ARTIFICIAL INTELLIGENCE - சினிமா விமர்சனம்




ARTIFICIAL  INTELLIGENCE –  மனிதன் , எப்போது தன்னால் சிந்திக்கமுடியும் என்று உணர்ந்தானோ , அன்றுமுதல் ஆரம்பமானதுதான் இந்த AI . இதன் வரலாற்றை எடுத்துப்பார்த்தால் கி.முவுக்கு முன்னால் இருந்தே இதைப்பற்றிய  ஆராய்ச்சிகள் நடைபெற்றதை பழங்கால உலக இலக்கியங்களின் மூலம் அறியலாம் . விஞ்ஞானத்தின் அடுத்தகட்டம் எதுவென்றால் ,AI தான் என்று தயங்காமல் கூறலாம் . இயற்கையாக ORGANIC ஆக உருவாகிய உயிர்களிடத்தில் மட்டும்தான் , தானே சிந்திக்கும் சக்தி இருக்கிறது . அதில் அதிபுத்திசாலி என்றால் மனிதன் . கிட்டத்தட்ட கடந்த மூன்று நூற்றாண்டுகளில் உலகின் போக்கையே மாற்றிக்காட்டிய மனிதன் , அடுத்ததாய் செல்லவிருக்கும் தளம்தான் AI . மனிதர்கள் எப்படி சிந்திக்கிறார்களோ , அதேபோல் தானே , சுயமாய் சிந்திக்கும் மெஷின்களை உருவாக்குவதுதான் AI . நமக்கு AI என்றவுடன் ஞாபகம் வருவது ரோபாட்கள் தான் . ஆனால் உண்மையில் AI என்பதும் ஒரு கணினி மாதிரியானது தான் (2001 A SPACE ODESSEY யில் வரும் HAL 9000 – மற்றும் HER ஆகிய படங்களை நியாபகம் கொள்க ) அதற்கென்று தனி உருவம் கிடையாது . நாம் உருவாக்கும் இயந்திர பாகங்களைக்கொண்டு , எப்படிவேண்டுமானாலும் உருவமாக்கிக் கொள்ளலாம் . எந்திரன் படத்தில் வருவது போன்ற ஹூமனாய்டு ரோபாட்டுகளாகவும் உருவாக்கிக்கொள்ளலாம் , இல்லையெனில் HAL போன்ற கணினியாகவும் உருவாக்கிக்கொள்ளலாம் . ஆனால் இன்னும் AI எனும் விஷயத்தில் , மனிதர்கள் முழுமையாக வெற்றியடையவில்லை என்பதனையும் ஒப்புக்கொள்ள வேண்டியுள்ளது .ரோபாட்டிக்ஸ் எனும் விஞ்ஞானத்தின்  பரிமாணத்தின் கடைசிநிலை AI –ஆக இருக்குமென்பதால் , ரோபாட்டிக்ஸ் பற்றியும் நாம் கொஞ்சம் தெரிந்துகொள்ளவேண்டும் .


