Friday, 20 February 2015

REQUIEM FOR A DREAM - சினிமா விமர்சனம்டேரன் அரவ்னாஸ்கி – நோலனுக்கு சவால் விடும் சமகாலத்து இயக்குநர்களில் அதிமுக்கியமானவர் . இவருடைய ஸ்பெஷல் என்னவென்றால் , ஒரேமாதிரியான கதை , திரைக்கதை , கிளிஷேக்காட்சிகளை எங்கும் இனம்கண்டுபிடிக்கமுடியாத  மாதிரியான வித்தியாச வித்தியாசமான  படங்களைத்தருவதில் வல்லவர் இவர் . இவருடைய படங்கள் ஆரம்பத்தில் TVS 50 வேகத்தில்  நகரும் படம் , கிளைமேக்ஸ் நெருங்கும்போது ராக்கெட் வேகத்தில் இருக்கும் . PI , BLACK SWAN , THE FOUNTAIN என இவருடைய படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம் . என் விமர்சனங்களில் , ஆரம்பத்தில் என்னை ஓரளவு வலையுலகில் நிலைநிறுத்திய விமர்சனம் என்றால் அது THEFOUNTAIN தான் . BLACK SWAN பற்றி ஓரிரு வரிகள் எழுதியிருந்தாலும் , இன்னும் அப்படத்தினைப்பற்றி பெரிதான ஒரு கட்டுரை எழுதவேண்டும் என்ற ஆசை இருக்கிறது . நோலன் தொடர் முடிந்ததும் , இவருடைய படங்களை வரிசையாக எழுதவேண்டும் என்ற முடிவில்தான் இருந்தேன் . INCEPTION எழுதி முடிக்கவே இன்னும் இருவாரம் ஆகும் பட்சத்தில் , நோலன் தொடர்களை முடிக்க எப்படியும் இரண்டு மாதம் ஆகுமென்பதால் , இத்திரைப்படத்தைப்பற்றி மட்டும் எழுதிவிடலாம் என்றுதான் எழுதினேன் .

இந்த படத்தைப்பற்றி எப்படி எழுதலாம் என்று அதிக நாட்கள் யோசித்து , எழுதாமலே கிடப்பில் விட்டப்போன சில படங்களில் REQUIEM FOR A DREAM –ம் ஒன்று . காரணம் , இந்த படத்தின் கரு அப்படியானது . இப்படத்தின் கிளைமேக்ஸ் வரும்போது , பார்க்கவே வேண்டாம் என்று எழுந்து போய்விட துடித்த மூளையை , மனது அப்படியே இழுத்துப்பிடித்து பார்க்கவைத்தது . உங்களுக்கு சிகரெட் , மது போன்ற பலதரப்பட்ட போதைப்பழக்கங்கள் இருந்து , அதை நீங்கள் கைவிட நினைத்தும் முடியாமல் போனால் , இப்படத்தை ஒரே ஒருமுறை பாருங்கள் . குறைந்தபட்சம் ஒருவாராமாவது , உங்களுக்கு அப்போதைப்பொருட்களின் நினைவு மூளைக்கு வராமல் தடுக்கச்செய்யும் வல்லமை வாய்ந்த படம் இது .

படத்தின் தலைப்பிலேயே தெரிந்து விடும் , இது ஒரு கனவு வழிபாடு என்று. அதை கிளைமேக்ஸில் உணரும்போது மனம்முழுதும் பரவும் ஒரு வலி , உங்களை ஒருநாளாவது பொறுமையாக யோசிக்கவைத்துவிடும் . அதற்கென்று , இழுஇழுவென்ற திரைக்கதையை வைத்து , மெகாசீரியல் போலெல்லாம் படம் நகராது . படுவேகமாக , அழகியல் காட்சிப்படுத்தல்களுடன் பயணிக்கும் திரைப்படம்தான் இது . படத்தின் கதையைப் பார்க்கும் முன் , படத்தில் உபயோகப்படுத்தியுள்ள போதைவஸ்துக்களைப் பற்றியும் தெரிந்துகொண்டால் , இன்னும் முழு ஈடுபாட்டுடன் இப்படத்தினை பார்க்கமுடியும் .

ஆம்ஃபீடமைன்  - SUPERMAN DRUGS என்று வெளிநாட்டினரால் அழைக்கப்படும் இவை உண்மையில் ஒரு அசுரமனிதன் தான் . உடல் சோர்வையும் , கழைப்பையும் நீக்க நம்மில் பலர் டீ, காபி போன்றவை குடிப்போம் . இவை குடிப்பதால் ஒன்றும் பெரிய கேடில்லை . ஆனால் , ஆம்ஃபீடமைன்கள் அப்படியல்ல . இவற்றின் வேலை என்னவென்றால் , மனித நரம்புமண்டலத்தில் உணர்வுகளைத்தூண்டும் தூண்டிகளை , தாருமாறாக தூண்டிவிடுவது தான் . இந்த தூண்டிகள் தான் , நாம் ஒவ்வொரு வேலை செய்யும்போதும் அதற்கான உறுப்புகளைத்தூண்டி , அந்த வேலையை செய்யவைக்கின்றன . அதாவது , இப்போது நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் இந்த பதிவு , கண்களின் வழியே மூளைக்கு கடத்தப்படுகிறதல்லவா ? இந்த பதிவை படிக்குமாறு , மூளை உங்களின் கண்ணுக்கு கட்டளையிடும் . அந்த கட்டளையைத் , தூண்டிகள் என்பவைதான் செயல்படுத்தும் . இதன்காரணமாய் , கண்கள் இந்த பதிவைப் பார்க்க ஆரம்பிக்கின்றன . சாதாரணமாக உங்களால் ஒரு நாளில் 10 பதிவுகள் படிக்கமுடிகிறது என்றால் , இந்த ஆம்ஃபீடமைன் உட்கொண்டால் , உங்களை ஒரேநாளில் 100 பதிவுகள் படிக்கவைக்கும் . அதற்காக இதை ஒரு சூப்பர் பவராக நினைக்கவேண்டாம் . களைப்பான கழுதையை அடித்து , அதன்மேல் மீண்டும் மீண்டும் பொதி சுமக்கச்செய்தால் அதன்நிலை என்னவாகுமோ , அதேதான் நமக்கும் . இதை உபயோகப்படுத்துபவர்கள் , எல்லோரிடமும் வழவழவென்று பேசிக்கொண்டே இருப்பார்கள் ( சாதாரணமாக பேசுபவர்கள் இதை உபயோகிப்பதாக நினைக்கவேண்டாம் . பேசாமல் அமைதியாகவே இருப்பவர்கள் கூட ஆம்ஃபீடமைனின் உதவியால் பேசிக்கொண்டே இருப்பார்கள் . சரக்கடிக்கும் முன் அமைதிப்புயல்களாக இருந்து அடித்தபின் டாரண்டினோ படத்தின் கேரக்டர்கள் போல் வழவழவென்று பேசுபவர்களை நியாபகம் கொள்க ) . அடுத்து தீவிர உறக்கமின்மை மற்றும் பசியின்மை . ஒருகட்டித்திற்கு மேல் சென்றால் , மனிதன் எனும் நிலையில் பிறழ்ந்து விலங்காகவும் மாற்றிவிடக்கூடிய மாபெரும் அரக்கன் AMPHETAMINE . மிக முக்கியமான விஷயம் ,ஆம்ஃபீடமைனைத்தொடர்ந்தார்போல் பயன்படுத்துபவர்கள் சில நாட்களிலேயே பித்துபிடித்து பைத்தியம் ஆகிவிடுவார்கள் . சரி , இதை எதற்காக கண்டுபிடித்தார்கள் என்று யோசிக்கிறீர்களா ? ஆரம்பகாலங்களில் ஆஸ்த்மாவிற்கென்று தயாரிக்கப்பட்டு , பின் உறக்கத்தின்பிடியில் (இன்சோம்னியா எனும் நோய்க்கு எதிரானது இந்நோய் ) தவிப்பவர்களைக் காப்பாற்ற இம்மருந்து உதவியது . நிகோட்டின் , மது , அபின் போன்ற போதை வஸ்துகளால் ஏற்படும் சில நோய்களுக்கும் , கால்வலி , பார்க்கின்சன் நோய் போன்றவற்றிற்கும் இதைவைத்து சிகிச்சை அளித்தார்கள். பின் இது சுறுசுறுப்பை உண்டாக்கும் என்று எவனோ ஒரு பைத்தியக்காரன் வத்திவைக்க , இரண்டாம் உலகப்போரில் , ராணுவத்தில் உள்ள வீரர்கள் இம்மருந்தினை பயன்படுத்தினார்கள் . போரின் முடிவில் மீதமான மாத்திரைகளை ஏலத்தில் விட  , ஒவ்வொரு நாட்டின் அரசாங்கமும் முயற்சித்தன . அதன்முடிவு , ஜப்பானில் மட்டும் 20 லட்சம் பேர் இம்மருந்துக்கு அடிமையாயினர் . 