AVENGERS 2 – சினிமா விமர்சனம்






AGE OF ULTRON

இப்படத்தின் இயக்குநர் ஜோஸ் வேட்டன் மீது சென்ற வாரம் ஒரு புகார் எழுந்தது . அதாவது தலைவர்  2012-ல் எழுதிய CABIN IN THE WOODS எனும் பேய்த்திரைப்படம் , தன்னுடைய கதையைத் திருடித்தான் எழுதப்பட்டது என ஒருவர் வழக்குத்தொடுத்திருந்தார் . என்னடா இது என்று அதிர்ந்து நின்றேன் . பின்ன ! தலைவர் யாரு ? 2012 –ல் உலகையே கலக்கிய அவெஞ்சர்ஸ் முதல் பாகத்தை எழுதி, இயக்கிவர் . அப்பேர்பட்டவர்மேல் அபாண்டமாக பழிசுமத்துகிறார்களே என்று பொங்கி எழுந்தேன் . அதெல்லாம் எவ்வளவு பெரிய தவறு என்று இன்றுதான் புரிந்துகொண்டேன் . உண்மையாகவே இவர் கதையைத்திருடியிருப்பாரோ என்று சந்தேகப்படுமளவுக்கு என்னை வதக்கியெடுத்து விட்டார் . அதற்குமுன் ஒரு சிறுகுறிப்பு . இது என்னுடைய பார்வையில் எழுதும் பதிவு . இப்பதிவில் வந்து ‘யோவ் ! நீ சீட்டுக்கு அடியில படுத்துகினு படம்பாரு யா . இது ஒரு அற்புதமான காவியம் ’ என்றெல்லாம் கமெண்ட வேண்டாம் . அப்படி கமெண்ட ஆசையிருந்தால் என்னுடைய நம்பருக்கு டிக்கட் சார்ஜ் 70 + பார்க்கிங் டோக்கன் 10 + பெட்ரோல் சார்ஜ் 30 என மொத்தம் 110 ரூபாய்க்கு ரிசார்ஜ் செய்துவிட்டு , பின் கமெண்டலாம் .

பொதுவாக சூப்பர்ஹீரோ திரைப்படங்களில் லாஜிக் என்ற வார்த்தையை கபாலத்திலிருந்து கழட்டிவைத்துவிட்டுத்தான் பார்க்கவேண்டும் . இத்திரைப்படத்தைப் பார்க்கவேண்டுமெனில் கபாலத்தையே கழட்டிவைத்துவிட்டு வேண்டுமானால் ட்ரைசெய்யலாம் . கொஞ்சம்கூட கூச்சமே படாமல் அவெஞ்சரின் முதல்பாகத்தில் என்னசெய்தார்களோ , அதே கருமாந்திரத்தை இதிலும் செய்துவைத்துள்ளார்கள் . முதல்பாதியானது பூமர் சூயிங்கத்தைவிட சொய்ங்சொய்ங் எனில் இரண்டாம்பாதி அனுமன் வாலைவிட இழுஇழுஇழுவென இழுத்துக்கொண்டே போகிறது . அதாகப்பட்டது முதல்பாகத்தில் முதல்பாதியானது இழுவை என்பதை எப்பேர்பட்ட அவெஞ்சர் ரசிகனும் ஒப்புக்கொள்வான் . ஆனால் அந்த இழுவையின் பிண்ணனியில் ஒரு மெல்லிய த்ரில்லர் வகையறா கதை இருக்கும் . நாமும் ஏதாவது நடக்கும் நடக்கும் என எதிர்பார்ப்போம் . இத்தனைக்கும் முதல்பாகம் வருவதற்குமுன் வெளிவந்த அவெஞ்சரின் மற்றைய படங்களான கேப்டன் அமெரிக்கா , அயர்ன்மேன், தோர் , ஹல்க் போன்ற படங்களோட முதல்பாகம் எவ்விதத்திலும் சம்பந்தப்பட்டிருக்காது  (Exept thor & captain america). ஆனாலும் நம்மை ஒருவகையாக ஆசுவாசப்படுத்தி இரண்டாம்பாதியின்  கடைசி அரைமணிநேரம் நம்மை யோசிக்கவிடாமல் ஏதேதோ செய்து நம்மை வசியப்படுத்தியிருப்பார்கள் . ஆனால் இப்படமோ , மற்ற அவெஞ்சரின் அனைத்துப்பாகங்களிலும் சம்பந்தப்பட்டு இருக்கிறது . எடுத்துக்காட்டாக கேப்டன் அமெரிக்காவின் தி வின்டர் சோல்ஜர் திரைப்படத்தில் நிக் ஃப்யூரியின் உண்மை முகம் . தாரின் இரண்டாம் பாகத்தில் தப்பிய லோகியின் மீதி . ஆனால் சம்பந்தமே இல்லாமல் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸை எடுத்து , தனக்கு துளிகூட இன்டெலிஜென்ஸ் இல்லை என்பதை நிருபித்திருக்கிறார் இயக்குநர் ஜாஸ் .

