக்க . கம்ப்பிற்கு ரக்பியைப்பற்றி எதுவும் தெரியாது . அவனை ஓடச்சொன்னால் , அவன் ஓடுவான் . நன்றாக ஓடுவான் . மிகவும் வேகமாக ஓடுவான் . அவ்வளவு தான் .

தேசிய அளவில் ரக்பி அணியில் இடம்பிடிக்கும் பாரஸ்ட் , ஒரு கல்லூரியில் சேர்கிறான் . அதேநேரம் , தேசிய அளவிலான விளையாட்டு வீரர்களை , அதிபர் கௌரவப்படுத்த ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்கிறார் . அங்கே செல்லும் அவனுக்கு திடீர் என சூச்சு வந்துவிடுகிறது . அதேநேரம் அதிபர் அவனிடம் வந்து ‘நீங்கள் எப்படி உணருகிறீர்கள் ?’ எனக்கேட்கிறார்  நாமாக இருந்தால் , ‘முகவும் பெருமையாக உணர்கிறேன் . தங்களைச் சந்தித்தில் மிகவும் சந்தோஷம் ’ என சொல்லுவோம் . ஆனால் கம்ப் அப்படியல்ல . யார் பெரியவர்கள் ? யாருக்கு மரியாதைக்கொடுக்க வேண்டும் ? எந்த இடத்தில் எப்படிப்பேச வேண்டும் என்பதெல்லாம் அவனுக்குத் தெரியாது . ‘எனக்கு அவசரமாக ஒன்னுக்கு வருகிறது’ என்று அதிபரிடம் கூறிவிட்டு , பாத்ரூமுக்கு ஓடுவான் .


அதேநேரம் தந்தையை விட்டு பிரிந்த ஜென்னி , மகளிர் கல்லூரியில் படிக்கிறாள் . அவள் தன்னுடைய செலவுக்காக விபச்சாரத்தில் ஈடுபடுகிறாள் . அப்போது அவளைக்காண வருகிறான் ஃபாரஸ்ட் .  அவனுக்காக தன் உடலைத்தர வருகிறாள் ஜென்னி . ஆனால் உடலுறவைக்கூட புரிந்து கொள்ளமுடியாத கம்ப் , மிரள்கிறான் .

கல்லூரி வாழ்க்கை முடிகிறது . அதேநேரத்தில் அமெரிக்கா வியட்நாம் போரில் ஈடுபட்டிருக்க , ராணுவத்தில் கட்டாய சேவை செய்யுமாறு ஒரு சட்டம் அமெரிக்காவில் பிறப்பிக்கப்பட்டது . கம்ப் ராணுவத்தில் சேர்கிறான் . அங்கே புப்பா என்பவனைச் சந்திக்கிறான் . புப்பாவிற்கு மீன் பிடிப்பதில் தான் ஈடுபாடு . அவனுடைய குடும்பம் மீன்பிடி தொழிலைச்சார்ந்தது . புப்பாவின் பேச்சு எப்போதும் மீன்களைப்பற்றியும் , மீன்பிடித்தொழிலைப்பற்றியுமே இருக்கிறது . பின் இருவரும் வியட்நாமிற்கு அனுப்பபடுகிறார்கள் . அங்கே இவர்களின் மேலதிகாரியாய் டேன் என்பவர் இருக்கிறார் . அவர் குடும்பமோ , நாட்டிற்காக பரம்பரை பரம்பரையாக உயிர்நீத்தவர்கள் . ஒரு கட்டத்தில் எதிரி அணியினர் தாக்க , அப்போது டேன் கம்ப்பைப்பார்த்து ஓடுமாறு சொல்கிறார் .கம்ப் ஓடித்தப்பிக்கிறான் . ஆனால் அவசரத்தில் புப்பாவை மறந்துவிடுகிறான் . அதனால் புப்பாவைத்தேடி மீண்டும் செல்கிறான் . ஆனால் ஒவ்வொரு முறையும் அவன் செல்லும் வழியில் ,காயம்பட்ட மற்ற வீரர்களைக் காண்கிறான் . அவர்களைத்தூக்கிக்கொண்டு வந்து காப்பாற்றுகிறான் . அதேபோல் டேன்-னும் அடிபட்டு கிடக்கிறார் . அவரைத்தூக்க செல்லும் கம்ப்பை வேண்டாமென்று டேன் உத்தரவிடுகிறார் .அவர் இருகால்களையும் இழந்துவிடுகிறார் .தன் உயிர் போர்க்களத்தில் சென்றால் தான் மரியாதை என கெஞ்சுகிறார் . கடைசியில் டேன்னையும் காப்பாற்றி விடுகிறான் கம்ப் . ஆனால் புப்பா இறந்துவிடுகிறான் .


