Monday, 16 February 2015

FIGHT CLUB – சினிமா விமர்சனம்
படம் ஆரம்பித்த முதல் 2 நிமிடத்திலேயே என்னைக்கவர்ந்திழுத்த ஒரு படமென்றால் அது கண்டிப்பாக FIGHT CLUB மட்டுமே . அப்படி என்ன FIGHT CLUB-ல் இருக்கிறது  என்கிறீர்களா ?  படத்தின் டைட்டிலை பார்த்ததும் ஏதோ குத்துச்சண்டை சம்பந்தமான படமாக இருக்கும் என்று நினைத்து, வேண்டா வெறுப்பாக இருந்த எனக்கும் ஆரம்பத்தில் அப்படி ஒரு கேள்வி எழுந்தது .

முதல்காட்சியிலேயே ஒருவன் , ஒரு சேரில் கட்டப்பட்டிருக்கிறான் . அவனுக்குப்பின்னால் ஒருவன் துப்பாக்கியை வைத்துக்கொண்டு நிற்கிறான் . கட்டப்பட்டிருக்கும் நபர் நம்மிடம் பேச ஆரம்பிக்கிறான் . அவன்தான் படத்தின் ஹீரோ . அவனுக்கு பின்னால் இருக்கும் நபர் டெய்லர் (துணி தைக்கற ஆளு இல்லைங்க . பேரே TYLOR தான் ) எனவும் , அவன் அந்நகரத்தில் இருக்கும் பெரிய பெரிய அடுக்குமாடி அலுவலக கட்டிடங்களில் பாம் வைத்திருக்கிறான் எனவும் , அவையனைத்தும் இன்னும் சில நிமிடங்களில் வெடிக்கப்போகிறது என்றும் கூறுகிறான் . இதெல்லாம் எனக்கு எப்படித்தெரியும் என்றால் , டைலர்க்குத்தெரிந்த விஷயம் எனக்கும் தெரியும் என்கிறான் . இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் காரணம் மர்லா எனும் பெண்தான் என்று கூறுபவன் , அதற்கு முன்னால் தனக்கு இன்சோம்னியா (தூக்கமின்மை நோய் . இதைப்பற்றி அறியாதவர்கள் என்னுடைய INSOMNIA சினிமா விமர்சனத்தை ஒருமுறை படித்துவிட்டு வாருங்கள் .) இருந்ததாக தெரிவிக்கிறான் . இந்நோயிலிருந்து எப்படியாவது தப்பிவிட வேண்டும் என்பதற்காக சில முகாம்களுக்கு செல்கிறான் . அமெரிக்காவில் அழுது அழுதே மன அழுத்தத்தைப்போக்க , நிறைய கவுன்சிலிங் கொடுப்பார்கள் . அதேபோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிலர் , தங்களின் வாழ்க்கையில் நடந்த துயரமான சம்பவங்களை , தங்களைப்போன்றே பாதிக்கப்பட்ட  சிலரிடம் சொல்லி அழும் முகாம் , இன்னும்பிற அழுகாச்சி முகாம்கள் என சென்று அழுது தீர்க்கிறான் ஹீரோ . அவன் எதற்காக அழுகிறான் என்பது அவனுக்கே தெரியாது . ஆனால் நன்கு அழுதால் தூக்கம் வருகிறது என்பதால் , தொடர்ச்சியாய் எல்லா முகாமுக்கும் சென்று தினமும் அழுகிறான் . அப்படி ஒரு முகாமில் தான் பாபி எனும் முன்னாள் மல்யுத்த வீரனைச்சந்தித்து நண்பனாக்கிக்கொள்கிறான் . இப்படி அழுவாச்சி காவியமாக சென்றுகொண்டிருந்த வாழ்க்கையில் மர்லா எனும் பெண் உள்நுழைகிறாள் . அவளும் ஹீரோ செல்லும் எல்லா முகாமிற்கும் வருகிறாள் . அவளைப்பார்த்து மீண்டும் மனஅழுத்தத்தில் மாட்டிக்கொண்டு தூக்கத்தை இழக்கிறான் ஹீரோ . ஒரு கட்டத்தில் அவளிடம் பேசி , தான் வரும் முகாம்களுக்கு , நீ வரவேண்டாம் என்று வேண்டிக்கொள்கிறான் . இன்னொருபுறம் ஒரு விமானப்பயணத்தின்போது டெய்லர் என்பவனைச்சந்திக்கிறான் . டெய்லர் ஒரு வித்தியாசமான ஆள் . அவனைச்சந்தித்துவிட்டு வீட்டுக்குப்போகும் ஹீரோ , தன் வீடு எரிக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்கிறான் .  கடுப்பான ஹீரோ டெய்லருக்கு போன் செய்ய , அவன் ஒரு பாருக்கு வரசொல்ல , இருவரும் குடிக்க ஆரம்பிக்கிறார்கள் .ஒருகட்டத்தில் டெய்லர் ஒரு விசித்திரமான கூற்றை முன்வைக்கிறான் . அதுதான் நம்ப வடிவேலு காமெடி மாதிரி , அடிச்சி அடிச்சி விளையாடலாம் என்பதே . அவர்கள் இருவரும் தெருவில் அடித்துக்கொண்டு , மொகரையைப் பேத்துக்கொள்கிறார்கள் . அவர்களின் சண்டைக்கு காரணம் இல்லை . அந்தமாதிரி சண்டை போடும்போது , ஹீரோவின் மன அழுத்தம் குறைவதை உணர்கிறான் . பின் டெய்லரின் பாழடைந்த வீட்டிலே தங்க ஆரம்பிக்கும் ஹீரோ , தினமும் பாரின் வெளியே டெய்லருடன் சண்டை போட்டு முகத்தைப்பேர்த்து கொள்ள , இதை வேடிக்கை பார்க்க என ஒரு கும்பல் உருவாகிறது . பின் அந்த கும்பலும் சண்டையின் உள் நுழைய , அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக அந்த குழு பார்ம் ஆகிறது . டெய்லர் , அந்த குழுவை வைத்து FIGHT CLUB- ஐ தொடங்குகிறான் . யாருக்கும் தெரியாமல் ஒரு கட்டிடத்தின் பேஸ்மட்டத்தில் ஒவ்வொரு வாரமும் இது தொடர்ந்து நடக்கிறது .FIGHT CLUB-ன் நோக்கம் , சண்டை போடுதல் மட்டும் தான் . வாழ்க்கை மீது இருக்கும் பயம் , கோவம் என எல்லாவற்றையும் சண்டையிடுவதன்மூலம் தீர்த்துக்கொள்கிறார்கள் . அடுத்தகட்டமாக , டெய்லர் FIGHT CLUP ஆட்களை (அல்லது ரானுவத்தை) வைத்து சில வேலைகளைச்செய்கிறான் . திருட்டு , காரை உடைத்தல் , வெடிகுண்டு தயாரித்தல் போன்ற சமூக குற்றங்களில் ஈடுபடுகிறான் . ஆனால் இன்னொரு புறமோ , ஹீரோவுக்கு பயம் வந்துவிடுகிறது . இடையில் , மர்லாவை டெய்லர் உஷார் செய்து விட , மர்லா மீதும் ஹீரோ கோவம் கொள்கிறான் . இன்னொரு புறம் ஹீரோவுக்குத்தெரியாமல் டெய்லர் PROJECT MAYHEM எனும் சதித்திட்டத்தை உருவாக்குகிறான் . அதைப்பற்றி அந்த குழுவின் உறுப்பினர்கள் யாரிடமும் எதற்காகவும் பேசக்கூடாது என்பதே முதல் கட்டளை .