மார்வல் நிறுவனம் எப்படித்தான் இப்படியொரு உப்புசப்பையற்ற திரைக்கதையை ஏற்றுக்கொண்டு திரைப்படத்தை இயக்க வாய்ப்பு வழங்கியதோ தெரியவில்லை . உலகின் ஆற்றல்மிக்க ஹீரோக்களை வைத்து நொன்டி விளையாட்டு விளையாடிருக்கிறார்களோ என்ற எண்ணம்தான் வருகிறது . இது வின்டர் சோல்ஜர் போல் த்ரில்லர் – ட்ராமாவிலும் வராமல் , அயர்ன்மேன் போல் பக்கா கமர்ஷியலாகவும் வராமல் , தோர் போல் என்டர்டெய்ன்ட்மென்டாகவும் வராமல் எல்லாவற்றையும் குழப்பி பஞ்சாமிர்தமாகவும் எடுக்காமல் வாந்தியாக்கிருக்கிறார்கள் . சரி , கிராபிக்ஸ் குப்பை என்றாலும் , கொடுத்த காசுக்கு ஏற்ற கிராபிக்ஸாவது இருக்கும் என்று எதிர்பார்த்தால் அதுவுமில்லை . பொதுவாக இருட்டாக எடுக்கப்படும் காட்சிகளில் செலவு குறைவாக , எளிமையாக கிராபிக்சை இயக்கிவிடலாம் . அந்த கருமத்தை ஏற்கனவே அவெஞ்சர்ஸின் முதல்பாகத்திலேயே  செய்திருப்பார்கள் . இப்படத்தின் செலவைக்குறைக இவர்கள் செய்த காரியம் அதுதான் . படம் முழுக்க இருட்டு தான் . சில காட்சிகள் வெளிச்சத்தில் எடுக்கப்பட்டிருந்தாலும் அதுவும் ஒருவித பழுப்பு வண்ண நிறத்தில் படமாக்கி கண்ணுக்கு சூட்டினை ஏற்றிவிட்டார்கள் . அதனாலோ என்னவோ , ஒரு கருமாந்திரமும் பெரிதாக தெரியவில்லை . இதற்குமுன் வந்த அவெஞ்சரின் மற்ற படங்களின் கிராபிக்ஸ் காட்சிகள் பகலில் எடுத்திருப்பார்கள் .  நல்ல தெளிவான HD யில் பார்ப்பது போன்றதொரு உணர்வினைத்தரும் . ஆனால் இப்படமோ தியேட்டர்க்குள்ளேயே திருட்டுவிசிடியில் பார்த்தது போலிருந்தது .  சில இடங்களில் கிராபிக்ஸ் நன்றாக இருந்தும் இந்த கேவலமான DI யினால் பெரிதாக தெரியவில்லை .  