ரோபாட் என்ற வார்த்தையை முதன்முதலில் தன் நாடகத்தில் பயன்படுத்தியவர் செக் நாட்டு எழுத்தாளர் கார்ல் கோபக் தான் .1923 ல் இங்கிலாந்தில் அவர்நடத்திய ROSSUM’S UNIVERSAL ROBOT என்ற நாடகத்தில்தான் ROBOT எனும் வார்த்தை முதன்னமுதலில் உபயோகிக்கப்பட்டது . (அதைப்பற்றியும் எழுதவேண்டும் என்ற ஆசை இருப்பினும் , இது சினிமா விமர்சனம் என்பதால் இத்துடன் போதும் என்று என் மனதை தேற்றிக்கொள்கிறேன் ) . அதன்பின் 1950 – ல் ஐசக் அசிமோவின் THREE LAWS OF ROBOTICS என்ற புத்தகத்தின்மூலம் தான் ரோபட்டுகள் மற்றும் AI  பற்றிய தெளிவான விஷயங்கள் பல புலப்பட்டன . அதன்பின் கிறிஸ்டோபர் என்பவர் முதன்முதலில் தானே சிந்தித்து இயங்கும்படியான ஒரு கணினி ப்ரோகராமை எழுதினார் . அந்த ப்ரோகிராம் இயங்குவதற்காக FERRANTI MARK 1 எனும் கம்ப்யூட்டர் உபயோகப்படுத்தப்பட்டது . அப்படி என்ன  ப்ரோகிராம்  என்று யோசிக்கிறீர்களா ? ரொம்ப சிம்பிள் , செஸ் விளையாடும் ப்ரோகிராம் .அதாவது ஒரு பக்கம் மனிதன் , மற்றொரு புறம் இயந்திரம்  (ஆனால் செஸ் விளையாடும் கணினிகளில் , கோடிக்கணக்கான ப்ரோக்ராம்களை உருவாக்கித்தான் விளையாடவைத்திருக்கிறார்கள் . அந்த கணினிகள் , தமக்குக்கொடுக்கப்பட்டிருக்கும் ப்ரோக்ராம்களின் அடிப்படையில்தான் செயல்படுகின்றன . மிகமுக்கியமான விஷயம் , இவை செஸ் இயந்திரங்களே தவிர , AI என்று கூறமுடியாது . ) இன்று நாம் எல்லாம் ஆன்ட்ராய்டு மொபைலில் வெளையாடும் செஸ் கேமும் , கிட்டத்தட்ட அதேதான் . அதன்பின் AI பற்றிய பலவாறான ஆராய்ச்சிகளில் உலகநாடுகள் வெறித்தனமாக ஈடுபட்டிருந்தன . அதில் பெருவெற்றி பெற்றது MIT பல்கலைக்கழகம் தான் . அங்கு AI பற்றிய ஆராய்ச்சிகள் ஏறத்தாழ அரைநூற்றாண்டுகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன .


AI – யின் பெரும் பிரச்சனை என்னவென்றால் அதன் CPU தான் . நாம் சாதாரணமாக பயன்படுத்தும் சிலிக்கன் சிப் கம்ப்யூட்டர்களின் வேகம் , AI தொழில்நுட்பத்திற்கு ஏற்றதாக இல்லை . BINARY CODE-களை வைத்து பயன்படுத்தும் நம் கணினியால் ஒருவிநாடிக்கு சில லட்சம் வேலைகளை மட்டும்தான் செய்யும் . இதற்கென்று கணினியின் அடுத்தத்தலைமுறைநோக்கிய ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர் . அவர்கள் இப்போது சென்றுகொண்டிருக்கும் இடம்தான் குவாண்டம் கம்ப்யூட்டர் . BINARY (0,1) களை விட , பற்பல மில்லியன் மடங்கு வேகமானதும் , துல்லியமானதுமான குவாண்டம் கணினிகள் இயங்குவது QUBIT – களை வைத்து . அதாவது அணுவினால் இயங்கும் கணினி எனலாம் . ஆனால் , இன்னும் நமக்கு AI என்பது ஒரு கனவாகவே இருந்துவருகிறது  . GAMES களைத்தாண்டி , GOOGLE-ன் ஆட்டோட்ரைவிங் கார் போன்றவற்றைத்தவிர , நாம் இன்னும் சுயமாய் அனைத்தையும் சிந்திக்கும் வகையிலான தொழில்நுட்டபத்தை உருவாக்கவில்லை என்றே சொல்லலாம் .(என்னைப்பொறுத்த வரை அப்படி எதுவும் உண்டாக்கக்கூடாது என்பதே என் விருப்பம் ) .