ஒன்றும் புரியாமல் விழிக்கும் ஹீரோ , டெய்லரை திட்ட , டெய்லரோ கோவித்துக்கொண்டு செல்கிறான் . டெய்லர் எங்கே போயிருப்பான் என அறிந்துகொள்ள , டெய்லர் கூறிய நாடுகளுக்கெல்லாம் சுற்றுப்பயணம் செய்யும் ஹீரோ , அந்தந்த நாடுகளிலும் FIGHT CLUB ரகசியமாக செயல்படுவதை அறிந்துகொள்கிறான் . அதன்பின் என்ன நடக்கிறது என்பதே திரைப்படம் .FIGHT CLUB எனும் பெயரில் சக் பேலனியுக் எழுதிய நாவலுக்கு , ஜிம் என்பவர் திரைக்கதை எழுத , இதுவரை FLOP என்ற ஒன்றுகூட கொடுக்காத , என் அபிமான இயக்குநரான DAVID FINCHER இயக்கத்தில் 1999 – ல் வெளிவந்த படம் தான் FIGHT CLUB . இந்த படத்தில் ஹீரோவாக PRIMAL FEAR , HULK , THE ILLUSIONIST போன்ற படங்களின் கதாநாயகர் எட்வர்ட் பின்னி எடுத்திருக்க , டெய்லராக ஜோலியின் மணாளன் பிராட் பிட் . பிராட் பிட்டை இப்படத்தில் பார்த்ததுபோல எந்தவொரு படத்திலும் நான் பார்த்ததே இல்லை . மனிதர் அவ்வளவு ஜெம் , அவ்வளவு ஹேன்சம் . படத்தில் பிராட்பிட் செய்யும் அடாவடிகளையெல்லாம் பார்த்தால் , அவ்வளவு ரகளையாக இருக்கும் . கிட்டத்தட்ட ஒரு ஸ்டைலிஷ் சைக்கோவாய் நின்னு விளையாடியிருப்பார் . மர்லாவாக ஹெலனா என்பவர் நடித்திருக்கிறார் . மேடத்தின் வேல , படம் முழுக்க தம் அடிப்பது மட்டும்தான் என்று நினைத்துக்கொண்டிருக்க , கடைசியில் ஒருவிதமான எக்ஸ்பிரசனில் ஹீரோவிடம் பேசும் காட்சியில் மொத்தமாக நம் மனதை கொள்ளையடித்திருப்பார் . இப்படம் டேவிட் பிஞ்சர் தவிர வேறு யாராவது இயக்கியிருந்தால் , தப்பிப்பிழைத்திருக்குமா என்பது சந்தேகம் தான் . கிளைமேக்ஸ் காட்சியிலெல்லாம் ,  அடப்பாவிகளா போடவைத்திருப்பார் . ஏற்கனவே இதேமாதிரியான திரைக்கதையில் அவர் இயக்கிய THE GAME (இந்த படத்திற்கும் தமிழில் விஷால் நடிப்பில் வெளியான சமர் படத்திற்கும் எக்கசக்க ஒற்றுமைகள் இருக்கும்) படத்தின் அனுபவம் அவருக்கு பயங்கரமாக கைக்கொடுத்திருக்கிறது எனலாம் . படத்தின் மாபெரும் பலம் என்பவை ஒளிப்பதிவு , இசை , விஷுவல் எஃபெக்ட்ஸ் ஆகிய மூன்றும்தான் . 1999 – களில் இவ்வளவு அட்டகாசமான விஷுவல்களும் , எஃபெக்ட்களும் , அப்போதையகாலகட்டத்தில் வெளிவந்த மற்ற படங்களில் இருக்குமா என்பது சந்தேகம்தான் . FIGHT CLUB என டைட்டில் போடும் போது ELECTRONIC கிடாரை வைத்து ROCK வகையறா இசையில் டஸ்ட் பிரதர்ஸ் அலறவிட்டு , விஷுவல் எஃபெக்ட்ஸில் பெயர்போடும் போது அட்டகாசமாக ஆரம்பிக்கும் படம் கிளைமேக்ஸ் வரை அட்டகாசாகவே போகிறது . சில இடங்களில் பயங்கரமாக குழப்பினாலும் , கிளைமேக்ஸில் ஒட்டுமொத்தமாய் அதற்கான விடை கிடைத்துவிடும் . மாபெரும் ஜீனியஸ்களால் படத்தின் ஆரம்ப காட்சிகளில் வரும் ப்ரேம்களிலேயே , படத்தின் போக்கை அறிந்துகொள்ள முடியும் .

இந்த படத்திற்கு சினிமா விமர்சகர்களுக்கிடையே எந்தளவு பாராட்டு கிடைத்ததோ , அதே அளவு எதிரிவினையும் கிடைத்தது எனலாம் . இந்த படமும் கிட்டத்தட்ட வன்முறையை ஞாயயப்படுத்தும் படம்தான் , இதை தடைசெய்யவேண்டும் என்றெல்லாம் பெரும்பெரும் பூகம்பங்கள் ஏற்பட்டது . இப்படத்தை குப்ரிக்கின் A CLOCKWORK ORENGE- உடன் ஒப்பிட்டு பேசி , பல பிரச்சனைகளை உண்டாக்கினார்கள் . (வன்முறைக்கெதிரான குப்ரிக்கின் அந்த படம் , மக்களிடையே எதிர்வினை ஆற்றுகிறது என்பது தெரிந்தவுடன் , அப்படத்தினை தடை செய்தார் குப்ரிக்) . அதற்கு ஏற்றார்போல் , படம் ரிலிசானதும் , அமெரிக்காவின் பல கல்லூரிகள் , பல்கலைக்கழகங்கள் , பார்கள் என பல இடங்களில் அவனவன் FIGHT CLUB திறந்து , அடித்துக்கொண்டு மூஞ்சு மொகரைகளை அக்காலகட்டத்தில் பேர்த்துக்கொண்டனர் . லேட்டாக உஷாரான அமெரிக்க அரசு , அதன்பின் அம்மாதிரியா கிளப்களை தடை செய்தது . இன்னொருபுறம் ஒரு மாணவன்  , படத்தில் காண்பிப்பது போல வெடிகுண்டு தயாரித்து அஞ்சல்பெட்டியில் போட்டு வெடிக்கவைத்த சம்பவங்களும் இருக்கின்றன . உண்மையில் படத்தை  ஊன்றி கவனித்தால் , படம் வன்முறைக்கு எதிரானதாகவே இருக்கும் . மெலிசான கோடு என்று தல சொல்வது போல , அந்த மெலிசான கோட்டையும் அதன் இருபுறங்களையும்  உணராவிட்டால் , வேறுமாதிரியாகிவிடும் . ( யாரோ சொன்னாங்கப்பா . தமிழ்நாட்டுல தான் ஹீரோக்கள தெய்வம் மாதிரி கொண்டாடுறாங்கனு . தமிழ்நாட்டுலயாச்சும் பரவால்ல , ஹீரோவோட நிறுத்திக்கிறாங்க . வெளிநாட்டுல எல்லாம் வில்லனுங்கல கொண்டாடுறது கூட இல்ல , நான் தான் வில்லன்னு சொல்லிகிட்டு , படத்துல செஞ்ச மாதிரியே போற வரவன போட்டுத்தள்ளுறாய்ங்க . THE DARK KNIGHT , FIGHT CLUP , A COCKWORK ORENGE , SPIDERMAN னு எக்கச்சக்க உதாரணங்கள் இருக்கு .)

மொத்தத்தில் , ஒரு அட்டகாசமான க்ரைம் + ஆக்சன் திரில்லர் காம்போவுக்கு இத்திரைபடம் கேரண்டி . ஆங்காங்கெ கொஞ்சம் அம்மாதிரியான விஷயங்கள் வருமென்பதால் , கவனம் தேவை (அந்த சீன்ல கவனம்தேவைனு சொல்லலைங்க . மத்தவங்க கூட பாக்கறப்போ , கொஞ்சம் கவனம் தேவை ).  இது IMDB ,ROTTEN TOMATOS என்று அனைத்து சினிரேட்டிங்களிலும் , பயங்கரமானதொரு இடத்தில் தான் இருக்கின்றது . மேலும் AFI – யிலும் பெஸ்ட் 100 படங்களில் ஒன்றாக இருக்கிறது என்று மொக்கையெல்லாம் போடவேண்டியதில்லை என்பதால் இத்துடன் விமர்சனத்தை முடித்துக்கொள்கிறேன் .


இவ்வளவு படிச்சிட்டிங்க . அப்படியே FIGHT CLUB-ஒட விதிகளையும் படிச்சிட்டுப்போங்க .

1.    You don't talk about fight club.
2.    You don't talk about fight club.
3.    When someone says stop, or goes limp, the fight is over.
4.    Only two guys to a fight.
5.    One fight at a time.
6.    They fight without shirts or shoes.
7.    The fights go on as long as they have to.
8.    If this is your first night at fight club, you have to fight.

நானும் FIGHT CLUB – ல் இருந்ததால் , இத்தனை நாட்களாக அதன் முதல் இரண்டு விதிகளைப்பின்பற்ற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருந்ததால் தான் இவ்வளவு நாட்களாக எழுதாமல் விட்டுவிட்டேன் . ;-)தொடர்புடைய சினிமா விமர்சனங்கள்உங்கள் விருப்பம்

11 comments:

 1. TYLOR னு போடவும் கிரிக்கெட் வீரரோனு நினைச்சுட்டேன்
  வழக்கம் போல பிரமாண்டமாக விமர்சித்து இருக்கிறீர்கள்
  தமிழ் மணம் 2

  ReplyDelete
  Replies
  1. ஹீ ஹீ ! எனக்கு கிரிக்கெட் மறந்து 5 வருஷம் ஆகிடுச்சுணே ,

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணே !

   Delete
 2. கதையே வித்தியாசம் + சுவாரஸ்யம்...! விவரித்த விதம் அதை விட... பாராட்டுக்கள்...

  ReplyDelete
  Replies
  1. படம் படுவேகமா போகும்ணா . நேரம் கிடைச்சா பாருங்க !

   Delete
 3. படத்தை பார்த்துவிட்ட திருப்தி... நன்றி!

  ReplyDelete
  Replies
  1. அண்ணே ! இப்படிகூட படத்த பாக்கலாமா ?

   நன்றி அண்ணே , வருகைக்கும் கருத்துக்கும் .

   Delete

 4. ஜீ FIGHT CLUB கிளைமாக்ஸ் ல ஒரு டவுட் , எட்வர்ட் வாய்ல துப்பாக்கி வச்சு சுட்டும் எப்படி சாகமா இருக்கான்????

  ReplyDelete
  Replies
  1. அந்த சீன நல்லா பாருங்க ஜீ . ஹீரோ சுட்ட புல்லட் , காதுக்கு பக்கத்துல இருக்க தாடை வழியா வெளிய போற மாதிரி தான் காட்டிருப்பாங்க . அது தொண்ணடைக்குள்ளயோ , தலைக்குள்ளயோ போயிருந்தா தான் சாகமுடியும் .

   Delete
  2. ஓகே ஜீ பட் அப்படி சுட்ட பிறகு "டெய்லர்" போயுருவன எட்வர்ட் எப்படி நம்புறான் ???

   Delete
  3. ஆக்சுவல்லா , ஹீரோவோட உடம்புக்குள்ள தான் டெய்லர் எனும் இன்னொருத்தான் இருக்கான்னு கண்டுபிடிச்சதும் , தானே இறந்துட்டா அப்றம் எப்படி அவன் தப்பிப்பான்னுத்தான் ஹீரோ தற்கொலை செய்யப்பாப்பாரு . ஆனா , அந்த தற்கொலை முயற்றசில தப்பிச்சப்றோம் , டெய்லர் இறந்துட்ட மாதிரி காட்டுவாங்க . ஆனா ,உண்மை என்னன்னா , ஹீரோ தனக்குள்ள இருந்த டெய்லர அப்படிங்ற ஆளுமைய முழுசா ஏத்துப்பான் .(எகா . அந்நியன் கிளைமேக்ஸ் விக்ரம் )

   Delete
  4. ஓகே ஜீ மிக்க நன்றி என்னோட கிளைமாக்ஸ் குழப்பம் தீர்ந்தது....

   Delete