இந்த ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் பற்றி குப்ரிக்கிலிருந்து ஸ்பில்பெர்க் , நோலன் என இக்கால இயக்குநர்கள் வரை கையான்டுள்ளார்கள் . ஆனால் முட்டாள்தனமாக கையான்டவர்களில் முதலாமானவர் இப்படத்தின் இயக்குநராகத்தான் இருப்பார் . இவ்வளவு அடிமுட்டாள்தனமான வில்லனை நான் தெலுங்குபடங்களில் கூட பார்த்தது இல்லை . அதுவும் சுயமாக யோசிக்கும் ஒரு மெஷின் , இப்படி கொஞ்சம்கூட யோசிக்கத்தெரியாத அளவிற்கு இருக்குமென்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை . மனிதனின் 4 % மூளை வேலைசெய்தாலே பட்டையைக்கிளப்பி விடுவான் . அப்படி இருக்கும்போது அதைக்காட்டிலும் அட்வான்ஸ்டாக இருக்கும் ஒரு  AI ரோபோ , படுகேவலமாக யோசிப்பதற்குபதில், தமிழ் சினிமாவில் துரைசிங்கத்திடம் அடிவாங்கிய பாகிஸ்தான் தீவிரவாதியையே வில்லனாக போட்டிருக்கலாம் . இது என்னவோ கவிதையெல்லாம் பாடிக்கொண்டு ‘நான் உலகை மாற்றுகிறேன்’ என மொக்கைப்போடுகிறது .

முதலில் சூப்பர்ஹீரோக்களின் டெபினிஷன் என்ன ? எங்கேயிருந்தாவது வில்லன் கிளம்பினால் அவனைப்போட்டுத்தள்ளிவிட்டு பூமியைக்காப்பாற்றுவது தானே ? ஆனால் இந்த அவெஞ்சர்ஸ் இருக்கானுங்களே ! வில்லனாக முதல்காட்சியில் வந்து பரிதாபமாக இறப்பவனே செய்திருந்தால் கூட இந்த ரோபாட் வில்லனை உருவாக்கியிருக்கமாட்டான் . ஆனால் அவனிடமிருந்து உலகைக்காக்கிறேன் எனக்கூறிவிட்டு , ச்சும்மா இருந்த ரோபோவிற்கு சக்திகொடுக்கிறேன் என்று இவர்களே அந்த வில்லன் ரோபாட்டையும் உருவாக்கிவிட்டு , குத்துதே குடையுதே என்று ஒரு ஊரையே நாசமாக்கிவிட்டார்கள் . கடைசியில் நாங்கள் தான் உலகை காப்பாற்றியவர்கள் என்று பெருமைப்பீற்றிக்கொள்கிறார்கள் . இதேபோல் தான் முதல் பாகத்திலும் செய்திருப்பார்கள் என்றாலும் வில்லன் தானாக வலிய வந்து சிக்குவான் . ஆனால் இப்படத்திலோ , இவர்களே உருவாக்கிவிட்டு கதறுவார்கள் . நான் அப்போதே நினைத்தேன் . அந்த AGE OF ULTRAN , AGE OF EXTINCTION என வரும்படங்களெல்லாம் நம் பொறுமையை சோதித்துவிடும் என்று . ஆனால் இன்று தான் தெளிவாக உணர்ந்தேன் . இனிமேல் எக்காரணம் கொண்டும் AGE என்று ஸ்டார்ட் ஆகும் படத்திற்கு போகவே கூடாது .