சரி , அறிவியல் போதும் . படத்திற்கு வருவோம் . ஒரு அம்மா – மகன் பாசக்கதையே இந்த ARTIFICIAL INTELLIGENCE படத்தின் மூலக்கரு . ஆனால் , ORGANIC அம்மாவிற்கும் MECHANICAL மகனுக்குமான பாசப்போராட்டம் . புரியவில்லையா ? மனித தாய்க்கும் , ரோபாட் பையனுக்குமான இடைப்பட்ட பாசம் . எதிர்காலத்தில் , உலகின் கடல்நீர்மட்டம் உயர்கிறது . நியூயார்க் நகரமே மூழ்கிவிட்டது . சில காரணங்களால் குழந்தைபெற்றுக்கொள்வது என்பது அரசால் கட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாக மாறுகிறது . அப்போதுதான் ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்பம் மற்றும் AI தொழில்நுட்பமும் உச்சத்தில் இருக்கிறது . இங்குதான் நாம் ஒன்றை கவனிக்கவேண்டும் . AI என்பது சுயமாக சிந்திக்கத்தெரிந்த ஒன்று . அவ்வளவுதான் . ஆனால் , எதிர்காலத்தில் மனிதர்கள் ரோபாட்டிற்கு உணர்ரச்சியையும் கொடுக்கிறார்கள் . ரோபாட்டுகளின் நியூரல் ஸ்கிமாவுடன் தோல் முதலானவற்றில் இருக்கும் சிறுசிறு பகுதிகளையும் , அதன் CPUவுடன் இணைப்பதன்மூலம் சாத்தியமாகிறது . இப்போது ஊசியை எடுத்துக் குத்தினால் அவைகளுக்கும் வலிக்கும் . வலித்தால் பயம் வந்துவிடும் . மேலும் சிரிப்பு , கவலை என மனிதன் செய்யும் அனைத்து விஷயங்களையும் ரோபாட்டுகள் செய்கின்றன .

 சாம் மற்றும் மோனிகா எனும் தம்பதியினரின் மகனான மார்ட்டின் , ஒருவித நோயால் கோமாவில் கிடக்கிறான் . அந்த நிலையில் சாம் , தான் வேலைசெய்யும் ரோபாட் கம்பனியில்  புதிதாக உருவாக்கப்பட்ட டேவிட் எனும் ரோபட்டினை வாங்கிவந்து மோனிகாவிற்கு தருகிறான் .டேவிட் , அம்மா பாசத்திற்கென்றே உருவாக்கப்பட்ட அதிஅற்புதமான ரோபோ . மோனிகாவும் டேவிட்டும் பழக பழக , மோனிகாவின் மீது அளவற்ற பாசம் வைக்கிறான் டேவிட் .சிறிது நாட்களில் மார்ட்டின் குணமாகி வீட்டுக்கு வருகிறான் . அவனுக்கு டேவிட்டின்மீது காழ்ப்புணர்ச்சி ஏற்பட , டேவிட்டை வீட்டைவிட்டு துரத்த நினைக்கிறான் . சந்தர்ப்ப சூழ்நிலைகளால் டேவிட்டை கொன்றுவிடுமாறு (டிஸ்மான்டல்) சாம் , மோனிகாவை வற்புறுத்தி சம்மதிக்க வைக்கிறான் . டேவிட்டை டிஸ்மான்டல் செய்ய அழைத்துச்செல்லும் மோனிகா , டேவிட்டை வீட்டுக்குமட்டும் வராதே என்றுகூறிவிட்டு ஒரு நடுகாட்டில் விட்டுவிட்டு செல்கிறாள் . டேவிட்டுக்கு துணையாய் டெடி எனும் பொம்மை ரோபோவும் இருக்கிறது . மோனிகாவுடன்ன இருந்த காலத்தில் BLUE FAIRY எனும் தேவதைக்கதையை கேட்டிருந்த டேவிட் , அந்த தேவதையைத்தேடிச் செல்கிறான் . அந்த தேவதையிடம் வேண்டி , தன்னை மனிதனாக மாற்றுமாறு வேண்டுவதே அவனுடைய ஆசை . அவனுக்குத்துணையாய் ஜோ எனும் ஆண் விபச்சார ரோபட்டும் வருகிறது . கடைசியில் இவர்கள் BLUE FAIRY-யைக்கண்டுபிடித்தார்களா ? டேவிட் தன் குடும்பத்துடன் இணைந்தானா ? என்பதே மீதிக்கதை .



ஒரு அற்புதமான  அம்மா – மகன் பாசத்தை உடைய திரைப்படம் பார்க்கவேண்டுமானாலும் சரி , சயின்ஸ் – பிக்ஷனில் உங்களை அசத்தும்படியான படம் பார்க்கவேண்டுமானாலும் சரி , தயங்காமல் இப்படத்தினை பாருங்கள் . படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் இன்னமும் என் கண்முன்னே இருக்கிறது . அதுவும் கிளைமேக்ஸ் காட்சிகளெல்லாம் , திடமனதுக்காரர்களையும் உருகவைத்துவிடும் . டேவிட்டாக வரும் ஹாலே ஹோஸ்மன்ட் , ஏற்கனவே FORREST GUMP , THE SIXTH SENSE படங்களில் நம் உள்ளத்தைக்கொள்ளை கொண்டிருப்பார் . இப்படத்தில் அவரின் நடிப்பு , சான்ஸே இல்லை என்றே கூறலாம் . நடிக்கவே இல்லை . வாழ்ந்திருக்கிறார் . மோனிகாவிடம் அன்பை எதிர்பார்த்து அவர் ஏங்கும் காட்சிகளாகட்டும் , நடுக்காட்டில் அவளிடம் தன்னையும் அழைத்துச்செல்லுமாறு கெஞ்சும் காட்சியிலாகட்டும் , வாழ்ந்திருக்கிறார் . பார்க்கும் நமக்கும் தான் அந்த இடத்தில் அவளின் காலைப்பிடித்துக் கெஞ்சலாம் என தோன்றும் . ஒட்டுமொத்தமாக பார்வையாளர்கள் அனைவரும் டேவிட்டின் நிலையை உணர்ந்து அவனுக்காக அவனைவிட நாம் தான் அதிகமாக பரிதவிப்போம் . மற்ற நடிகர் – நடிகைகளை பற்றி எழுதலாம் என்றால் , அனைத்துக்காட்சியிலும் இவரே தெரிவதால் அவர்களைப்பற்றி தனித்தனியே எழுதமுடியவில்லை . அவர்களின் பெர்பார்மன்ஸ் , சிம்ப்ளி சூப்பர்ப் என்ற ஒரே வார்த்தையில் சொல்லிவிடலாம் .

படத்தின் விஷூவல்கள் எல்லாம் அட்டகாசம் . கிளைமேக்ஸ் காட்சியில் மேன்ஹேட்டன் நகரைக்காட்டும்போது , நமக்கே திகைப்பாக இருக்கிறது . முடிந்தவரை எதிர்காலத்தை மிகஇயல்பாக காட்டியிருக்கிறார்கள் . DR.KNOW காட்சியில் வரும் குரல் யாருடையது ? எங்கோ கேட்டிருக்கிறோமே என்று மண்டையைப்பிய்த்துக் கொண்டிருந்தேன் . விக்கியில் அழகாய் போட்டிருந்தார்கள் , ராபின் வில்லியம்ஸ் என்று . இசை , எடிட்டிங் , சி.ஜி , திரைக்கதை , நாவல் அடாப்சன் , பாக்ஸ் ஆபிஸ் , ரேட்டிங் போன்ற மற்ற விஷயங்களைப்பற்றி எழுதவே தோணவில்லை . காரணம் , டேவிட்டும் , இந்த ஸ்பில்பெர்க்கும்தான் . இவர்கள் இருவர் மட்டும்தான் என்மனதில் இன்னமும் இருக்கிறார்கள் . படத்தின் இசை பற்றி ரசிக்க துளிகூட நேரம் ஒதுக்காத திரைக்கதை மற்றும் அட்டகாசமான நடிப்பு . சி.ஜியைப்பார்த்து மிரளலாம் என்றால் , கண்ணை முட்டிக்கொண்டுக்கொண்டு வரும் கண்ணீர் . எப்படி எடிட்டிங் செய்துள்ளார்கள் என்று யோசிப்பதற்கே விடாமல் ,முழுதாய் படத்தினுள் இழுத்துச்சென்றுவிடுகிறார் ஸ்பில்பெர்க் . அப்பறம் எப்படி இவற்றையெல்லாம் விவரிப்பது ? ( விக்கியைக்கொண்டு தெரியாத விஷயத்தை எழுதலாம் . உணராத விஷயத்தை எப்படி எழுதுவது ? படத்தைப்பற்றி இன்னும் எக்கச்சக்கமாக இருந்தாலும் , அதையெல்லாம் சொல்லி படம் பார்க்கும்போது நீங்கள் உணரும் விஷயங்களின் சுவாரஸ்யத்தைக்குறைக்க விருப்பமில்லாததால் மேலோட்டமாகவே விட்டுவிட்டேன் .)

இந்த ஸ்பில்பெர்க் இருக்கிறாரே ! அப்பப்பா . இவரை நினைக்கும்போதெல்லாம் ஆச்சரியம்தான் வருகிறது . 80 வயதுக்கிழவர்களை கூட தன்னுடைய திரைப்படத்தால் 8 வயதுக்குழந்தையாக மாற்றிவிடக்கூடிய சக்தி , இவர் ஒருவருக்கு மட்டுமே உள்ளது என கற்பூரம் அணைத்து சத்தியம் செய்யலாம் . ஜுராசிக் பார்க் , தி டெர்மினல் , ஜாஸ் , ET , SCHINDLERS LIST என ஒவ்வொன்றும் ஒவ்வொரு வெரைட்டி . ஆனால் நமக்கு எல்லாப்படங்களுமே பிடிக்கும் . இவரின் ஷின்ட்லரைப்பார்த்து அதிசயத்து , ஒருநாளாவது ஷின்ட்லர் போல் வாழவேண்டும் என்று எத்தனையோ நாட்கள் நினைத்திருக்கிறேன் . இவரைப்பற்றி நான் கேள்விப்பட்டதெல்லாம் , இவருடைய படங்களின் கதையை முதலில் தன்னுடைய பேரக்குழந்தைகளிடம் சொல்லி , அவர்களுக்கு பிடித்திருந்தால் மட்டும்தான் இயக்குவாராம் . அந்தளவு வெறிப்பிடித்த குழந்தை மனிதர் . ஆனால் என்னைப்பொறுத்தவரை வாழும் சினிமா ஜீனியஸ்களில் இவரும் ஒருவர் . இன்னும் ஏராளதாரளமாக இவரைப்பற்றிச்சொல்லிக்கொண்டே போகலாம் .

மொத்தத்தில் , இன்னும் டவுன்லோட் பண்ணலயா நீங்க ? சீக்கரமா டவுன்லோடி பாருங்க . இன்னும் கதைய கேட்டுட்டே இருப்பிங்க போல இருக்கு .

(நன்றி - பரிமாணம் மின் இதழ் ஆசிரியர் ஶ்ரீ சரவணா மற்றும் முகநூல் நண்பர் அஜய்  .)


தொடர்புடைய சினிமா விமர்சனங்கள்








Comments

  1. திட மனதில்லாம் இல்லை... அழுது விடுவேன்... ஹா... ஹா...

    இணைப்பிற்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. சந்தோஷக்கண்ணீர் வந்தா பிரச்சனையில்லை அண்ணா !

      நன்றி அண்ணா ...

      Delete
  2. சிறந்த பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
  3. இவருடைய படங்களின் கதையை முதலில் தன்னுடைய பேரக்குழந்தைகளிடம் சொல்லி , அவர்களுக்கு பிடித்திருந்தால் மட்டும்தான் இயக்குவாராம்---அப்படியா...!!!!!!

    ReplyDelete
    Replies
    1. அப்படினுதான் கேள்விபட்டேன் அண்ணா !

      Delete
  4. விமர்சனமே பயமா கீதே....
    தமிழ் மணம் 4

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ! தங்களின் மீசையைக்காட்டிலுமா அண்ணா ???

      Delete
  5. படத்தை ரொம்பவும் ஃ பீல் செய்து பார்த்த மாதிரி இருக்கே ,ஸ்பீல் பெர்க்கின் படம் என்பதாலா :)
    த ம 6

    ReplyDelete
    Replies
    1. படம் பார்த்து முடிச்ச பின்னாடிதான் எனக்கே அது ஸ்பில்பெர்க் படம்னு தெரியுங்ணா .!

      Delete
  6. இந்தப் படத்தின் லிங்க் வேண்டும் நண்பரே....

    ReplyDelete
    Replies
    1. அண்ணே ! torrent சைட்ல தேடுனா கிடைக்கும் . என்னோடது சர்வர் டவுனா இருக்கறதால லிங்க் எடு்ககமுடியல . tamilrockers ல கூட இருக்கும்னு நினைக்கிறேன் .

      Delete
  7. Enroll now to receive hands-on AI Courses in Hyderabad by IIT & IIM specialists from AI Patasala training institutions. The AI Patasala AI Course in Hyderabad program is the ideal platform to start your career in AI.
    Artificial Intelligence Courses

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை