JUMPER – சினிமா விமர்சனம்



உங்களின் கற்பனை குதிரையை கொஞ்சம் தயார்படுத்திக்கொள்ளுங்கள்  . உங்களுக்கு ஒரு சக்தி கிடைக்கிறது . அதாவது , நீங்கள் விரும்பிய நேரம் , உலகின் எந்த  இடத்திற்கு வேண்டுமானாலும்  ஒரேநொடியில்  சென்றுவிடலாம் என்பதே அந்த சக்தி . அது ஈபிள் டவராயினும் சரி , திருவள்ளுவர் சிலையாயினும் சரி . பாஸ்போர்ட் , விசா , ப்ளைட் சார்ஜ் என எதுவுமே தேவையில்லை .  அப்படி ஒரு சக்தி உங்களுக்கு கிடைத்தால் என்ன செய்வீர்கள் ? நானாக இருந்தால் என் அம்மாவின் பருப்பு சாதத்தை டிபன் பாக்சில் போட்டுக்கொண்டு ஆல்ப்ஸ் மலையில் ப்ரேக் ஃபாஸ்ட் முடித்து, பசுபிக் பெருங்கடலில் அந்த டிபன் பாக்சை கழுவுவேன். ஆபிசிற்கும்  வீட்டிற்கும் சென்றுவர தேவையான பெட்ரோல் காசினை வாங்கிக்கொண்டு அமெரிக்க ஐமேக்சில் ‘லிங்கா’வை பார்த்துவருவேன் . என் காதலி (இப்போதைக்கு இல்ல) அவுட்டிங் கூட்டிப்போக சொன்னால் அமேசான் காடுகளுக்கு அழைத்துசென்று , அவளைக்காட்டிலும் கொடிய மிருகங்கள் உலகில் இல்லை என்பதை அனுபவப்பூர்வமாக புரியவைப்பேன்.







இன்னும் நிறைய இருப்பினும் அதைச்சொல்லி உங்களை வெறுப்பேற்ற எனக்கு உடன்பாடில்லை . இப்படத்தின் கதை இதுதான் . டேவிட் ரைஸ் எனும் 15 வயது சிறுவனுக்கு ஒரு குடிகார தந்தை . தாயோ அவன் 5 வயதாய் இருக்கும்போதே ஓடிவிடுகிறாள் . பள்ளியில் அவனுடன் படிக்கும் மில்லி ஹாரிஸ் எனும் பெண்ணை ஒருதலையாய் விரும்புகிறான் . அவளுக்கு ஒரு பரிசு கொடுக்கும் போது , இவனை கலாய்ப்பதற்காகவே பிறந்திரு்க்கும் ஒருவனிடம் மரணகலாய் வாங்குகிறான் . இவனுடைய பரிசினை தூக்கி அவன் எறிய , டேவிட் அதை எடுக்க போகும்போது பனியாற்றின் நடுவில் மாட்டிக்கொள்கிறான் . எல்லோரும் அவன் இறந்துவிட்டதாக நினைக்கும்போதுதான் டேவிட்டிற்கே ஒரு விஷயம் தெரிகிறது . அதுதான் நான் மேலே கூறிய சக்தி . அதன்பின் அவன் அந்த சக்தியை முறையாக பயன்படுத்தி பின் வங்கிகள் உட்பட அனைத்தையும் கொள்ளையடிக்கிறான் .  பின் வீட்டை விட்டு வெளியேறி  , ஒரு ராயலான ஓட்டலில் , பயங்கர லக்சரி வாழ்க்கையை வாழ்கிறான் . காலையில் அமெரிக்காவில் இருந்து கிளம்பி சியோல் சென்று பிரேக்பாஸ்டை முடித்துவிட்டு , அட்லாண்டிக் கடலில் குளித்துவிட்டு போலாந்தில் சரக்கடிக்கிறான் . இப்படியாக தன் 8 வருடத்தை கடக்கும் டேவிட்டுக்கு ஒரு ஆபத்து. திடிரென ரோலன்ட் என்பவன் இவனைக்கொல்ல வர , அங்கிருந்து உயிர்பிழைத்தால் போதுமென தப்பித்து ஓடிவருகிறான் . அதன்பின் மீண்டும் தன் காதலியை சென்று கண்டுபிடித்து , அவளுடன் ரோம் சென்று தன் காதலை வெளிப்படுத்துகிறான் . இம்முறை ஒரே நொடியில் செல்லாமல் , ப்ளைட் பிடித்து 10 மணிநேரம் கழித்துதான் செல்கிறான் . அவளுக்கு அவனுடைய சக்தி பற்றி தெரிந்தால் அவனை விட்டு போய்விடுவாளோ என்ற பயத்தில் மறைக்கிறான் . ஒருமுறை திடிரென பலர் அவனை கொல்ல வர , அப்போது இன்னொருவன் வந்து அவனை காப்பாற்றுகிறான் . அவன் பெயர் கிரிஃபின் எனவும் , கொல்ல வந்தவர்கள் பாலட்டின் என்ற இனம் என்பதையும்  , டேவிட்டும் அவனும் ஜம்பர் இனத்தை சார்ந்தவர்கள் என்பதையும் தெரிவிக்கிறான் . இந்த பாலட்டின்களுக்கு , ஜம்பர்களை கொல்வதே வேலை .இதை அறியும் டேவிட் தன் காதலியை உடனே பிளைட் ஏற்றி அனுப்பிவிடுகிறான் .