சரி , செம காண்டாகி முதல்ல கதைய சொல்லுடா ! அப்றம் மொக்கையா ? நல்லா இருக்கானு நாங்க பாத்துக்கறோம்னு நீங்க திட்றது கேக்குது . ஏற்கனவே கேப்டன் அமெரிக்காவின் முதல்பாகத்தில் மிச்சம்மீதி தப்பியிருந்த ஹைட்ராவின் ஆட்கள் , லோகியின் சின்ன கல்லை (I think its tesaract) ஏதோ பரிசோதனை செய்கிறார்கள் . அதை அழிக்கவரும் அவெஞ்சர்களிடம் அந்தக்கல் கிடைக்கறது . மாட்டு சாணத்தையே எடுத்து நோண்டிப்பார்க்கும் ஸ்டார்க் , அந்த கல்லைச்சும்மா விடுவாரா ? அதை நோண்டி கடைசியில் அதிலிருந்து AI யை உருவாக்க முடியும்  ( ARTIFICIAL INTELLIGENCE பற்றி மேலும் அறிய விரும்புபவர்கள் இங்கே க்ளிக்கவும் ) என்பதனை கண்டறிகிறார் . அதன்படியே செய்து அதை உருவாக்கியும் விடுகிறார் . அதன்பெயர்தான் அல்ட்ரான் . அந்த அல்ட்ரானானது உலகைக்காப்பாற்ற உருவாக்கப்பட்டது . ஆனால் அது உண்மையாக உலகம் நன்கு வாழவேண்டுமெனில் அதனை மாற்றம் செய்யவேண்டும் என்று முடிவெடுக்கிறது . அதன்படி அவெஞ்சர்ஸ்தான் உலகின் மிகப்பெரும் ஆபத்தாக இருக்கிறார்கள் என்று நினைத்து அவர்களைப்போட்டுத்தள்ள முடிவெடுக்கிறது . அதேநேரம் உலகம் மீண்டும் அழிந்தால்தான் சமநிலையாகும் என்றும் நினைக்கிறது . இங்கு இன்னொரு விஷயம் என்னவெனில் ஹைட்ராவின் ஆட்கள் ஒரு அண்ணன் – தங்கைக்கு விஷேச சக்தி கிடைக்க வழிசெய்திருக்கிறது . அதன்படி பீட்ரோ என்பவனுக்கு DAYS OF FUTURE-ஐப்போல் மிகவேகமாக செயல்படும் சக்தியும் அவன் தங்கையான வான்டேவுக்கு ஹிப்னாடிசம் எனும் சக்தியும் கிடைக்கிறது . இவர்கள் இருவரும் டோனி ஸ்டார்க் மீது கடுமையான கோவத்தில் இருப்பதால் அவெஞ்சர்சை எதிர்க்கிறார்கள் . இந்நேரத்தில் புதிதாக உருவான அல்ட்ரான் இவர்கள் இருவரையும் வைத்து அவெஞ்சர்ஸுக்கு கண்ணாமூச்சி காட்டுகிறது. ஒருகட்டத்தில் மனித திசுக்களை வைத்து உண்மையாகவே ஒரு AI-யை உருவாக்குகிறது . அது உருவானால் பேரழிவாக இருக்கும் என்பதால் அவெஞ்சர்ஸ் இறங்குகிறார்கள் . அதேநேரம் பீட்ரோவும் வான்டேவும்  அல்ட்ரானின் உண்மை குணத்தை அறிந்து அவெஞ்சர்ஸுடன் கூட்டணி சேருகிறார்கள் . அதன்பின் அந்த மனித AI அவெஞ்சர்ஸிடம் வருகிறது . அதை ஸ்டார்க் நல்ல AIயாக மாற்றுகிறார் . அதேநேரம் ஒரு நகரையே பிழந்தெடுத்துக்கொண்டு அல்ட்ரான் செல்லுகிறது . அதை பூமியில் மீண்டும் மோதவிட்டு பேரழிவை ஏற்படுத்தி உலகை அழிக்கமுயற்சிக்கிறது . அதை இவர்கள் எப்படி முறியடிக்கிறார்கள் என்பதே கிளைமாக்ஸ்.

