SCHINDLER’S LIST – ஒரு பார்வை




ஏற்கனவே THE PIANIST , LIFE ISBEUTYFUL , THE WAY BACK , THE VALKYIRE போன்ற திரைப்படங்களைப்பற்றி எழுதும்போது அடிக்கடி மேற்கோள் காட்டும் திரைப்படமாக இப்படத்தைத்தான் குறிப்பிட்டிருப்பேன் . ஒருமுறை வேறுவழியே இல்லாமல் இப்படத்தைப்பார்க்க ஆரம்பித்த எனக்கு , இதன் தாக்கம் இன்னமும் மனதை விட்டு அகலவில்லை . ஒவ்வொரு கேரக்டரும் என் மனதினுள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் . அதிலும் ஷின்ட்லர் எனும் மாபெரும் மனிதர் பற்றி இப்படத்தின்மூலம் தெரிந்துகொண்டதை நினைத்து பெருமகிழ்வு அடைகிறேன் . இப்படத்தின் தாக்கம் எந்தளவு எனில் கிட்டத்தட்ட படம் பார்த்த ஒரு மாதம் இம்மனிதர்போல் வாழவேண்டும் என்று முயன்றிருக்கிறேன் என்றால் பாருங்களே ! எத்தனையோ முறை எழுதவேண்டும் என்று நினைத்து இவ்வளவு அட்டகாசமானதொரு படைப்பினைப்பற்றி நான் எழுதி , அது சரியானபடி படிப்பவர்களுக்குப் புரியாமல் போய்விட்டால் என்ன செய்வது என்ற எண்ணத்தில் அப்படியே விட்டுவிடுவேன் . எப்படியோ என் தயக்கம் போய் எழுதிவிட்டேன் . இருந்தாலும் ஒன்றை முன்பே சொல்லிவிடுகிறேன் . இப்படத்தை அப்படியே எழுதி உங்களிடம் சேர்க்கமுடியுமா என்று எனக்குத்தெரியவில்லை . என்னால் முடிந்தளவு மனதில் உள்ளதை எழுதுகிறேன் . என்ன எழுதினாலும் நான் கூறப்போகும் ஒரே விஷயம் , இப்படத்தைக்கண்டிப்பாக பார்த்துவிடுங்கள் என்பதுதான் .


இத்திரைப்படம் உண்மையான வரலாற்று சம்பவங்களையும் , வரலாற்றின் மிகநெருக்கமானதொரு பிணைப்பாகவும் உள்ளதால் ஒருமுறை வரலாற்றினை நோக்கிச்செல்லலாம் . ஏனெனில் இத்திரைப்படத்தின் முழுதாக்கத்தினையும் உணர நமக்கு வரலாறு உதவிகரமாக இருக்கும் .


பிளான்க்ய் எனும் பிரெஞ்ச் எழுத்தாளர் உருவாக்கிய  தொழிற்புரட்சி என்ற வார்த்தையை எங்கேயாவது படித்திருப்பீர்கள். 18  - ம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக இங்கிலாந்தில் தொழிற்புரட்சி உண்டானது. அதாவது அதுவரை இருந்த உற்பத்தி முறைகளானது இயற்கை முறைகளைப் பின்பற்றியதாகவும் நேரம் மிகுந்ததாகவும் உற்பத்தி குறைந்ததாகவும் இருந்தது . விஞ்ஞானத்தில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் கண்டுபிடிப்புகளால் உருவான புதிதுபுதிதான இயந்திரங்கள் உற்பத்தியைப் பெருக்கின . ஜான்கே கண்டுபிடித்த பறக்கும் நாடா மற்றும் கார்ட்ரைட் கண்டுபிடித்த விசைத்தறியினால் துணி உற்பத்தி அதிகரித்தது . இதேகாலகட்டத்தில் தான் ஜேம்ஸ் வாட் நீராவி என்ஜினைக் கண்டுபிடித்தார் . ஜான் மெக் ஆதம் , ரௌலன்ட் ஹில் போன்றோர் தகவல் தொடர்பை எளிதாக்கும் விஷயங்களில் தங்களின் கண்டுபிடிப்புகளின்வழியாக சாதனை புரிந்தனர் . இதேபோன்று விவசாயத்திலும் பற்பல புதுவகையான தொழில்முறை உத்திகளும் , உரங்களும் அக்காலகட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டன . இவைகளைக்கொண்டு அதிக அளவிலும் எளிய முறையிலும் உற்பத்தியை மேலைநாட்டினர் பெருக்க ஆரம்பித்தனர் . இக்காலகட்டத்தில் சிறு விவசாயிகள் , குடிசைத்தொழில்கள் போன்றவை அழிய ஆரம்பித்தன . தொழிற்சாலை என்பது முக்கியமான உற்பத்தி மையமாக திகழ்ந்தது . அதன்பின் உருவானது தான் முதலாளித்துவம் , தொழிலாளித்துவம் , மார்க்ஸியம் போன்ற கோட்பாடுகள் . இந்த கம்யூனிசம் , மார்க்சியம் பற்றி பிரிதொரு பதிவில் விளக்கமாக காணலாம் .