இருகால்களையும் இழந்த டேனை , ராணுவம் விடுவிக்கிறது . போரின்போது சக வீரர்களைக்காப்பாற்றிய கம்ப்பிற்கு அதிபர் கையால் விருது கிடைக்கிறது.  ‘உனக்கு எங்கே அடிபட்டது ’  என கேட்கும் அதிபரிடம் , தன்னுடைய பின்புறத்தைக்காட்டுகிறான் கம்ப் . பின் ஓய்வின்போது டேபிள் டென்னிஸ் விளையாடப் பழகுகிறான் . அதிலும் அவனுடைய உண்மையான உழைப்பைக்காட்ட , மிகப்பெரிய டேபிள் டென்னிஸ் ப்ளேயர் ஆகுகிறான் . அதிலிருந்து அவனுக்குக் கிடைத்த பணத்தைவைத்து புப்பாவின் கனவான மீன்பிடி படகை வாங்குகிறான் . அந்நேரத்தில் டேன்-னை சந்திக்கும் கம்ப் , தன்னுடன் பார்ட்னராகும்படி டேன்னை வேண்டுகிறான் . இருவரும் சேர்ந்து மீன்பிடித்தொழிலை ஆரம்பிக்கிறார்கள்  . அவர்களின் அதிர்ஷ்டம் , அமெரிக்காவில் ஒரு HURRICANE புயல் தாக்க , அந்நேரத்தில் பெரும்பாலான படகுகள் எல்லாம் அழிந்துவிடுகிறது . இவர்கள் இருவரும் மீன்பிடித்தொழில் பெரும் பணக்காரர்கள் ஆகின்றனர் . டேன் , பணத்தை ஆப்பிள் நிறுவனத்தில் முதலீடு செய்கிறார் . அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தின் பாதியை , கம்ப் புப்பாவின் குடும்பத்திற்கு வழங்குகிறான் .


அதேநேரம் , ஜென்னியோ அன்றைய அமெரிக்காவின் ஹிப்பிக்கலாசாரத்தில் மாட்டிக்கொள்கிறாள் . அதாவது , இசைக்குழு என்ற பெயரில்  போதைமருந்து , விபச்சாரம் போன்றவற்றுள் அன்றைய அமெரிக்க இளைஞர்கள் பலர் மாட்டினர் . அவர்களின் கலாச்சாரமே ஹிப்பி என்றழைக்கப்பட்டது . மீண்டும் ஜென்னியை சந்திக்கிறான் . அதேநேரம் கம்ப்பின் தாய் இறந்துவிடுகிறாள் . ஜென்னி , கம்ப்புடன் இருபதாக கூறி ஒருநாள் மட்டும் அவனுடன் தங்குகிறாள் . அடுத்தநாள் கம்ப்பிடம் சொல்லாமலே சென்றுவிடுகிறாள் .


தாயும் இல்லை , தாயிற்கு அடுத்தவளும் இல்லை என்ற நிலையில் கம்ப் , ஓட முடிவெடுக்கிறான் . அவனுக்குத்தேவை மனநிம்மதி . அம்மாதிரியான சூழலில் நம்மில் பலர் டாஸ்மாக்கில் மூழ்கிக்கிடப்போம் . கம்ப்போ ஓடுகிறான் . மொத்த அமெரிக்காவையும் சுற்றி ஓடுகிறான் . கிட்டத்தட்ட  3 வருடங்களுக்கு மேல் ஓடுகிறான் . அவன் உலக அமைதிக்காக ஓடுகிறான் , எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக ஓடுகிறான் என்று பலர் பலவிதமாக பேசுகின்றனர் . ஆனால் , அவனுக்கு ஓடவேண்டும் என்று தோன்றியதால் தான் ஓடுகிறான் என்பது யாருக்கும் புரியவில்லை . அவன் ஓடுவதைப்பார்த்து அவனுடன் ஒரு கூட்டமும் ஓடுவருகிறது . திடீரென தன்னுடைய ஓட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறான் . வீட்டிற்குத்திரும்புகிறான் . அங்கே ஜென்னியின் கடிதம் சிக்குகிறது . ஜென்னியைத்தேடி , அந்த பஸ் ஸ்டாப்பில் வந்து அமர்ந்திருக்கிறான் .


இவையெல்லாம் அந்த பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்து கொண்டு , கம்ப் அவன் பாட்டிற்கு சொல்லிக்கொண்டிருக்கிறான் .யார்ர கேட்டாலும் பரவாயில்லை , கேட்கவில்லையெனினும் பரவாயில்லை . அவனுக்கு அவன் கதையைச் சொல்லவேண்டும் எனத்தோன்றியதால் சொல்கிறான் .

கடைசியில் ஜென்னியைச்சந்திக்கிறான் . கூடவே தன் 4 வயது மகனையும் தான் . பின் ஜென்னியைத் திருமணம் செய்துகொள்கிறான் . டேன் தன்னுடைய செயற்கைக்காலுடன் , தன் வருங்கால மனைவியுடன் கம்ப்பின் திருமணத்திற்கு வருகிறார் . தன்னைக்காப்பாற்றியதற்கு நன்றி கூறுகிறார் . சில நாட்களில் எய்ட்ஸ் நோயால் ஜென்னி இறந்துவிடுகிறாள் . அவளின் கல்லறை முன் நின்று , தன் வாழ்க்கையில் மிகமுக்கியமானவர்களைப்பற்றி பகிர்ந்துகொள்கிறான் கம்ப் . பின் தன் மகனை , பள்ளிவேனில் ஏற்றிவிட்டு அவன் வருகைக்காக காத்திருக்கிறான் கம்ப் . அவன் காலடியில் ஒரு இறகு . அது மெல்ல வானத்தை நோக்கிப் பறக்கிறது . நம் மனதிலும் தான் . பாடம் முடிகிறது .

இப்போது கம்ப்பின் நிலையில் நாமிருந்தால் என்ன செய்திருப்போம் ?

மொத்தத்தில் நம் பார்வையில் , கம்ப் கிட்டத்தட்ட ஒரு முட்டாள் போன்றவன் தான் . ஒன்றுமே தெரியாத ஒரு வடிகட்டிய முட்டாள் . ஆனால் அவன் வாழ்க்கையில் பல சாதனைகளைச்செய்திருக்கிறான் . இத்தனைக்கும்  அவன் அதற்காக ஒன்றுமே செய்யவில்லை . தனக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை மனமுவந்து செய்தான் . அதில் முழு ஈடுபாட்டுடன் இருந்தான் . வெற்றி வந்ததும் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ஆடவில்லை . பிறர் கேலி பேசியதால் மனமுடைந்து போகவும் இல்லை . தான் நேசிப்பவர்கள் தனக்கு எப்போதும் உண்மையாக இருக்கவேண்டும் என்று அவன் பேராசைப்பட்டதில்லை . பிறருக்காக தன்னை அவன் அட்ஜெஸ்ட் செய்துகொள்ளவில்லை . தனக்கு அது தெரியவில்லை , இது தெரியவில்லை என்று எப்போதும் வருந்தியதில்லை . தெரியாததை ஈடுபாட்டுடன் கற்றுக்கொண்டான் . தெரிந்ததை ஊருக்கல்லாம் தம்பட்டம் அடிக்காமல் தன்னுடன் நிறுத்திக்கொண்டான் .மற்றவர்கள் புகழும்போது பெருமிதம் அடையவில்லை . அதேநேரம் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதை நினைத்துநினைத்து வருந்தி , தன்னைத்தானே சமரசம் செய்துகொள்ளவில்லை . தாயைத்தெய்வமாய் கருதினான் . காதலியை உயிராய் நினைத்தான் . நண்பர்களை இமைபோல் எண்ணினான் . பணத்தைத்தூசியாய் நினைத்தான் . புகழை ஏற்று பணத்தை விரும்பும் நமக்குக்கிடைக்காத இவ்விரண்டும் அவனுக்கு கிடைத்ததற்கு்க காரணம் அவன் இவையிரண்டையும் வாழ்வில் பெரிதாய்க் கொள்ளவில்லை என்பதாலேதான் .

இத்தனைக்கும் அவனுக்கு ஆகச்சிறந்த ஆசான் தந்தையில்லை . உடலைத்தனக்காகவே  வைத்திருக்கும் ஆசாரமான காதலியில்லை . நண்பர்கள் பட்டாளம் இல்லை . கோடிக்கணக்கான சொத்து இல்லை . மாபெரும் படிப்பில்லை. MNC – யில் வேலையில்லை என பல இல்லைகள் சொல்லிக்கொண்டே போகலாம் . அதேநேரம் அவனிடம் பொறாமை இல்லை . போட்டி இல்லை . துவேசம் இல்லை . போலித்தனமும் இல்லை .அடுத்து ஜென்னி . இவளுடைய வாழ்க்கையையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டியக்கட்டாயம் உள்ளது . ஜென்னி ஏன் அவ்வாறு மாறவேண்டும் ? சிறுவயதிலேயே தந்தையினால் மனதளவில் பாதிக்கப்பட்டவள் . அவளுடைய சிறுவயது ஆசையெல்லாம் தனக்கு தேவதைகளுக்கு இருப்பதுபோன்று சிறகு இருந்தால் எங்காவது பறந்துவிடலாம் என்பதே . தந்தையின் பிடியிலிருந்து தப்பிப்பிழைத்த அவளுக்கு , மனப்பிரச்சனையில் இருந்து வெளிவரமுடியவில்லை என்பதே உண்மை . அதன் காரணமாய் தான் போதைப்பொருளுக்கு அடிமையாவது , அப்போதை மருந்துகளை வாங்குவதற்காக விபச்சாரத்தில் ஈடுபடுவது போன்றவைகளைத்தொடர்ந்து எய்ட்ஸால் இறக்கிறாள் . நம் நாட்டிலும் சிறுவயதிலே பாலியல் வன்புணர்வுகளுக்கு உள்ளாகும் குழந்தைகளின் மனநிலையை இதனுடன் ஒப்பிடலாம் .

படத்தின் பல காட்சிகளில் பலவிதமான குறியீடுகள் ஒழிந்திருப்பதைக்காணலாம் . அமெரிக்க வரலாறு நன்கறிந்தவர்கள் , அதனை கண்டுபிடிக்க இயலும் . வாட்டர்கேட் ஊழல் , ஆப்பிள் நிறுவனத்தின் அசுரவளர்ச்சி, கென்னடி மன்றோ விவகாரம் , அதிபர்களின் தொடர்கொலைகள் , வியட்நாம் போர் , அமெரிக்க – சீன உடன்படிக்கை போன்று எண்ணற்ற விஷயங்களை தெரிந்துகொள்ளலாம் .

படத்தில் பாரஸ்ட் கம்ப்-ஆக வாழ்ந்தவர் டாம் ஹேங்ஸ் . இந்த மனிதரைப்பற்றிய தனிப்பதிவு ஒன்று எழுதப்போவதால் ஒரே வார்த்தையில் முடித்துவிடுகிறேன் . கடந்த இரு நூற்றாண்டுகளிலும் இவரைப்போன்று ஒரு மகோன்னதமான நடிகன் கண்டிப்பாய் உலகில் எங்கும் இருக்கமுடியாது . கெட்டப் சேஞ்ச் பன்றதில்லை , வித்தியாசமான நடிப்பு தருவதில்லை , ஒரேமாதிரியான நடிப்பு என்று எத்தனைக்குற்றச்சாட்டுகள் வைத்தாலும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் . இவரின் கண் இமைகள் கூட நடிக்கும் .

இந்த படத்தைப்பற்றி எழுத்துகளால் வர்ணிக்கமுடியாது என்பதே உண்மை . பார்த்து மனதால் உணரக்கூடிய திரைப்படம் இது . இந்த படம் உங்களை சிரிக்க வைக்கும் . அழவைக்கும் . வலியில் ஆழ்த்தும் .சந்தோஷமானதொரு உணர்வினைக்கொடுக்கும் . பார்த்து முடித்ததும் , இவரைப்போல் நாமும் இருக்கவேண்டும் என்று ஒருமுறையாவது உங்களை நினைக்கச்செய்யும் . பொறுமையாக பாருங்கள் . அதேநேரம் அமைதியாய் பாருங்கள் .

படத்தில் நடித்தவர்கள் , வசனம் , திரைக்கதை , மூலநாவல் ,சிஜி , ஒளிப்பதிவு , வாங்கிய விருதுகள் (6 ஆஸ்கார்) போன்றவைப்பற்றி எழுதினால் இன்னும் பத்து பக்கங்கள் எழுதவேண்டி வரும் என்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன் . இயகுநர் ராபர்ட் செமிக்ஸ் மற்றும் டாம் ஹேங்சைப்பற்றிய பதிவு ஒன்றை தனியாய் எழுதுவதால் இத்துடன் விமர்சனத்தைமுடித்துக்கொள்கிறேன் . நீண்ட நாட்களாய் எழுதவேண்டும் என்று நினைத்திருந்த பதிவு இது .  மேலும் இந்த படத்தைப்பற்றித்தெரிந்து கொள்ள விக்கிலிங்க்கில் கிளிக்குங்கள்

life was like a box of chocolates. 

You never know what you're going to get.


தொடர்புடைய இடுகைகள்


உங்கள் விருப்பம்

4 comments:


 1. Dear Sir,

  Thanks for your review!!!

  ReplyDelete
 2. விமர்சகர்களால் கொண்டாடப் படும் படம் இது ...
  நல்ல அறிமுகம் ...
  நன்றி

  ReplyDelete