இந்த அல்ட்ரான் கான்செப்ட் அப்படியே எந்திரனை நியாபகப்படுத்துகிறது . ஓ சாரி ! I ROBOT-ஐ நியாபகப்படுத்துகிறது . பீட்ரோவின் சக்தி DAYS OF FUTURE ஐயும் கிளைமேக்ஸ் நகர இடம்பெயர்வு முதல்பாகத்தையும் , கேப்டன் அமெரிக்காவின் இரண்டாம் பாகத்தையும் நினைவிற்கு கொண்டுவருகிறது . இந்த அல்ட்ரான் கேரக்டர் 1968 – ல் வெளிவந்த காமிக்சைக்கொண்டு வடிவமைத்திருந்ததாலோ என்னவோ , அதேகாலகட்டத்திலிருந்த மூளைத்திறனையே பயன்படுத்தியிருக்கிறார்கள் . படம்பார்க்கும்போது ஆடியன்சுக்கு ‘இது என்ன ? அது எப்படி ?’ என்று டவுட் வரவேண்டும் . ஆனால் இங்கோ அவெஞ்சர்களே அப்படி சந்தேகப்பட்டு கேட்டுக்கொண்டிருக்கிறார்களே தவிர , நமக்கு வெறுப்பு தான் வருகிறது . அப்படியே விளக்குவதும் புரியும்படி விளக்கினால் தேவலாம் . ஒருவேளை தமிழில் சரியானபடி மேட்டரை டப் செய்யவில்லையோ என்னவோ !  படத்தின்முடிவைப்பார்க்கும்போது இப்பாகம் வேண்டுமென்றே மொக்கையாக எடுக்கவேண்டும் என்று கங்கணம் கட்டி எடுத்திருப்பார்கள் என்ற எண்ணம்தான் தோன்றுகிறது . 300 படத்தின் இரண்டாம்பாகம் கூட மூன்றாம் பாகத்தின் ஹைப்பை அதிகரிக்கவேண்டுமென்ற நோக்கத்தில் எடுக்கப்பட்டிருந்தாலும் அதில் ஒருமுறை பார்க்கும் வண்ணம் எடுத்திருப்பார்கள் . ஆனால் இங்கோ ‘டேய் ! நீ எப்படி கொட்டாவி விடாம பாக்கறனு நானும் பாக்கறேன்டா’ என்ற சபதத்துடன் எடுத்துள்ளார்கள் .

படத்தின் ஆறுதலாக நான் நினைப்பது முதல் இருபது நிமிட காட்சிகள் ,கடைசி 10 நிமிட காட்சிகள் மற்றும் ஆங்காங்கே வரும் ஹூயுமரான வசனங்கள் . கமர்ஷியலாக ஆடியன்ஸிடம் ஹைப்பை ஏற்றவேண்டும் என்று ஏதேதோ பெரும்பிரயத்தனம் செய்திருக்கிறார்கள் . ஆனால் நாம் தூங்கியபின் ஹைப் ஏற்றி என்ன பிரயோஜனம் ? நன்றாக இருந்தாலும் நம்மால் ரசி்ககமுடியாமல் போய்விடுகிறது . இசை , ஒளிப்பதிவு பற்றியெல்லாம் நான் கவனிக்கவில்லை . அசுவாரஸ்யமான திரைக்கதை , அதைப்பற்றி யோசிக்கவே விடவில்லை . தியேட்டரைவிட்டு வெளியேறுவது எப்போது என்ற ஆவல்தான் மிகுந்திருந்தது . எடிட்டரை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது . ஏதோ ஒன்றிரண்டு காட்சிகளைத்தவிர மற்றவற்றையெல்லாம் படக் , படக்கென்று கட் செய்துவிட்டார் . தேவையில்லாத காட்சிகளை எல்லாம் அப்படியே ஓடவிட்டுவிட்டார் . சரி , அந்த காட்சிகளை கட் செய்தால் மிஞ்சுவது முக்கால்மணிநேரத்திரைப்படம் என்பதால்தான் அதை கட் செய்யாமல் விட்டுவிட்டார் என நினைக்கிறேன் . இந்த DI , VISUAL EFFECTS, CGI போன்ற துறைகளுக்கு சரியான சம்பளம் தரவில்லை என்று நினைக்கிறேன் . 3D யும் சுமார் ரகம் தான் .