இப்போது மெயின் மேட்டர் என்னவென்றால் பெருகிவரும் மக்கள் தொகை,  அபரிதமான உற்பத்திப்பொருட்கள் போன்றவற்றால் வணிகம் பெருக ஆரம்பித்தது . தன் நாட்டின் மக்கள்தொகையையும் , வணிகத்தையும் சரிசெய்யும்பொருட்டு மேலைநாடுகள் தங்களைவிட பலம்குறைந்த நாடுகளைக் கைப்பற்றி அங்கே தனது மக்களைக் குடியமர்த்தியது . மேலும் அவ்வாறு அடிமைப்படுத்தப்பட்ட நாடுகளில் உள்ள வளங்களை வைத்து புதிய வேலைவாய்ப்பினையும் உற்பத்தியையும் தன் மக்களுக்கு உருவாக்கிக்கொடுத்தும் . ஏற்கனவே உற்பத்தியாகும் பொருட்களை அந்த காலனி நாடுகளில் வாழும் மக்களின்மீது திணித்தும் விற்பனை செய்தன . இப்படித்தான் இங்கிலாந்திற்கு மாட்டியது நம் இந்தியா . இதேபோல் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் போர்த்துகீசியர் மற்றும் ஸ்பானியர்கள் சென்று தங்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தினர் . இதன் பெயர்தான் ஏகாதிபத்தியம் .


இந்நேரத்தில் பிரெஞ்ச் புரட்சி ஏற்பட்டபின்   ஐரோப்பிய நாடுகள் கொஞ்சம் விழித்துக்கொண்டன . முடியாட்சி அகற்றப்பட்டு குடியாட்சிமுறை உன்டானது . மேலும் ஏகாதிபத்தியத்தின் காரணமாக சிதறுண்டுகிடந்த பல நாடுகள் இணைந்து எப்படி இந்தியா என்ற ஒரு முழு நாடு உருவானதோ , அதேபோல் ஜெர்மனியும் உருவானது . ஜெர்மனியில் ஏற்பட்ட தொழிற்புரட்சி காரணமாக அங்கே செல்வம் குவிய ஆரம்பித்தது . ஆனால் அதீத உற்பத்தி காரணமாக ஜெர்மனும் தன்னுடைய எல்லையை விரிவாக்கிக்கொள்ள முயன்றது . ஆனால் அப்படி ஜெர்மன் கைப்பற்றிய நாடுகள் இங்கிலாந்தைப்போல் வளமான நாடுகள் இல்லை . மேலும் அக்காலகட்டத்தில் சூப்பர்ஸ்டாராக விளங்கிய இங்கிலாந்தை முறியடித்தாக வேண்டும் என்றால் போரினால் மட்டுமே முடியும் என ஜெர்மனியின் அரசர் இரண்டாம் கெய்சர் நம்பினார் . இதேநேரம் வல்லமைப்பொருந்திய நாடுகளான இங்கிலாந்து , பிரான்ஸ் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளுக்கிடையே ஒரு ஒப்பந்தம் இருந்தது . இதைக்கவனித்த ஜெர்மன் தன்னுடன் இணைய விரும்பிய நாடுகளான இத்தாலி மற்றும் ஆஸ்திரியாவுடன் ஒரு கூட்டு உடன்படிக்கை ஏற்படுத்திக்கொண்டன . சோ , கிட்டத்தட்ட ஐரோப்பாவே இரு பெரும்பிரிவுகளாக பிரிந்தது . ஜெர்மன் , இத்தாலி , ஆஸ்திரியா – ஹங்கேரிய நாடுகள் ஒருபுறமும் இங்கிலாந்து , பிரான்ஸ் , ரஷ்யா போன்ற நாடுகள் ஒருபுறமும் இருந்தது .

இந்நேரத்தில் ஆப்ரிக்க நாடான மொராக்கோவினை பிரான்ஸ் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தது . கெய்சரோ  அந்நாட்டை ஒரு சர்வதேச குடியேற்ற நாடாக மாற்ற விரும்பியிருந்தார் . எனவே பிரான்சை எதிர்த்து இரு போர்க்கப்பலைக்கொண்டு சென்றார் . ஆனால் பிரான்சும் இங்கிலாந்தும் கூட்டுக்களவாணிகளாக அந்நேரம் இருந்தனர் . இங்கிலாந்தின் கப்பற்படை வலிமையினால் ஜெர்மன் பின்வாங்க வேண்டியதாயிற்று . ஏற்கனவே இருந்த புகைச்சல் மென்மேலும் பெருகியது . இதுபோதாதென்று ரஷ்யாவும் ஒருபுறம் குடைச்சல் கொடுக்க , இன்னொருபக்கம் துருக்கியில் இருந்த கும்பலும் பிரச்சனைக்கொடுக்க ஜெர்மன் உலகயுத்தத்தை ஆரம்பித்தது . ஆரம்பத்தில் ஜெர்மனின் கூட்டுநாடுகள் வெற்றியைப்பெற்ற போதிலும் இறுதியில் தோல்வியைச்சந்தித்தன . ஒருகட்டத்தில் கெய்சர் தப்பி ஓடிவிட ஜெர்மன் சரண்டர் ஆனது . சரண்டர் ஆன ஜெர்மனை இங்கிலாந்தும் ரஷ்யாவும் பங்குபோட்டுக்கொண்டன . ரஷ்யாவில் போரை நடத்திய சார் மன்னரின் ஆட்சி தூக்கியெறியப்பட்டு லெனின் வந்தார் . ஜெர்மனியை ரஷ்யாவும் இங்கிலாந்தும் துண்டாடியது மட்டுமில்லாமல் கிட்டத்தட்ட இந்தியாவை விட மிகக்கொடுமையானதொரு அடிமை நாடாக நடத்தினர் .


இப்போருக்குப்பின் உலகநாடுகளுக்கிடையே மந்தம் உருவானது . அதேநேரம் இத்தாலியில் பாசிசம் என்றழைக்கப்படும் முசோலினியின் சர்வாதிகார சக்தி அதிகரித்தது . மிகச்சிறந்த ஆட்சியாளரான முசோலினி பிரிந்துகிடந்த தன் நாட்டை ஒன்றாக்கினார் . உலகமே பொருளாதாரத்தில் தத்தளித்துக்கொண்டிருக்கும்போது தன் நாட்டினை வலிமைமிக்கதொரு நாடாக மாற்றினார்அதேநேரம் இந்நாடு மீண்டே வராது என எண்ணிய ஜெர்மனி , முடியாட்சி முறையை ஒழித்து குடியாட்சி முறைக்கு மாறியது. இங்கிலாந்து மற்றும் ரஷ்யாவிடம் சிக்கித்தவித்த ஜெர்மன் மக்கள் குடியாட்சியின் மேல் நம்பிக்கை இழந்தனர் . மிகத்தீவிர நாட்டுப்பற்று கொண்ட ஜெர்மன் மக்கள் , உலகநாடுகளிலேயே தன்னாடானது மாபெரும் வல்லரசாக வர விரும்பினர் . அப்போதுதான் குடியாட்சியை முடித்துவிட்டு நாசிசம் எனும் சர்வாதிகார ஆட்சி வந்தது . தன் பேச்சாலும் நாட்டுப்பற்றாலும் அனைத்து ஜெர்மன் மக்களையும் கவர்ந்த  ஹிட்லர் ஜெர்மனியை தன்வசப்படுத்தினார் . ஹிட்லர் ஒரு மிகச்சிறந்த அரசியல்வாதி மற்றும் பொருளாதாரத்தில்  ஒரு மேதை . தன் நாட்டினை யாருமே எண்ணிப்பார்க்கமுடியாத உயரத்திற்கு கொண்டுவந்தார் . மேலும் தன்நாட்டில் இருந்த ரஷ்ய மற்றும் இங்கிலாந்தின் ஆதிக்கத்தை நசுக்கியெறிந்தார் . ஹிட்லரின் வள(லி)மையான ஆட்சியினைக்கண்ட மக்கள் , அவரை புகழ ஆரம்பித்தனர் . இப்போது மீண்டும் ஜெர்மனியில் தொழிற்புரட்சி ஏற்பட்டது .