1950 – களில் அமெரிக்காவில் உள்ள சில சைக்கோ ஆராய்ச்சியாளர்கள் , இம்மருந்தினை மாத்திரை வடிவில் வெளியிட்டனர் . அதன்பின் மாணவர்களும் இப்பழக்கத்திற்றகு அடிமையாயினர் ( நம்ம ஊர்ல WHITNER மேட்டரை நியாபகம் கொள்ளுங்கள் ). அச்சமயத்தில் தரமான ஹெராயின் கிடைக்காமல் தள்ளாடிய போதைவாசிகளுக்கு , இம்மருந்து அமிர்தமாக இருக்க , பழக்கம் புழக்கமனாது . அதன்பின் பொதுமக்கள் புழக்கத்திற்குத் தடைசெய்யப்பட்ட இம்மருந்து , சில கோளாறு பிடித்தவர்களால் , மறைமுகமாக தயாரிக்கப்பட்டு இன்னும் மறைமுகமாக வெளியிடப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன .
ஹெராயின் – உங்களுக்கெல்லாம் மார்பினைப்பற்றி ஓரளவு தெரியும் என நினைக்கிறேன் . அபினிச்செடியிலிருந்து உருவாக்கப்படும் ஒருவகை வலிநீக்கி தான் மார்பைன் . மார்பைன் கண்டுபிடிக்கப்பட்ட காலங்களில் , அது மிகச்சிறந்த வலிநீக்கியாக பயன்படுத்தப்பட்டது . ஆனால் , மார்பைனைத்தொடர்ந்தாற்போல் ஒருமாதம் பயன்படுத்துபவர்கள் அதற்கு அடிமையாகும் நிலை ஏற்பட்டது . அதனால் அடிமைப்படுத்தும் திறனற்ற மார்பைனை உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டனர் . இந்நிலையில் 1898-ல் ,  ஹெயின்ட்ரிக் டிரெசர் எனும் ஜெர்மானிய விஞ்ஞானி , மலிவாகவும் மிக எளிமையாகவும் கிடைக்கும் அசிட்டிக் ஆன்ஹைரட் எனும் புதிய ரசாயணப்பொருளை உருவாக்கினார் . இம்மருந்து  உட்கொள்பவர்களுக்கு , தங்களை ஒரு ஹீரோ (கதாநாயகன்) போல் காட்சிப்படுத்திக்கொள்ள , இம்மருந்து தூண்டிவிட்டது . அதாவது படத்தில் வரும் அதிரடியான கதாயநாயகர்கள் போன்ற உணர்வு , உடலில் தூண்டப்பட்டது . இதன்காரணமாகத்தான் இதற்கு ஹெராய்ன் (HEROIN) என பெயர்பெற்றது . பயன்பாட்டிற்கு வந்ததும் , இம்மருந்து விஞ்ஞானிகளால் ஆஹோ , ஓஹோவென புகழப்பட்டது . மார்பைன் அடிமைகள் எல்லாம் இம்மருந்தினை உட்கொண்டு , மார்பைன் பழக்கத்திலிருந்து வெளிக்கொண்டுவரப்பட்டார்கள் . மேலும் சக்திவாய்ந்த வலிநீக்கியாகவும் இது பயன்பட்டது . ஆனால் , நாட்கள் செல்ல செல்லதான் தெரிந்தது . மார்பைனைக்காட்டிலும் பெரும் அடிமைத்தனத்தை உண்டாக்கும் பொருள் ஹெராய்ன்தான் என்று . இதன் அடிமைப்படுத்தும் திறனும் சக்தியும் எந்தளவிற்கு என்றால் , இறந்த பிணம்போல் ஆனவர்களைக்கூட மீண்டெழவைத்து புத்துணர்ச்சியுடன் உலாவவிடும் திறன் படைத்தது . இதை உபயோகிப்பவர்கள் , இதன் SHOT உடலில் கிடைப்பதை , உடலுறவின் உச்சநிலையில் கிடைக்கும் சுகத்துடன் ஒப்பிட்டார்கள் . ஒருவேளை ஒருவர் இம்மருந்திற்கு அடிமையானபின் , இவை கிடைக்கவில்லை எனில் முதல் 6 மணிநேரத்திற்கு மனதளவில் கஷ்டப்பட்டு கிடப்பார்கள் . எந்தவொரு செயலும் செய்யமுடியாத நிலைக்குத்தள்ளப்படுவார்கள் . அடுத்த 8 மணிநேரத்தில் அமைதியின்மை , வியர்த்தல் , கண்களில் நீர்வடிதல் போன்ற உடல்சார்ந்த உபாதைகள் ஏற்படும் .