ஆனால் அதன்பின்தான் தெரிகிறது .பாலட்டின்கள் , ஜம்பர்களை மட்டுமில்லாமல் அவர்களின் நண்பர்கள் , தாய் , தந்தை , காதலி , சகோதரன் என ஜம்பர்கள் சம்பந்தபட்ட அனைவரையும் கொன்றுவிடுவார்கள் . உடனே தன் வீட்டிற்கு செல்லும் டேவிட் , அங்கே தன் தந்தை குற்றுயிரும் கொலையுயுருமாய் இருப்பதை கண்டு அதிர்கிறான் . பின் தன் காதலியை தேடி ஏர்போர்ட் சென்றால் , அவள் ஒருமணிநேரம் முன்னமே வீட்டிற்கு சென்றுவிட்டாள் என்று அறிந்து அங்கு செல்கிறான் . அங்கு ரோலன்ட் இவனைப்பிடித்து கொல்ல முயற்சிக்க  , அதேநேரம் மில்லியை காப்பாற்ற இவன் போராட , இன்னொரு புறம் கிரிஃபின் பாலட்டின்கள் அனைவரையும் அழிக்காமல் விடமாட்டேன் என பாமை செட் செய்ய என பல விஷயங்களை கிளைமேக்சில் டயர்டாகாமல் வைத்திருக்கிறார்கள் .


திரைக்கதை , ஒளிப்பதிவு , லொகேசன்கள் , ஹீரோ ஹீரோயின் தேர்வு என அத்தனையும் பக்காவாக செய்திருக்கிறார்கள் . இந்த படத்தின் பெயரில் PS2 , XBOX 360 கேம்கள் ரிலிசாகி உள்ளன . மேலும் இப்படத்தின் திரைக்கதையை எழுதியவர் , டேவிட் . எஸ் . கோயர் . இவர்தான் பேட்மேன் உட்பட பல படங்களில் கதாசிரியார் . இப்படத்தின் டைரக்டர் EDGE OF TOMMOROW , Mr.& Mrs SMITH போன்ற ப்ளாக்பஸ்டர் படங்களை இயக்கிய DOUG LIMAN .



இப்படத்தின் ஹீரோ ஹெய்டன் , ஸ்டார் வார்ஸ் , அவேக் போன்ற படங்களில் நடித்துள்ளார் . நன்றாக நடித்திருந்தார் . அதுவும் காதல் சீன்களில் ஒரு பிரம்மாதமான நடிப்பென்றே சொல்லவேண்டும் . ரோலன்டாக சாமுவேல் ஜாக்சன் . இவரைப்பற்றி தெரியாதவர்கள் இருக்கமுடியாது என்பதால் அடுத்து  கிரிஃபனாக வரும் ஜேமி . இவர் டின்டின் படத்தில் அந்த சின்னப்பையனாக (டின்டின்) நடித்தார் . மற்றபடி ஹீரோயின் அன்னசோபியா , ஜாடிக்கேத்த மூடி போல் ஹெய்டனுக்கு ஏற்ற ஜோடியாக இப்படத்தில் தெரிந்தார் . படத்தில் விஷூவல் காட்சிகள் மற்றும் ஆக்சன் சீன்களுக்காக இப்படத்தினை தவறவிடாமல் பாருங்கள் . சயின்ஸ்ஸ பிக்சன் , அட்வெஞ்சர் , திரில்லர் ரசிகர்களும் ஜாலியாய் பார்க்கலாம் . பார்த்து முடிந்ததும் , நமக்கும் இந்த சக்தி இருந்தால் என்னசெய்திருப்போம் என்று உங்களையும் எண்ணவைக்கும் திரைப்படம் .




தொடர்புடைய விமர்சனங்கள்



ETERNAL SUNSHINE OF SPOTLESS MIND




PUSS IN BOOTS




LIFE IS BEUTYFULL



IT'S A WONDERFUL LIFE



THE FOUNTAIN

Comments

Post a Comment

Popular posts from this blog

PERFUME – ஒரு பார்வை

MALENA (18+) – சினிமா விமர்சனம்

FIGHT CLUB – சினிமா விமர்சனம்