மீண்டும் தனது நாட்டின் பொருளை விற்க காலனி நாடுகள் தேவை என்பதால் முதல் உலகப்போரில் போட்டிருந்த வெர்செய்ல் உடன்படிக்கையை ஹிட்லர் மீறினார் . போலந்தின் மீது படையெடுத்தார் . இத்தாலியும் ஜெர்மனியும் வலுவூன்றிய இந்நேரத்தில் ஜப்பானும் மாபெரும் எழுச்சியில் இருந்தது . இன்னும் சொல்லப்போனால் உலகநாடுகளிலேயே அதிக வலிமையான நாடாக ஜப்பான் உருமாறியிருந்தது . ஜப்பானும் ஜெர்மனுடன் இணைந்துகொள்ள அதன்பின் உருவானதுதான் இரண்டாம் உலகயுத்தம் . ஏற்கனவே முதல் உலகப்போரினால் வெம்மிப்போயிருந்த ஜெர்மன் மக்கள் , இரண்டாம் உலகப்போரை ஆதரித்தனர் .இவ்வளவு நாள் அசிங்கப்பட்டது போதும் ! உலகமே நமக்குத்தான் ! இவ்வுலகம் ஒரே நாடாக வேண்டும் ! அதை ஒரே ஆட்சியாளர் ஆள வேண்டும் என்ற ஹிட்லரின் கோஷத்தினைக்கேட்டு இரண்டாம் உலகப்போரினுள் முழுமூச்சாக இறங்கினர் . வீட்டிற்கு ஒருவராவது கட்டாய ராணுவசேவை செய்யவேண்டும் என்று ஆட்சியைப்பிடித்தபோது சட்டம் இயற்றிய ஹிட்லர் , இரண்டாம் உலகப்போரின்போது வலிமைவாய்ந்த ராணுவத்தை தயார் செய்திருந்தார் .


ஹிட்லரின் சிறுவயதில் சிலயூதர்களால் சில கொடூரமான சம்பவங்களைச் சந்தித்தார் . மேலும் கத்தோலிக்கர்களின் நம்பிக்கையில் ஊறித்திளைத்தவர் . இந்த உலகப்போரில் ஜெர்மன் ஒரு மோசமானநாடாக பெயரெடுத்ததற்கு அதுவே காரணம் . யூதர்கள் என்பவர்கள் உலகில் வாழவே தகுதியற்றவர்கள் என அவர் நம்பினார் . அவரின் கையில் ஆட்சி கிடைத்ததும் மனதினுள் இருந்த பகையானது வெறியாக மாறியது . அந்த வெறியானால் சுமார் 1 கோடிக்கும் மேல் யூதர்கள் கொல்லப்பட்டனர் . ஒரு நிமிடம் இம்மாதிரியான ஆட்களை யோசித்துப்பார்த்தால் ஒன்றுவிளங்கும் . மிகப்பெரிய மேதைகளாக இருந்த பல கத்தோலிக்கர்கள், யூதர்களை எப்போதும் அருவெறுப்புடனே பார்த்திருக்கிறார்கள் . ஷேக்ஸ்பியர்கூட தன் நாடகங்களில் யூதர்களை மிகக்கொடுரமானவர்களாகச் சித்தரிப்பதைப் பார்க்கலாம் . இதனால் நான் ஹிட்லரை நியாயப்படுத்தவில்லை . பிற நாடுகள் போலவே தன் நாட்டினையும் வளர்க்கப் போர்தொடுத்தது எனக்குத்தவறாக தெரியவில்லைஇருந்தாலும் மனித குலத்திலேயே இதுவரை நடக்காத ஒரு இனப்படுகொலையைச்செய்த ஹிட்லரை யாராலும் மன்னிக்கமுடியாது . ஆடு,மாடுகளை மந்தை  மந்தையாக அனுப்பிக்கொல்வதைக்காட்டிலும் மிகக்கொடுமையாக யூத மக்களை கொன்றொழித்தார் . நம் கிராமங்களில் உழவுக்காக வளர்க்கும் மாடுகளை எப்படி வயதானபின் கசாப்புக்கு அனுப்பிக்கொல்வார்களோ , அதைக்காட்டிலும் அதிகப்படியாக யூதமக்களைப்பிழிந்து வேலை வாங்கி , அவர்கள் மூலம் உருவாக்கப்பட்ட ஆயுதங்களைக்கொண்டு , அவர்களால் வேலைசெய்ய முடியாமல் போகும் பட்சத்தில் மந்தைமந்தையாக அனுப்பி விஷவாயு செலுத்திக்கொல்வார்கள் . ஏழை , பணக்காரன் , தொழிலதிபர் ஏன் மன்னனாக இருந்தாலும் யூதனாக இருந்தால் அவனுடைய உயிர் ஹிட்லருக்குத்தான் சொந்தம் . சிறுகுழந்தைகளாக இருந்தாலும் சரி , வயதான கிழவனானாலும் சரி . யூதன் என்றால் கண்டிப்பாக ஏன் யூதனாய்ப்பிறந்தோம் என்று அழாமல் சாகமுடியாது . இப்படுகொலையை முதலில் கண்டுகொள்ளாத உலகநாடுகள் , தங்களின்மீதும் ஜெர்மனி தாக்குதல் நடத்தும் என்று நினைத்துப்பார்க்கவில்லை . ஆனால் அவர்கள்மீது தாக்குதல் நடந்தபின்தான் இப்படுகொலையைப்பற்றி பேச ஆரம்பித்தனர் .


அதன்பின் ஜெர்மன்மீது போர்தொடுப்பதற்காக உலகநாடுகள் முன்வந்தன . அவர்களின் உண்மையான நோக்கம் யூதர்களைக்காப்பாற்றுவது அல்ல . தங்களின் சொந்தநாட்டை ஜெர்மன் கைப்பற்றும்முன் தங்களின்  நாட்டைக்காப்பாற்றிக்கொள்வதே .  அதன்பின் போர் நடந்தது பற்றியெல்லாம் உங்களுக்கே தெரியும் . இந்த உலகப்போரில் ஜெர்மனைக்காட்டிலும் கேவலமான செயல் செய்த நாடாக எனக்குத்தோன்றுவது அமெரிக்கா தான் . போரின்முடிவில் ஜப்பான் சரண்டர் ஆவதாக அறிவித்த பின்னும் நீ வூட்டுக்குப்போஎன்று முன்னால் சொல்லிவிட்டு பேர்ல் ஹார்பர் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்காக அணுகுண்டுகளை உபயோகித்து இரு நகரங்களையும் , அவற்றின் எதிர்காலத்தையும் சர்வநாசம் செய்துவிட்டது . இன்னமும் அந்நகரங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் பிறக்கும் பல குழந்தைகள் கர்ணனின் கவசகுண்டலம்போல் புற்றுநோயுடன் பிறக்கின்றன . இன்னொருபுறம் ரஷ்யா , இதுதான் சாக்கு என்று போலந்து , சைபீரியா உட்பட பலநாட்டு மக்களை ஜெர்மன் படை என்றபோர்வையில் கைது செய்து அவர்களைக்கொண்டு  யாருக்கும் தெரியாமல் தன்னாட்டின் பலத்தையும் வளத்தையும் பெருக்கிக்கொண்டது . மேலும் இரண்டாம் உலகப்போரின்போது யாருக்கும் தெரியாமல் கிழக்கு ஐரோப்பிய பகுதிகளை தன்னாட்டுடன் இணைத்துக்கொண்டது . இந்த உலகப்போரில் ஒரே ஆறுதல் , கிரேட் பிரிட்டன் கடைசியில் பிரட் வாங்கமுடியாத அளவிற்கு வலிமைகுன்றி பொத்தினாற்போல் அமைதியானது . போரின் வலியை உணரமுடியாத சூழ்நிலையில் தமிழ்நாட்டினர் இருப்பதால் தான் இன்னும் போர்களைப்பற்றிய அறிவு இல்லாமல் பாகிஸ்தானைப்போட வேண்டும் ,  நேருலாம் சப்பை , பஞ்சசீலக்கொள்கை என்பதெல்லாம் கோழைத்தனம் என்று பிதற்றிக்கொண்டிருக்கிறார்கள் . இலங்கையில் நடந்த போரினைப்பற்றி போட்டோக்களைப்பார்த்துதானே தெரிந்துகொண்டார்கள் . நம் தமிழ்சமுதாயத்தில் போர்கள் என்பன 14 –ம் நூற்றாண்டோடு முடிந்துபோனதாலோ என்னவோ போரின் பாதிப்புகள் குறித்து யாருக்கும் போதுமான அறிவு இல்லை . ஐரோப்பியர்கள் இரு உலகப்போருக்கும் முடிவில் இப்போது இருக்கும் ஒற்றுமையைப்பார்த்து உலகமே ஆச்சரியப்படுகிறது . போர் தவிர்க்கப் படவேண்டியவைகளில் தலையானது . யாரும்  , யாருக்கும் எதிரி இல்லை . இந்த பூமி மனிதர்களுக்கு மட்டும் பொதுவானது கிடையாது . நாம் ஒரு அங்கம் . இதில் நாடு , மொழி , மதம் , இனம் என்ற பெயரில் பிரித்து அடித்துக்கொண்டு இருக்க இது இடம் கிடையாது . ஒரு எறும்பு இனம் இவ்வுலகில் இல்லாமல் போனால் அடுத்த 50 ஆண்டுகளில் மனித இனம் இப்பூமியில் இல்லாது போய்விடும் . என்னைப்பொறுத்தவரை நான் இந்தச்சாதிக்காரன் என்று சொல்பவனைக்காட்டிலும் நான் இந்த இனத்தான் , இந்த மதத்தான் , இந்த நாட்டக்காரன் என்று பெரும்கும்பலை ஒன்றிணைத்து வன்முறையில் ஈடுபடுபவன்தான் உண்மையில் பெரிய வெறியன் . ஐயகோ ! கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேனே!




இப்போது ஷின்ட்லரைப்பற்றி பார்க்கலாம் . ஜெர்மனின் ஆதிக்கத்தில் இருந்த ஆஸ்திரிய-ஹங்கேரிய நாடுகளின் எல்லையில் பிறந்த ஷின்ட்லருக்கு படிப்பு என்பது அலர்ஜியான ஒரு விஷயம் . அவருடைய பால்யகாலத்தில் பைக் , சரக்கு என்று ஜாலியாக ஊர்சுற்றிக்கொண்டிருந்தார் . பலவேளைகளில் ஈடுபட்டாலும் வெறித்தனமான குடிப்பழக்கத்தினால் எதிலும் நீடிக்கமுடியவில்லை . அக்காலகட்டத்தில் ஜெர்மனின் உளவாளியாக செக் நாட்டில் பணிபுரிந்தார் . அங்கு அவரின் சிறப்பான பணியினால் ஜெர்மன் உளவாளி அமைப்பான ABWEHR -ல் நல்ல மரியாதை கிடைத்தது . அதேநேரம் செக்நாட்டில் அவர் உளவாளி என்பது தெரிந்ததும் கைது செய்யப்பட்டார் . பின் எப்படியோ அடித்துபிடித்து வெளியில் வரவும் உலகப்போர் ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது . அந்நேரத்தில் க்ரக்கோவ் பகுதிக்கு வந்த ஷின்ட்லர்  நாஜி அமைப்பில் இணைந்தார் . போலந்திலிருக்கும் யூதக்கைதிகளை குறைந்த சம்பளத்தில் அமர்த்தி ஒரு பாத்திர தயாரிப்பு நிறுவனத்தை நடத்தினார் . அவரின் தொழிற்சாலையில் இருக்கும் யூதர்களுக்கு முறையான பாதுகாப்பையும் , அவர்களுக்கு மறைமுக பணவசதியையும் செய்தார் . எதிர்த்து வரும் நாஜி அதிகாரிகளுக்கு லஞ்சம் , அன்பளிப்பு என வாரி வழங்கினார் . இதனால் யூதமக்கள் அவரின் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு வரப்பெரிதும் ஆர்வம் காட்டினார்கள் . ஆரம்பத்தில் நன்கு பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற வெறியிலிருந்த ஷின்ட்லர் , நாட்கள் செல்ல செல்ல யூதமக்களின்மீது பரிதாபப்பட்டார் . அதேநேரம் உலகப்போர் முடிவுக்கு வர ஆரம்பிக்க ஜெர்மனியோ தோல்வியை நோக்கிச்சென்றது . அதனால் இம்மாதிரியான தொழிற்சாலைகளில் வேலைசெய்யும் யூதர்களையும் போட்டுத்தள்ளிவிடவேண்டும் என்று உத்தரவு வர , அந்நேரத்தில் தன் தொழிலாளர்களை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும் என்று முடிவெடுத்த ஷின்ட்லர் தன்னுடையான சொந்தநாட்டில் இருக்கும் தன்னுடைய தொழிற்சாலைகளுக்கு தொழிலாளர்களை இடம்மாற்ற செய்ய விரும்பினார் . அதற்காக தான் சம்பாதித்த அனைத்தையும் செலவிட்டார் . பெரும்பிரயத்தனப்பட்ட பின் 1250 யூதர்களைக் காப்பாற்றினார் .


இப்போது இப்படத்தைப்பற்றி பார்க்கலாம் . இதில் வெறும் ஷின்ட்லரின் வாழ்க்கையை மட்டும் காட்டவில்லை . அக்கொடியகாலகட்டத்தில் வாழ்ந்த அப்பாவி யூதர்களின் நிலையையும் மனமுருக காட்டப்பட்டிருக்கிறது . நாஜித்தலைவனில் ஒருவன் யூதப்பெண்ணை விரும்புவது , கெட்டோ எனும் முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் சில நடுத்தரவயது பெண்களின் அப்பாவித்தனமான ஆசைகள் , ஜெர்மன் அக்காலகட்டத்தில் யூதர்ளை நடத்தியவிதம் என அத்தனை விஷயங்களையும் தத்ரூபமாக படமாக்கியிருக்கிறார் ஸ்பில்பெர்க் . அக்காலகட்டத்தில் ஹிட்லரின் படையில் இருப்பவர்கள் எக்காரணத்திற்காகவும் யூதப்பெண்களைத் திரும்பிப்பார்க்ககூடாது என்று ஒரு சட்டமே இருந்ததாம் . ஒரு பன்றியைப்பார்த்தால் என்ன செய்வீரோ , அதையே பன்றிக்கறி சாப்பிடும் யூதர்களுக்கும் செய்யுங்கள் என்று ராணுவத்தில் சேரும் சிப்பாய்களிடம் சொல்லுவார்கள் . தான் காதலிப்பது ஒரு யூதப்பெண் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் ஒரு ராணுவ அதிகாரித்துடிப்பதும் , வாழ்வுக்கும் சாவுக்குமிடையில் தினந்தினம் நரகத்தில் தவிக்கும் அப்பெண்ணுக்கும் நடைபெறும் நிகழ்ச்சிகளை விவரித்திருப்பதில் ஸ்பில்பெர்க் தன் இயக்கத்தில் கொடிகட்டியிருக்கிறார் . வெளியில் என்ன நடக்கிறது என்றே புரியாமல் தினம் தன்குழுவில் யார்யாரெல்லாம் உயிருடன் இருக்கிறார்கள் என்று தவிக்கும் அந்நடுத்தர வயதுபெண்களின் போராட்டம் நம்மனதை உருக்கிவிடும் . நான் ஒரு படத்தில் நிர்வாணக்காட்சியைப் பார்த்து பரிதாபத்தின் உச்சத்திற்குச்சென்றேன் என்றால் அது இத்திரைப்படத்தில்தான் .  யூதர்களை மருத்துவப்பரிசோதனை என்னற பெயரில் நிர்வானமாக ஓடும் மக்களையும் அவர்ளை எப்படி அந்த மருத்துவர்கள் பரிசோதிக்கிறார்கள் என்பதையும் காணும்போது உங்களுக்குள் பரிதாபமும் ஹிட்லரின்மீது கோவமும் வரவில்லையெனில் ஆச்சரியம் தான் . காலையில் எழுந்ததும் யாரையாவது சுட்டுக்கொல்வதையே பிழைப்பாக வைத்திருக்கும் அந்த இராணுவ அதிகாரியைப்பார்த்தால் அவன் கழுத்தை நெரித்துக்கொள்ளலாம் என்றுதான் நமக்குத்தோன்றும் .


ஷின்டலரைப்பற்றிய இப்படத்தில் இந்த காட்சிகள் எல்லாம் எதற்கு என்று உங்களுக்குத்தோன்றலாம் . அந்த மனிதர் 1250 பேரைக்காப்பாற்றினார் என்பது பெரிய விஷயமல்ல . அவர் காப்பாற்றிய அந்த காலம்தான் முக்கியமானது . இவ்வளவு அக்கிரமங்கள் நடக்கும் காலத்தில் கிட்டத்தட்ட எறும்பை மிதித்துக்கொல்வது போல் அனைத்து யூதர்களையும் கொல்லும்போது , தனியொரு மனிதனாக அத்தனை மக்களைக் காப்பாற்றியதை நாம் புரியவேண்டுமெனில் அக்காலகட்டத்தைப்பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டுமென்பதைக் காட்டிலும் உணர்ந்திருக்கவேண்டும் . படத்தின் முக்கியமான காட்சிகள் என்றால் படம்முழுவதையுமே சொல்லவேண்டும் . கிளைமேக்ஸ் காட்சியானது படத்தின் மணிமகுடம் . படம் பார்க்கவிரும்புபவர்களுக்கு சிலவற்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன் . படம் மூன்றரைமணிநேரம் . படத்தின் 99 சதவீதம் கருப்பு – வெள்ளையால் படமாக்கப்பட்டது . பல திடுக்கிடும் சம்பவங்கள் , ரத்தத்தை உறையவைக்கும் காட்சிகள் , அதிரடி ஆக்சன் காட்சிகள் , ஹீரோவுக்கான டெம்போ ஏற்றும்படியான காட்சிகள் எதுவுமே இல்லை . ஆனால் அந்த வகையறா திரைப்படங்கள் தராத அனுபவத்தை இது தரும் . பிக்சனைக்காட்டிலும் உண்மையான சம்பவங்கள் எப்படி நம்மை ஆட்கொள்ளும் என்பதற்கு சிறந்த உதாரணம் இப்படைப்பு . ஸ்பில்பெர்க்கின் திரையுலக வரலாற்றில் இத்திரைப்படம் ஒரு மணிமகுடம் என்பதில் துளிசந்தேகமுமில்லை . அதேபோல் உண்மைச்சம்பவங்களைத் தழுவி எடுக்கப்படும் திரைப்படங்களிலும் இதுதான் நம்பர் 1 . சந்தேகத்துக்கிடமில்லாமல் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இப்படைப்பு தனக்கான இடத்திலிருந்து எப்போதும் தாழாது .



இப்படத்தின் குறியீடுகள் , காட்சியமைப்புகள் , படமாக்கப்பட்டவிதம் , ஷ்ன்ட்லர்ஸ் ஆர்க் நாவல் , லியாம் நீசன் மற்றும் பென் கிங்ஸ்லியின் அற்புதமான நடிப்பு போன்று எண்ணற்ற விஷயங்கள் எழுதக்கிடக்கின்றன . முக்கியமாக கருப்புவெள்ளையில் படம் நகரும்போது ஒரே ஒரு காட்சியில் ஒரு பெண்குழந்தை மாத்திரம் சிவப்பு வண்ண ஆடையில் வருவதெல்லாம் அட்டகாசமானதொரு குறியீடுகளில் ஒன்று . அதைப்பற்றியெல்லாம் இன்னொருபதிவு எழுதவேண்டும் . அதனால் இப்போதைக்கு இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன் .





Comments

  1. யாரும் யாருக்கும் எதிரி இல்லை... தனக்கு தானே...

    ReplyDelete
  2. படத்தை காணும் ஆவல் அதிகரிக்கிறது
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  3. முதல் அணுகுண்டு ஹிரோஷிமாவில் போட்டபின் அமெரிக்கா கொடுத்த அல்டிமேட்டத்தை ஜப்பான் நிராகரித்ததால்தான் நாகசாகிக்கும் அதே நிலை ஏற்பட்டது என்று வரலாறு சொல்கிறது. நீங்கள் பொத்தாம் பொதுவாக எல்லோரையையும் போல சம்பிரதாயமாக அமெரிக்காவின் மீது குற்றம் சுமத்துகிறீர்கள். போர் என்பதே கொடூரம் இதில் யார் செய்ததை நியாயப்படுத்த முடியும்?

    ReplyDelete
  4. There has never been a good war or a bad peace - Ben Franklin

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

THE PURGE – சினிமா விமர்சனம்