நையாண்டி பெண்களும் ஜொள்ளுத்தாத்தாக்களும் - ஊர்த்திருவிழா



கோவில் இல்லாத ஊரில் குடியிருக்காதே என்ற தமிழ்முதுமக்களின் பொன்மொழியின்படி ஊருக்கு ஒரு கோவிலும் , காவல் தெய்வமும் இருக்கும் . எங்கள் ஊரிலோ அதையும்தாண்டி இரு கோவில்கள் , பல காவல் தெய்வங்கள் . ஒன்று பஸ் ஸ்டாப் அருகிலும் மற்றொன்று ஊருக்குள்ளேயும் இருக்கின்றன . சரி , ஒன்றுக்கு இரண்டாக உள்ளதுதானே ! நன்றாகக் கும்பிட்டு நல்வரத்தைப்பெற்று சந்தோஷமாக இருக்கவேண்டியதுதானே என்கிறீர்களா ? அதுதான் இல்லை . சேலத்தில் வன்னியசமூக மக்கள் அதிகமாய் வாழ்வது பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்ததே . ஆனால் கொஞ்சம் வித்தியாசமாய் எங்கள் ஊரில் நாடார் சமூகமக்கள் அதிகம் . பஸ் ஸ்டாப்பை ஒட்டிய பகுதிகளில் வன்னியசமூகத்தினரும் , ஊருக்குள்ளே நாடார் சமூகத்தினரும் வாழ்கின்றனர் . 1999 வரை , சாதிக்கலவரங்களுக்கு பெயர்பெற்றது எங்கள் ஊர் . எவனாவது பொழுதுபோகாதவன் ஏதாவது ஒன்றைத்தூண்டிவிட , அதன்பின் சாலையில் செல்லவேண்டிய சைக்கிள் ஆகாயத்திலும் , அடுப்பில் எரியவேண்டிய விறகுக்கட்டைகள் அடுத்தவன் இடுப்பில் எரியவைத்தும் கொண்டிருக்கும் . கருங்கற்கள் பலரின் மண்டையைப்பேத்தும் பசியடங்காத ஜீவன்களாய் மீண்டும் மீண்டும் பலரின் மண்டையை உடைத்துக் குருதியை ருசிபார்த்துக்கொண்டிருக்கும் அளவிற்கு கடும் கலவரம் நடக்கும் . போலிஸார் வந்தால் , அவர்களையும் கும்பலுக்குள்ளே இழுத்துவைத்து ஈடு கொடுப்பார்கள் . பெரும்பாலும் மாலை 3 மணுக்கு ஆரம்பிக்கும் கலவரம் 6 மணிக்கு உச்சத்திற்குச்சென்று 8 மணிக்கு முடிந்துவிடும் . கலவரத்தின்போது எந்த சூழ்நிலையிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளை காயப்படுத்தக்கூடாது என்ற உயரிய மனப்போக்கில் கலவரக்காரர்கள் இருப்பார்கள் . அன்றைய இரவு பெரும்பாலும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கும் . அடுத்தநாள் காலையில் என்னைப்போன்ற சிறுவாண்டுகளில் எந்த பையன் சீக்கிரம் எழுந்து கலவரத்திடலுக்குச் செல்கின்றானோ , அவனே அன்று பெரும்பணக்காரன் . நானெல்லாம் 5 மணிக்கு எழுந்து பஸ்ஸ்டாப்பிற்குச்சென்றால் 7 மணிக்குள் எப்படியும் 200 ருபாயாவது பொறுக்கி , டவுசர் பைக்குள் நிரப்பிக்கொண்டுவருவேன் .

இப்படியாக ஆறுமாதத்திற்கு ஒருமுறை கலவரம் வந்து என் பள்ளிக்காலங்களில் எலந்தவடைக்கும் , நெல்லிக்காய்க்கும் , தேன்மிட்டாய்க்கும் ஐஸ்கிரிமுக்கும் பஞ்சமில்லாமல் சென்றுகொண்டிருந்தது . அத்தகைய சூழ்நிலையில்தான் ஒரு இளைஞர் எங்கள் ஊரின்தலைவராய் தேர்ந்தெடுக்கப்பட்டார் . அவர் தலைவரானதும் செய்த முதல் செயலினால் , ஆறுமாதத்திற்கு ஒருமுறை அரிதாக பணத்தால் நிரம்பும் என் டவுசர் பாக்கெட் , காற்றாட ஆரம்பித்தது. நாடார்களையும் வன்னியர்களையும் அழைத்துப்பேசி ஒரு முடிவெடுத்தார் . இனி எப்போதும் சாதிக்கலவரங்கள் ஊரில் நடக்கக்கூடாது என்பதாற்காக ஒவ்வொருவரையும் சாமியின்முன் கற்புரம் அடித்து சத்தியம் செய்யவைத்தார் . அதுவும் இரண்டு கோவில்களிலும் . அதற்கு அச்சாரமாய் ஊர்த்திருவிழாவை முன்வைத்தார் . அதற்குமுன் வரை தனித்தனியே தங்கள் தொண்டர்களின் சக்தியைக்காட்டி வந்த கடவுள்கள் , ஒன்றுசேர்த்துவைத்துவிட மக்கள் முடிவெடுத்தனர் . ஊரினுள்ளே இருக்கும் மாரியம்மனுக்கு முன் , அவளின் தங்கையான பஸ் ஸ்டாப் செல்லியம்மனுக்கு முதலில் திருவிழா நடத்திவிட்டுத்தான் அதன்பின் ஊருக்குச்செல்லவேண்டும் எனவும் , செல்லியம்மனுக்கு சிம்பிளாகவும் மாரியம்மனுக்கு மஹா கிராண்டாகவும் விழா எடுக்கவேண்டும் என்றும் முடிவானது . அதேபோல் செல்லியம்மனுக்கு பொங்கல் வைப்போர் அனைவரும் மாரியம்மனுக்கும் , மாரியாத்தாளுக்கு பொங்கல் வைப்பவர்கள் செல்லியம்மனுக்கும் கட்டாயம் வைக்கவேண்டும் என்று முடிவானது . அதைத்தொடர்ந்து ஊரே மாறியது . சண்டை நடக்கவில்லை . என் டவுசர் பாக்கெட்டும் நிறையவில்லை . தலைவர் , ஊரினுள் எக்கச்சக்கமான பல நல்லவிஷயங்களைச்செய்தார் . இந்தியாவின் சிறந்த பசுமைக்கிராமங்களில் ஒன்று என மன்மோகன்சிங்கிடமே சென்று அவார்டு வாங்கிவந்தார் . ஊரெங்கும் 500 மீட்டருக்கு இரண்டு குப்பைத்தொட்டிகள் , அதில் ஒன்று மக்கும் குப்பை , மற்றொன்று மக்காத குப்பை . பொதுக்கழிப்பிடம் , நூலகம் , பள்ளிக்கட்டிடம் , நீரேற்று நிலையம் , மழைநீர்சேகரிப்புத்தொட்டி , வீடுதோறும் கழிப்பறை , சோலார் தெருவிளக்குகள் , பஞ்சாயத்து அலுவலகம் , சாலைதோறும் மரம் என ஏராளமான சாதனைகளைச் செய்தார் . ஊரில் இருக்கும் அனைவரின் குடும்பத்தலைவர்களின் நம்பர்களும் அவருடைய மொபைலில் இருக்கும் .ஓட்டுக்கேட்க வந்தால் ஓட்டுப்போடுவிங்களா ? என்று அவர் கேட்பதற்கு முன்பே அவருக்கான ஓட்டு அங்கு முடிவாயிருக்கும் . தொடர்ந்து மூன்று முறை ஊர்த்தலைவராக உள்ளவர் . அதன்பின் இருசாதியினரும் சாதி பார்ப்பது குறைந்து நட்பு பாராட்ட ஆரம்பித்தனர்.

ஒவ்வொரு வருடமும் தை மாதம் 10 தேதியன்று  கொடிமரம் நடுவார்கள் . அதனைத்தொடர்ந்து ஊரைத்தாண்டி வேறு ஊருக்கு யாரும் செல்லக்கூடாது , அப்படியே சென்றாலும் எக்காரணத்தை முன்னிட்டும்  இரவு வெளியூரில் தங்கக்கூடாது , நான்-வெஜ் கட்டுப்பாடு போன்ற சில கட்டுப்பாடுகளை விதிப்பர் . கம்பம் நட்டநாளிலிருந்து தினசரி இரவு , தாரையும் தப்பையும் போட்டிபோட்டு மாரியம்மன் இசையை வழங்க , அந்த இசையை நாபிக்கமலங்களில் உள்வாங்கி , நடனமாக மாற்றி பயிற்சி எடுப்பார்கள் என்போன்ற இளம்வயதினர் . நானும் 11-ம் வகுப்பு படிக்கும் வரை அங்கு அல்டிமேட் டான்சராக இருந்தேன் . 12- ம் வகுப்புத்தேர்வு , அதைத்தொடர்ந்து சென்னைக்கல்லூரி வாழ்க்கை என்றான பின் , மாரியம்மன் ஆட்டத்தில் சேரவியலாத படுபாதகநிலைக்குத்தள்ளப்பட்டேன் . நாமும் ஆடலாம் என்று ஆர்வத்துடன் கோவில்திடலுக்குச்சென்றால் ‘வாப்பா ! சென்னை மாப்பிள்ளை’ என்று எவனாவது என்னை ஏற்றிவிடுவான் . உடனே நமக்குள் இருக்கும் அந்தஸ்து எனும் அரக்ககுணம் உச்சந்தலையில் ஏறிவிடும் . நாம் இப்போது ஆடினால் நமது ஸ்டேடஸ் குறைந்துவிடும் என்று இல்லாத ஒன்றை கற்பனை செய்துகொண்டு , என் சிரத்தை , முகச்சிரத்தையுடன் கட்டுபடுத்தி வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிடுவேன் .  

அதன்பின் ஒவ்வொரு வருடமும் வேடிகைப்பார்க்கும் மைனராகவே ஆக்கப்பட்டிருந்தேன் . சென்னைவாசம் முடித்து சேலம் வந்தபின்கூட ஒரு பார்வையாளனாகவே என்னை கட்டுப்படுத்திக்கொண்டிருக்கிறேன் . வழக்கம்போல கம்பம் நட்டநாளிலிருந்து அடுத்த 12 நாட்கள் , நம்மையும்மீறி செல்லாத்தாவும் , கற்பூரநாயகியும் ஒலிப்பெருக்கியின்வழியே நம்மனதினுள் ஏறி , நம்மையே பாடவைத்துவிடுவார்கள் . அதைத்தொடர்ந்து தை 20ந்தேதி திருவிழா துவங்கும் . அன்றைய தினம் கோவிலில் ஒரு கோழியை அறுத்து பூசையைத்துவங்குவர் . ஒன்றும் பெரிய விசேடமாய் இருக்காதெனினும் , இரவு 10 மணிக்குமேல் நையாண்டி மேளம் உரும ,அம்மனை நான்குபேர் தூக்க, இரு அழகிய அழகிகள் (சிலசமயம் கிழவிகள்) கரகத்தைச்சுமந்து , ஆடிக்கொண்டே ஊர்வலம் வருவார்கள் . ஊரின் ஒவ்வொரு வீட்டின்முன்பாகவும் சென்று , அம்மனுக்குப்பூஜையும் கற்பூரம் ஏற்றியும் வழிபாடு செய்வார்கள் . அன்றையதினம்தான் எனக்கும் , என்வயதையொத்த சில இளைஞர்களுக்கும் வருடத்தின் வசந்தத்தினத்தில் ஒன்றாய் இருக்கும் . இரவு வீட்டில் சாமி ஊர்வலத்திற்கு போகிறோம் என்று கூறிவிட்டு , இரு அழகிகளையும் கரெக்ட் செய்துகொண்டு புழுதிக்காட்டிற்குச்சென்று , உருமிய மேளத்தை காது கிழியும்படி அடிக்கச்சொல்லி , அழகிகளுடன் செம ஆட்டம் போடுவோம் . பெரும்பாலும் ஊர்ப்பெருசுகளும் இதைக்கண்டுகொள்ளாதுகள் என்றாலும் ஜொள்ளுக்கிழவர்கள் முகத்தில் பொறாமை எனும் பூ , பூத்து மலர்ந்திருப்பதை அவ்வளவு இருட்டிலும் காணலாம் . 11 மணிக்குமேல் ஆட்டத்தை ஆரம்பித்து 1 மணிவரைக்கும் விடாமல் வீடுவீடாய்ச்சென்று ஆடிக்களைத்து வீட்டினுள் வந்து உறங்கும்போது , நித்திராதேவி நிம்மதியாய் வழிகாட்டுவாள் .

அடுத்தநாள்  சர்க்கரைப்பொங்கல் , வெண்பொங்கல் என பொங்கல் பாத்திரத்தைத்தூக்கிக்கொண்டு செல்லியம்மனுக்கு பொங்கல் வைக்க ஊரிலுள்ள பெண்கள் அணிவகுப்பாய் அக்குட்டித்திடலை ஆக்கிரமிப்பார்கள் . பெரும்பாலும் பொங்கல்வைக்கும் படலம் 3 மணிக்கு ஆரம்பித்து 5 வரை நடைபெறும் . அந்நேரத்தில் ஊரில் இருக்கும் இளைஞிகள் , கல்லூரிக்கு கால்ஷிட் கொடித்திருப்பார்கள் . என்ன , அவ்வேளையில் யார் , யார் நமக்கு அத்தை ? எந்த அத்தையின் பெண் வயதுக்கு வந்திருக்கிறாள் ? யாருக்கு மாப்பிள்ளை தேடுகிறார்கள் ? எந்த பெண் எந்தக்கல்லூரியில் படிக்கிறாள் ? போன்ற பலவித சந்தேகங்களை அங்கே பொங்கல்வைத்துக்கொண்டிருக்கும் ஆன்டிகளின் இனிய மற்றும் எளிய சம்பாஷைகளின்வழியே அறிந்துகொள்ளலாம் . இதையெல்லாம் தெரிந்துகொண்டால்தான் 6 மணிக்கு அத்தை மகள்களும் , மாமன் மகள்களும் வரும்போது நாம் அப்டேட்டாக இருந்து கரெக்ட் செய்யமுடியும் . அதனால் புகையையும் பொருட்படுத்தாது , பொங்கல் வைக்கும் பெண்மணிகளின் ஊடே நம் பயணத்தைத்தொடர்ந்து கொண்டே இருக்கவேண்டும் . மேலும் நாம் இன்னும் மணமாகாத கட்டிளம்காளையாக ஊருக்குள் பொலிவாகச்சுற்றிக்கொண்டிருப்பது இம்மாதிரியான நேரங்களில்தான் மற்றவர்களுக்கும் தெரியும் . காலையில் 7 மணிக்கே குளித்திருந்தாலும் , மதியம் 3 மணிக்கு மீண்டும் குளித்துவிட்டு , என்றும்தொடாத பான்ஸ் பவுடரை அடித்துக்கொண்டு , மிகமுக்கியமாக திருநீறு இட்டுக்கொண்டு திடலில் கூடவேண்டும் . அப்போதுதான் நாம் ஸ்மார்ட் மற்றும் குணமான பையனாக அவர்களின் கண்களுக்குத்தெரிவோம் .

பொங்கலைவைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்ததும் முதல்வேளையாய் அணிந்திருக்கும் சட்டையை மடங்காமல் , கசங்காமல் கழட்டிவைத்துவிட்டு , மீண்டும் நன்கு முகம்கழுவி , மறுபடியும் சட்டையை அணியவேண்டும் .இம்முறை மறக்காமல் ஏதேனும் ஒரு பர்பூயூமை அடித்துக்கொண்டுதான் செல்வோம் . மாலை 6 மணிக்குமேல் ஊரினுள் இருந்து செல்லியம்மன் கோவிலுக்கு மாவுத்தட்டு கொண்டுவரும் நிகழ்ச்சி நடக்கும் . சிலர் சோளத்தைச் சட்டியில் விதைத்தும் கொண்டுவருவார்கள் . முன்னால் தாரையும் தப்பும் முழங்க , பின்னால் வரிசையாய் மகளிர்க்கூட்டம் தட்டுசுமந்து வர , கூட அவர்களின் மகள்  , தங்கை மற்றும் இதர குடும்பத்தினர் சகிதம் வந்துசேருவார்கள் . அத்தகைய வேளையில் நம் இருப்பைக்காட்டிக்கொள்ள விசில் அடித்தோ , இல்லையேல் கண்ணைப்பறிக்கும் நிறத்திலோ உடையணிந்திருக்கவேண்டும் . அதன்பின் என்ன , எப்படியும் ஒவ்வொரு பெண்ணும் தத்தம் தனது பள்ளியில் தொலைந்த பழைய ஊர்த்தோழிகளைக்கண்டறிந்து அவர்களுடன் ஒன்றுசேர்ந்து , அந்த கோவிலைச்சுற்றிய  , பெண்களின் அத்தியாவசியக்கடைகளில் வளைய , வளையல் வாங்க வலம் வருவார்கள் .

இப்படியாகச்செல்லும் அன்றைய தினம் பெரும்பாலும் என்போன்றோர்க்கு இளம்பெண்களை சைட் அடித்தே கழியும் . அன்று இரவு கூத்து அல்லது குறவன் – குறத்தி போன்றவற்றில் ஏதேனும் ஒரு நிகழ்ச்சி நடைபெறும் . கூத்து என்பதுதான் 18 – ம் நூற்றாண்டில் நாடகமாய் மாறி ,இன்றைய தினம் செல்லுலாய்டில் புகுந்து சினிமாவாக உருவாகியிருக்கிறது . குறவன் – குறத்தி என்பது சிற்றிலக்கியங்களில் உள்ள பள்ளு மற்றும் குறவஞ்சி  ஆகிய இரண்டு நாடகவகையச்சார்ந்தது .   இதில் ஒரு குறவனும் இரு குறத்தியரும் கண்டிப்பாய் இருப்பார்கள் . முதலில் குறவன் ஒருத்தியை மணப்பதுபோலவும் அதைத்தொடர்ந்து , அவளுடைய தங்கையையும் கரக்ட் செய்து மணப்பது போலவும் செல்லும் . சிரிப்பிற்கோ , அதகளத்திற்கோ பஞ்சமே இருக்காது . பெரும்பாலும் ஊரில் உலாவும் பேச்சுவழக்குச்சொற்களும் , சில இரட்டை அர்த்த வசனங்களும் மிகமிகுதியாய் இருக்கும் . ஆனால் இப்போதைய தமிழ்சினிமாக்களிலும் , தற்காலத்தமிழ் இலக்கியவாதிகளின் எழுத்துகளிலும் இருக்குமளவிற்கு தரம்கெட்ட வார்த்தைகளுடன் இணைத்துப்பார்க்கும்போது இது எவ்வளவோ பரவாயில்லை என்றே தோன்றும் . கண்டிப்பாக இதில்  ஒரு பேரழகி இடம்பெற்றே விடுவாள் . பெரும்பாலான ஊர் ஆடவர்களுக்கு அவள்தான்னஅன்றைய இரவு கனவுக்கன்னியாய் இருப்பாள் . இந்நாடகத்தின் நடுவில் திடுமென பார்வையாளர்களுக்கும் ஆடல்புரியும் வாய்ப்புக்கிடைக்கும் . நானே இருமுறை குறத்திகளுடன்  ஜோடிசேர்ந்து புழுதி கிளப்பி , வீட்டினுள் வார்த்தை வைபோகத்திற்கு ஆளானதும் உண்டு . ஆனால் , இப்போதெல்லாம் இந்த நிகழ்ச்சி நடத்த போதுமான வாய்ப்புகள் இல்லை என்றே சொல்லலாம் . பெரும்பாலான குறத்தி நடனம் ஆடும் பெண்கள்  பாலியல் தொல்லைக்கு ஆட்படுவதும்  , நமது நரம்பற்ற சமூகம் இதைக்கலாச்சார சீர்கேடாகவும் பார்ப்பதாலோ என்னவோ சரியானபடி பார்ட்டிகள் கிடைக்காமல் இவ்வகை நாடகங்களே அழியும் நிலைக்கு வந்துவிட்டன .

இந்தவருடம் குறவன் – குறத்திக்கு பதிலாய் கூத்து வைக்க ஏற்பாடு செய்திருந்தனர் ஊர்ப்பெரியவர்கள் .ஶ்ரீகலைமகள் நாடகசபை எனும் கம்பனிக்காரர்களின் கூத்தைப்பார்க்க , அதிசயமாய் ஊரே திரண்டிருந்தது . மூன்று வருடங்களுக்குப்பின் கூத்தென்றால் ச்சும்மாவா ! ஊர்ப்பெருசுகளைக்காட்டிலும் என்போன்ற இளைஞர்கள் கூட்டமும் , எங்களைக்காட்டிலும் எங்கள் வயதையொத்த இளம்யுவதிகள் கூட்டமும் திடலை நிறைத்திருந்தன . வரும்போதே பாய் , தலையணை கொண்டுவந்து , சரியான இடம்பிடித்து போட்டு கூத்துப்பார்க்கும்  சுகானுபவம் , சத்யம் திரையரங்கில் கபிள்சீட்டில் அமர்ந்து பார்க்கும்போதுகூட கிடைத்திராத ஒரு பேரனுபவம் . இதே கூத்தைத்தான் பரிதமாற்கலைஞரும் , பம்மல் சம்பந்தனாரும் , சங்கரதாசுசுவாமிகளும் உரைநடை வசனங்களை அதிகரித்து  , நாடகமாக நிகழ்த்தி தற்கால தமிழ்சினிமாவின் முன்னோடிகளாய் விளங்கினர் . பரிதிமாற்கலைஞர் ஒருபடிமேலே போய் தன்னுடைய ரூபாவதி மற்றும் கலாவதி நாடகங்களில் பெண்வேடமிட்டு நடித்திருந்தார் . ரெக்கா டேன்ஸ் எனப்படும் சினிமாப்பாடல்களுக்கு ஆடுகிறேன் என்ற பெயரில் கும்மியடித்து நாசமாய்ப்போன ஆடல்-பாடல் நிகழ்ச்சிகளால்தான் அருமையான கூத்துக்கலை சிதைந்து நலிவுற்றது என்பது என் எண்ணம் . ஒரு அதிர்ச்சிகரமான விஷயம் என்னவெனில் , இம்மாதிரியான ஆடல்பாடல் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் பெண்களில் பலர் , கல்லூரியில் படிக்கும் பெண்களாய்த்தானிருந்தனர் . அதுவும் பெரும்பெரும் கல்லூரியில் படிக்கும் பெண்கள் , தங்களின் மேலதிக செலவுக்காக இம்மாதிரியான நடன க்ரூப்களில் ஆடி . அந்த காசின்மூலம் தங்ளுக்குத்தேவையான ஆடம்பர செலவுகளை செய்துவந்தனர் . சேலத்தின் ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் , வார்டனுக்குத்தெரியாமல் ஹாஸ்டல் அறையிலேயே , அறையின்சகதோழிகள் முன்னிலையிலே விபச்சாரம் செய்த சில பெண்களை நானே பார்த்திருக்கிறேன் . (நீ  அங்க எதுக்குப்போன என்றெல்லாம் குதர்க்கமாக கேள்வி கேட்காதிர்கள் . சிற்றின்பத்திற்காக கேடுகெட்ட செயலைச்செய்யும் குடியில் நான் பிறக்கவில்லை .) அதன்பின் எப்படியோ சிலபல சட்டங்களைப்போட்டு இம்மாதிரியான கேடுகெட்ட நிகழ்ச்சிகளைத்தடை செய்ததினால் , மீண்டும் கூத்தின்பக்கம் எங்கள் ஊரின் பெரியமனிதர்பார்வை திரும்பியது .

இந்த ஆண்டு நாகாராஜன் சண்டை (அ) அரவான் பிறப்பு  (அ) உழுவைத்திருமணம் எனும் பாரதத்தைத்தழுவிய கூத்து  எங்கள் ஊரில் போடப்பட்டது . மிகமிகமிக அனுபவித்து ரசித்துப்பார்த்தேன் . என்ன , எப்போதும் முதல்இரண்டு மணிநேரம்  காமெடியாகவும் காமநெடியாகவும் போகும் கூத்து , அடுத்த இரண்டு மணிநேரத்தில் கொஞ்சம் சொக்கவைக்கும் . இம்மாதிரியான அனுபவம் ஏற்கனவே  நான் பல கூத்துகளைப்பார்த்திருந்த காரணத்தால் வந்திருந்தது . அதனால் அடுத்த இரண்டு மணிநேரம் தூங்ப்போய்விட்டேன் . காரணம் , அடுத்த நாள் தல படம் ரிலிஸ் . அதுவுமில்லாமல் ஒருவருடம் கழித்து மீண்டும் ஜிம் பிரவேசம் வேறு என்பதனால் கண்டிப்பாய் இரவு உறங்கியாகவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டேன் . மீண்டும் 4 மணியிலிருந்து கூத்து முடியும் வரை ஜாலியாய் பார்த்துக்கொண்டே இருந்தேன் . இதுபோன்ற அற்புதமான கலைவிஷயங்களை , பெருநகரங்களில் வாழும் மக்கள் மிஸ் செய்கிறார்களே எனும்போது ஒரு ஆதங்கம் இருப்பினும் , அவர்கள் கொடுத்துவைத்தது அவ்வளவு தான் என்று சமாதானப்படுத்திக்கொண்டேன் .  

ஆரம்பகாலங்களில் ஆர்யர்கள் , இந்துமதத்தையும் பாரத , ராமாயண இதிகாசங்களையும் பரப்பியதற்கு பெரும்கைக்கொடுத்தது இந்த கூத்துக்கலைதான் . இதன்மூலம் தான் ராமனும் , கர்ணனும் தமிழ்நாட்டிற்குள் அடியெடுத்தே வைத்தார்கள் . ஆனால் இன்றைய சூழலில் அந்த கூத்துக்கலைக்கு கைக்கொடுக்கவே யாருமில்லை என்பது வருத்தத்திற்குரியது .சரி , அடுத்தநாள் அனுபவம் பற்றி அடுத்த பதிவினில் சந்திப்போம் .


தொடர்புடைய இடுகைகள்






Comments

  1. தற்போது ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் காமக்கூத்தாய் ஆனதால் ,அதற்கும் தடை வந்துவிட்டது தெரிந்ததுதானே :)

    ReplyDelete
    Replies
    1. அதெல்லாம் நம் போன்ற ஊர்க்காரர்களுக்குத்தெரியும் அண்ணா . இன்னும் மெட்ரோபொலிட்டன் சிட்டிகளில் இம்மாதிரியா விஷயம் இருப்பதே தெரியாமல் இருக்கிறார்களே ! வருகைக்கும் ஓட்டிற்கும் நன்றி அண்ணா .

      Delete
  2. கலைக்கூத்தாடிகள் இன்று கடவுளாகி விட்டார்களே,,, நண்பா...
    தமிழ் மணம் 2

    ReplyDelete
    Replies
    1. உண்மையான கூத்து ஆடுபவர்களின் திறமைக்குமுன்னால் சினிமாக்காரர்கள் ஒரு புள்ளைபூச்சிகள் . விடிய விடிய ஆடியும் , தொண்டை கிழியும்படி பாடியும் கூத்தை ஆடுகிறார்கள் . ஆனால் எடிட்டிங் என்ற ஒரு தொழில்நுட்பம் மட்டும்மில்லையெனில் பல சினிமா்காரர்களின் நிலை அதலபாதாளத்திற்குள் இருந்திருக்கும் .

      நன்றி அண்ணா .

      Delete
  3. அது ஒரு அழகிய நிலாக்காலம்...!

    ReplyDelete
    Replies
    1. ம் . நான் இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் இம்மாதிரியான சந்தோஷத்தை அனுபவிக்காமல் விடமாட்டேன் அண்ணா . அதைப்பற்றிய நினைவுகளைநினைத்துக்கொண்டு வாழும் சராசரி மனிதனாக மாறாமல் அதை அனுபவித்துவாழ்பவனாக இருக்கவேண்டும் என்பதே என் ஆசை . கருத்துக்கும் ஓட்டிற்கும் நன்றி அண்ணா .

      Delete
  4. சாதி சண்டைகள் முடிந்து மறு நாள் காலையில் காசு பொறுக்க போவறத நெனச்சா 'ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்' என்பது சரியா போச்சு !

    சிறு வயது நினைவுளை நல்ல நடையோடு எழுதி இருக்கீங்க. உங்க கூடவே இருந்து அனுபவித்த மாதிரியான இன்பம்.

    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  5. ஹா ஹா ஹா . ஒருவகையில் எல்லோருமே கூத்தாடிகள் தானே அண்ணா . வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா .

    ReplyDelete
  6. கிராமங்களில் ஒன்னோ- ரெண்டோ போதும் இருந்தார்கள ஆனால் நகரங்களில் ஒரு தெருவுக்கு ஒரு கோயில் இருக்கிறது..மகேஷ்............

    ReplyDelete
    Replies
    1. இருந்தாலும் கிராமங்களில் நடைபெறும் திருவிழாக்களின் ரவுசுகளில் பாதியைக்கூட நகரங்களில் நடப்பதில்லையே அண்ணா . ஏதோ வந்தோம் , கும்பிட்டோம் , சென்றோம் என்ற நிலையில்தானே இருப்பார்கள் . வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணே !

      Delete

Post a Comment

Popular posts from this blog

FIGHT CLUB – சினிமா விமர்சனம்

MALENA (18+) – சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் - சிறுகதை