அடுத்த 10 மணிநேரத்திற்குள் பசியின்மை , உடல்நடுக்கம் , உடல்முடிகள் ஒருவித சிலிர்ப்பாக விரைத்து நிற்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படும் . ஒருநாள் முழுமையும் உட்கொள்ளப்படாத பட்சத்தில் , தூக்கமின்மை , வாந்தி , வயிற்றுப்போக்கு , பலமின்மை , மனச்சோர்வு போன்றவை ஏற்படும் . மூன்று நாட்கள் ஆனால் , கடும் வயிற்றுவலி , தசைவலி , உடல்நடுக்கம் ஆகியவை ஏற்படும் . தொடர்ந்தாற்போல் உடல்வெப்பம் , இளைப்பு வாங்குதல் ஆகியன ஏற்பட்டு , உடல்நிலை மிகமோசமானதொரு நிலைக்குத்தள்ளப்படும் . மேலும் கோகைனுடன் ஹெராயின் கலந்து எடுத்துக்கொள்ளப்படும் SPEEDBAL என்றமுறையினால்  , இந்த பிரச்சனைகள் மேன்மேலும் அதிகரிக்கும் . கொகைனை பெரும்பாலும் உடலுறவு போன்றவற்றிற்கு பயன்படுத்துவார்கள் . உடலுறவின்போது பிறப்புறுப்புகளில் கொகைனைத்தடவிக்கொள்வதன்மூலம் அதிகசுகம் கிடைக்கும் என்ற தவறான நம்பிக்கைக்கூட நிலவி வருகிறது . ஆனால் முடிவு என்னவோ , முழுமரணம் மட்டும்தான் . அதுவும் நாறிப்போன உடலுடன் , கூவத்தில் திரியும் பன்றியின் இறப்பைப்போல கொடூரமானதாக இருக்கும் . (கஞ்சா பற்றிய கட்டுரையை நம் தளத்தில் ஏற்கனவே படித்திருப்பவர்கள் , இப்போதை மருந்துகளால் ஏற்படும் விளைவுகளைத் தெரிந்து வைத்திருப்பீர்கள் . படிக்காதவர்கள் இங்கே அழுத்தி படிக்கவும் .)
சரி , இப்போது படத்திற்கு வருவோம் . படமானது , பருவநிலைகளைக்கொண்டு தொடங்குகிறது . SUMMER- ல் துவங்கும் திரைப்படம் , FALL – ல் முடிகிறது . சாரா எனும் வயதான பெண்மணி , ஒரு தொலைக்காட்சித்தொடருக்கு அடிமையாக இருக்கிறாள் . இவளுடைய ஆசையே அந்த தொடரில் கலந்துகொண்டு டீ.வியில் தன் மகனோடு வரவேண்டும் என்பதே . அவளுடைய மகன் ஹாரியோ , ஹிப்பி மாதிரியான கலாசாரத்தில் வாழவிரும்புகிறான் . தான்தோன்றித்தனமாக சுற்றிக்கொண்டு , போதைப்பொருட்களை விற்றுவருகிறான் . அவனுடைய நண்பன் டைரோன் மற்றும் ஹாரியின் காதலி மரியான் சில்வர் ஆகிய இருவரும் அவனுடன் இருக்கிறார்கள் . அவர்களுக்குத்தேவை , பணம் , போதைமருந்துகள் . ஒருகட்டத்தில் அவர்களின் வியாபாரம் சூடுபிடிக்கிறது . நன்கு பணம் சம்பாதிக்கிறார்கள் , ஜாலியாக போதைப்பொருட்களை உபயோகித்துக்கொண்டு இருக்கிறார்கள் . இன்னொருபக்கம் , சாராவுக்கு அத்தொலைக்காட்சி தொடரில் இருந்து , கலந்துகொள்வதற்கான அழைப்பு வருகிறது . அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக , மகனின் பட்டமளிப்பு விழாவிற்கு உடுத்திச்சென்ற ஒரு சிவப்பு நிறக்கவுனை அணிந்நதுகொள்ள முடிவெடுக்கிறாள் . ஆனால்  , இவள் கொஞ்சம் பெருத்திருப்பதால் டயட்டில் இறங்குகிறாள் . என்னதான் கட்டுப்படுத்தினாலும் , டயட்டை முழுமையாக வெற்றியடையச் செய்யமுடியாமல் தவிக்கிறாள் . அதனால் தன் தோழிகளிடம் உதவி கேட்க , அவர்களில் ஒருத்தி , ஒரு மருத்துவரை பரிந்துரைக்கிறாள் . அங்கு அவளுக்கு பசியைத்தடுப்பதற்காக ஆம்ஃபீடமைன் தரப்படுகிறது . ஒருமுறைத்தாயை பார்க்கவரும் ஹாரி , இம்மருந்தை எடுத்துக்கொள்ளவேண்டாம் என கூற , அவளோ மறுக்கிறாள் .

இன்னொருபுறம் ஹாரியின் நண்பன் டைரோன் , போதைமருந்துக்கும்பலுடன் போலிசில் மாட்டிக்கொள்கிறான் . FALL ஆரம்பமாகிறது . இருக்கும் பணத்தையெல்லாம் கட்டி , அவனை ஹாரி மீட்டெடுக்கிறான் . அதன்பின் இவர்களின் கையிருப்பில் பணமும் இல்லாமல் ,அவர்களின் உபயோகத்திற்கு மருந்தும் இல்லாமல் தவிக்கும்நிலை ஏற்படுகிறது . அந்நிலையில் ஹாரியும் டைரோனும் எங்கெங்கோ அலைந்தும் போதைப்பொருட்கள் கிடைக்காமல் திரும்புகின்றனர் . மருந்துக்கு அடிமையாகியிருந்த மரியானோ , ஹாரியிடம் சத்தம் போட , பணத்திற்கு அவன் ஒரு ஐடியா கொடுக்கிறான் .

சாராவுக்கு மனம் பிறழ ஆரம்பிக்கிறது . பிரிட்ஜைப்பார்த்து பயப்படுகிறாள் . அவளின் மனநிலை நாளுக்குநாள் மோசமாகிறது . அவளுடைய ஆசை , தன் மகனுடன் அந்த டீ.வி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவேண்டும் என்பதே . என்னசெய்வதென்று தெரியாமல் மாத்திரைகளை அளவுக்கதிகமாக உட்கொள்ள ஆரம்பிக்கிறாள் .

பணத்திற்காக , மரியானை ஜொள்ளுவிட்டுக்கொண்டிருக்கும் ஒரு டாக்டரிடம் சென்று உதவிகேட்குமாறு அனுப்பிவைக்கிறான் . அந்த டாக்டரோ என்னுடன் படுத்தால் மட்டுமே பணம் தருவேன் என்று கூற , அதற்கும் சம்மதிக்கிறாள் . மனம் முழுதும் வலியுடன் , அந்த பணத்தை வாங்கிக்கொண்டு ஹாரியைத்தேடி வருகிறாள் . ஹாரி அந்த பணத்தைக்கொண்டு , வெளியூருக்குச்சென்று போதைப்பொருள் வாங்க நண்பனுடன் கிளம்புகிறான் . பொருளும் கிடைக்க , போதை ஊசியாக அவனுக்கு அவனே போட்டுக்கொள்கிறான் . அவனுடைய கையில் போதை ஊசி போட்டு போட்டு இன்பெக்சன் ஆகிவிடுகிறது . இருந்தாலும் அதிலே மீண்டும் மீண்டும் போட்டுக்கொள்கிறான் .

சாராவுக்கு இன்னும் அழைப்பு வரவில்லை என்ற நிலையில் , அவளே அந்த தொலைக்காட்சி நிறுவனத்திற்கு நேரில் செல்கிறாள் .எனக்கு ஏன் அழைப்பு வரவில்லை என கேட்கிறாள் . அவளின் தோற்றமும் செயல்பாடும் விசித்திரமாய் இருக்க , அங்கிருப்பவர்கள் மருத்துவமனைக்கு போன் செய்து அங்கே அனுப்பிவிடு்கிறார்கள் .

ஹாரிக்கு கையில் பயங்கரமாக வலியெடுக்க , அதேநேரம் போலிஸ் அவர்கள் இருவரையும் கைதுசெய்கிறது . இன்னொருபுறம் மரியானோ போதைப்பொருட்கள் ஏதும் கிடைக்காமல் தவிக்க , அவளுக்கு ஹாரி சொன்ன ஒருவனின் நியாபகம் வருகிறது . அவனோ , படுத்தால் போதைப்பொருள் தருகிறேன் என்று கூறுகிறாள் . மனதில் ஹாரியைக்காதலித்துக்கொண்டிருக்கும் அவள் அடுத்து என்ன செய்தாள் ?

எப்படியாவது தொலைக்காட்சித்தொடரில் வந்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த சாராவின் நிலை என்ன ?

காதலிப்பவளை நினைத்து ஜெயிலில் , கைமுழுதும் வலியுடன் தவித்துக்கொண்டிருக்கும் ஹாரியின் நிலை என்ன ?

தன் தாயின் அணைப்பை ஒருமுறையாவது உணரவேண்டும் என்று வாழ்நாள் முழுதும் ஏங்கிக்கொண்டிருக்கும் டைரோனின் நிலை என்ன ?

போன்றவற்றை மனம் கனக்க சொல்லிமுடித்திருக்கிறார் டேரன் . என்னைப்பொறுத்தவரை போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வில் முதலிடம் இப்படத்திற்கே தருவேன் . விழிப்புணர்வு மட்டுமில்லாமல் ,  படத்தின் உருவாக்கம் , கேமரா ஆங்கில் , எடிட்டிங் , இசை என அத்தனைத்துறைகளும் மிகச்சிறப்பாக செய்யப்பட்டிருக்கும் படம் .  பொதுவாக ஒரு படத்திற்கு 700 ஷாட்கள் வரை எடுப்பார்கள் . ஆனால் இப்படத்திற்கு 2000 ஷாட்கள் எடுக்கப்பட்டிருக்கும் . இது ஒரு நாவலின் அடாப்ஷன் . ஆனால் , ஒரு நாவலை எப்படி படமாக்கவேண்டும் என்பதற்கு ஒரு பாடம் இது . ஒவ்வொரு காட்சியும் அழகியல்ரசனை மிளிர்கிறது . டேரனின் படங்களை நன்கு கவனித்தால் , கிளைமேக்ஸ் வரப்போகிறது என்பது இசையை வைத்தே கணக்கிடலாம் . கடைசி 15 நிமிடத்தில் , அதுவரை தென்றாலக ஓடிக்கொண்டிருக்கும் இசை , புயல்போல ஹைபிட்சுக்கு மாறும் . இந்த படமும் அதேரகம் தான் . டி.வி சீரயலுக்கெல்லாம் யாராவது அடிமையாவார்களா என்றெல்லாம் என்னிடம் கேட்காதிர்கள் . உங்கள் வீட்டில் நீங்களே பலமுறை நாடகம் ஓடும்போது மாற்றி  , வீட்டிலுள்ளவர்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்டிருப்பீர்கள் .

இப்படத்தின் கேரக்டர்கள் யாரும் கெட்டவர்கள் இல்லை . ஹீரோவுக்கு தன்னை நம்பினோர்களை நல்லபடியாக காக்கவேண்டும் . ஹீரோவின் நண்பணுக்கு தன் தாயை நினைத்தே உருகும் ஆள் . காதலி மரியானுக்கு உலகமே காதலன் தான் . சாராவுக்கு மகனும் கணவனும் தான் எல்லாம் . கணவன் இறந்துவிட்டதால்தன் முழுபாசத்தையும் மகன்மீது வைத்திருந்தாள்.  

சரி , இப்படத்தின் டெக்னிக்கல் ரீதியான விஷயங்கள் , டேரனின் உழைப்பு , நடித்தவர்கள் , நாவல் பற்றியெல்லாம் வேறேதேனும் தொடரில் பார்ப்போம் .

மொத்தத்தில் , விழிப்புணர்வு என்பது ஒரு மூலையில் கிடக்கட்டும் . சாதரணமாகவே இப்படம் ஒரு வித்தியாசமான அனுபவத்தைக்கொடுக்கும் . பரபர திரைக்கதை , அட்டகாசமான விஷுவல்கள் , மனித பிம்பத்தின் காட்சிப்படுத்தல் என ஒரு அருமையான படம் இது . நன்கு குறித்துக்கொள்க , இது ஒரு 18+ படம் . படத்தின் CENSORED VERSION கிடைத்தால் வீட்டிலுள்ளவர்களுடன் பார்க்கலாம் . ஏனென்றால் இந்த படம் எல்லோரும் முக்கியமாக இளைஞர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய படம் .

தொடர்புடைய இடுகைகள்
உங்கள் விருப்பம்

10 comments:

 1. நானெல்லாம் சினிமா பார்கிறேனோ இல்லையோ தங்களது விமர்சனம் மூலம் பார்க்கிறேன் அருமை.
  தமிழ் மணம் 2

  ReplyDelete
  Replies
  1. ஆஹா ! இப்படியாச்சாம் உங்கள சினிமா பாக்க வைக்கறத நினைச்சி சந்தோஷமா இருக்குங்ணா !

   Delete
 2. இம்முறையும் போதைப் பொருள் விவரம் நீண்டு விட்டது ..ஒரு சந்தேகம் போதைப் பொருட்கள் சம்பந்தமா P.hd ஏதும் பண்றீங்களா :)
  த ம 1

  ReplyDelete
  Replies
  1. அப்படியெல்லாம் இல்லைங்ணா ! ட்ரக்ஸ் பற்றி கொஞ்சம் படித்திருக்கிறேன் . அவ்வளவே !! நன்றி அண்ணா .

   Delete
 3. thangalathu vimarsaname oru nalla thiraippadam parthathupol ullathu

  ReplyDelete
  Replies
  1. ஓ ! ரொம்ப நன்றிங்க தல !

   Delete
 4. ஆங்கில படங்களில் பல போதை பொருள் பற்றிய படங்கள்தான் அதிகம் வந்திருக்கின்றன.. அந்த வரிசையில் இந்தப்படமும் என்று நிணைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. போதைப்பொருட்களைப்பற்றிய படமென்றாலும் , இது கொஞ்சம் ஸ்பெசல் தாக்கம்னு சொல்லலாம்ணா . காரணம் , வெறும் விழிப்புணர்வு மட்டுமில்லாம , அட்டகாசமான படமா இருக்கும்.

   Delete
 5. வல்லமை வாய்ந்த இப்படத்தை அனைவரும் பார்பதோடு நில்லாமல்..................

  திருந்த வேண்டும் எனும் நினைப்பே முதல் வெற்றி...

  ReplyDelete