மொத்தத்தில் , ரொம்ப எதிர்பார்த்து மட்டும் போய்விடாதீர்கள் . அப்புறம் என்னைப்போலவே புலம்பிக்கொண்டிருக்கவேண்டும் . எந்தவிதமான எதிர்பார்ப்போ , அவெஞ்சரின் மற்ற பாகங்களை பார்க்காமல் இருந்தாலோ இந்த திரைப்படத்தை தாரளமாக பார்க்கலாம் . கான்செப்ட் என்றபெயரில் செம குழப்பு குழப்புவார்கள் . அதைத்தெரிந்து்கொண்டாலும் ஒன்றும் பிரயோஜனமில்லை .   படுசுமார்ர ரகமாகத்தான் படம் இருக்கிறது . நான் வின்டர் சோல்ஜர் பார்த்த பாதிப்பில் சென்றதால் பெருத்த ஏமாற்றமாகிவிட்டது . அதனால் கொஞ்சம் ஓவராகவே எழுதிவிட்டேன் . அடுத்த இரு சீக்வலும் வின்டர் சோல்ஜரின் இயக்குநர்கள் இயக்குவதால் அதை நம்பலாம் .  இத்திரைப்படம் அவெஞ்சர் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம்தான் . என் நண்பர்களுல் பலர் அவெஞ்சரின் சீரியஸ் ரசிகர்கள் . எனக்கு மட்டும் தான் இந்தஃபீலிங்கோ என்று அவர்களிடமும் கருத்தைக்கேட்டேன் . அவர்களே படம் படு DISSAPPOINTMENT என்றுதான் தெரிவித்தார்கள் . இனி உங்கள் இஷ்டம் .

Comments

  1. This is about your previous post on "Departed". I could not post there. Martin Scorsese is of Italian American heritage not Irish. The movie Departed was adapted from a Korean movie called "Infernal Affairs". Scorsese is a great director and did a great job on "Departed".

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க தல ! ஒரு சின்ன குழப்பத்துல மாத்தி எழுதிட்டேன் . அவரு ஒரு இத்தாலிய-அமெரிக்கர் தான் . அதுனால தான் ப்ரான்சிஸ் ஃபோர்ட் கொப்பொல்லோ கூட இன்னும் நட்புல இருக்காரு . ஆனால் அவர் அமெரிக்கா வந்தபின் ஐரிஷ் மக்கள் வாழ்ந்த இடங்கள்ல அதிகமா இருந்தாரு . அதுவும் ஒரு காரணமா இருந்ததால தான் டிபார்ட்டட் எடுத்தாரு . அதேநேரம் இன்ஃபெர்னல் அபைர்ஸ் படத்தோட கருவ மட்டும்தான் எடுத்துக்கிட்டாரு . ரீமேக்னு officialஆ சொன்னாலும் ஒரு சாதாரணமான திரைப்படத்தை அசாதரணமா இயக்கியிருப்பாரு ஸகார்சேசே . தமிழின் கம்பராமயணம் ரீமேக்னு யாரும் சொல்லமாட்டாங்க . அதேமாதிரி இப்படம் என்னைப்பொறுத்தவரை . அதனால தான் இ.அ பற்றி நான் குறிப்பிடல . நன்றி சகோ. ..

      Delete
  2. படம் பார்த்தது போன்ற பிரமை அபாரம்
    நண்பரே நலம்தானே... ?

    ReplyDelete
  3. நல்ல விமர்சனம்...

    இன்று வந்து விட்டது கருத்துப் பெட்டி...!

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. அருமை அருமை... படத்தில் பார்த்ததை அப்படியே எழுதியிருக்க டூட்... கீப் இட் அப்...

    ReplyDelete
  5. இப்படத்தைப் பற்றிய உங்களுடைய கருத்தும் என்னுடைய கருத்தும் 90% ஒத்துப்போகின்றது. இப்போதைய நிலவரப்படி எனக்கு மிகவும் பிடித்த Marvel படம் Captain america winter soldier மட்டுமே... இன்னும் பல Marvel படங்கள் நமது தாலிய அறுக்க வருகின்றன.(Black Panther, Captain Marvel, Doctor strange, Ant Man இதுபோன்று இன்னும் பல...). ஆனா என்னதான் மொக்கையா எடுத்தாலும் படம் பார்க்காமலா இருக்க போகின்றோம்...

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ! தல .. நா கொஞ்சம் உஷாராயிட்டேன் . இனிமேல் மார்வெல் எடுக்கபோகும் திரைப்படங்களின் இயக்குநரை வைத்து தான் தியேட்டருக்குச்செல்லப்போகிறேன் . மொக்கை இயக்குநர் என்றால் அப்படியே பொத்தினாற்போல் டி.விடியில் பார்த்து விடுவேன் . நம்மாள தியேட்டருக்குப்போய் கதறமுடியாது தல ...

      Delete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை